முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, August 15, 2015

ஆக.15 முதல் பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

No comments :


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிப்பது தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் நந்தகுமார் தலைமையில் நடந்தது. வருவாய்த்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அலுவலர், கல்வித்துறை, பேரூராட்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கலெக்டர் பேசுகையில், ‘‘ஒரே ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக், தெர்மாக்கோல் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

பிளாஸ்டிக்கால் நிலத்தடி நீராதாரம் குறையும். பிளாஸ்டிக்கை எரிப்பதால் வெளிவரும் நச்சு வாயு நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் ஏற்படும். பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு நடத்த வேண்டும். வணிக நிறுவனங்கள், கடைகளில் பிளாஸ்டிக் பையை தவிர்த்து காகிதம், துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும். நாளை ஆக.15 முதல் பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 


மீறி பிடிபட்டால் இரண்டு முறை அபராதம் அதன் பிறகும் பயன்படுத்தினால் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். அனைத்து பேரூராட்சி பகுதிகளிலும் பிளாஸ்டிக் இல்லாத நிலையை ஏற்படுத்த அனைத்துத்துறை அலுவலர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும். பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் ராமநாதபுரம் எஸ்.பி மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர் அலி அக்பர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) பாலமுருகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் ஆதார் எண்ணை வெப் பே ரோல்லில் இணைக்க வேண்டும் -கலெக்டர் நந்தகுமார்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் ஆதார் எண்ணை வெப் பே ரோல்லில் இணைக்க வேண்டும் என கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர்  விடுத்துள்ள அறிக்கை, ‘‘ மாவட்டத்தில உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் தாங்கள் ஊதியம் பெறும் அலுவலகங்களில் ஆதார் எண்ணை வெப் பே ரோல்லில் அப்டேட் செய்ய வேண்டும். ஓய்வூதியர்கள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூலங்களில் கொடுத்து இபென்ஷன் சாப்ட்வேரில் அப்டேட் செய்ய வேண்டும். 


ஓய்வூதியருக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு அட்டை இதுவரையில் பெறாதவர்கள்  சம்பந்தப்பட்ட கருவூலத்தில் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தீன் கீழ் தங்களை இணைத்துக் கொள்ளாதவர்கள் உரிய படிவத்தினை வழங்கி புதிய மருத்துவக் காப்பீட்டு அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். இதுவரை 2015ம் ஆண்டிற்கான நேர்காணலுக்கு வராதவர்கள் ஆக.20ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கருவூலத்தில் நேரில் ஆஜராக வேண்டும். ஆஜராகாத பட்சத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

69வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றினார் முதல்வர் ஜெயலலிதா.!!

No comments :
69வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் சனிக்கிழமை காலை தேசிய கொடியை ஏற்றினார் முதல்வர் ஜெயலலிதா.



அதனைத் தொடர்ந்து பேசிய அவர், 

அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த அனைத்து வீரர்கள் மற்றும் தலைவர்களை நினைவு கூறுவதற்காக இந்த நாளை நாம் கொண்டாடி வருகிறோம். சுதந்திரத்தின் அச்சாணியாக விளங்குவது பொருளாதார சுதந்திரம். ஏற்றத்தாழ்வு இல்லாத நிலையே உண்மையான சுதந்திரம். அனைவருக்கும் தேவையான வாழ்வாதாரம் கிடைப்பதே உண்மையான சுதந்திரம். 

கடந்த 4 ஆண்டுகளில் 54 கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஏழைகளுக்கு ஏற்றம் தரும் கல்விக்கு தமது அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் 72,843 ஆசிரியர்கள் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 182 ஆரம்ப பள்ளிகள் கடந்த 4 ஆண்டுகளில் தொடங்கப்பட்டுள்ளன. 

4 ஆண்டு ஆட்சியில் நாலாபுரமும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மனின் வழிதோன்றல்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1000லிருந்து ரூ.5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1000 லிருந்து ரூ.11,000 ஆக உயர்த்தப்பட உள்ளது. இவ்வாறு சுதந்திர தின உரையில் பேசினார்.




பத்தாம் வகுப்பு தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு துணை தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டு உள்ள அரசு தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.


வருகிற 17–ந்தேதி முதல் 26–ந்தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். முந்தைய பருவங்களில் தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள், அவர்கள் விருப்பப்பட்ட பாடங்களில் தற்போது தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

அறிவியல் பாடத்தில் செய்முறை தேர்வில் தேர்ச்சி பெற்று அறிவியல் கருத்தியல் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மட்டுமே கருத்தியல் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். செய்முறை தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிப்பு பெற்றவர்களும் அறிவியல் கருத்தியல் தேர்வினை தற்போது எழுதலாம்.


2014–15–ம் கல்வியாண்டில் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு 80 சதவீதம் வருகையுடன் பயிற்சி பெற்றவர்கள் அனைத்து பாடங்களிலும் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். இந்த வகை தேர்வர்கள் 1.10.2014 அன்று 14½ வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மெட்ரிக் அல்லது ஆங்கிலோ இந்திய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி தோல்வியுற்றவர்கள் தற்போதுள்ள சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படுவதால் அறிவியல் செய்முறை பயிற்சி பெற்றவர்கள் செய்முறை தேர்வு உள்பட அனைத்து பாடங்களையும் திரும்ப எழுத வேண்டும். அறிவியல் பயிற்சி பெறாதவர்கள் கருத்தியல் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்ய கல்வி மாவட்ட வாரியாக அரசுத்தேர்வுகள் சேவை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தனித்தேர்வர்கள் இந்த மையங்களுக்கு சென்று தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.


வெளிமாநில, வெளிநாடு வாழ் தனித்தேர்வர்கள் நேரடியாக சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்க இயலாத சூழ்நிலையில் உரிய ஆவணங்கள் மற்றும் புகைப்படத்துடன் குடும்ப உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் மூலம் சென்னை அரசு தேர்வுகள் இயக்கக இணை இயக்குனர் பணியாளர் அலுவலகத்தில் குறிப்பிட்ட நாளுக்குள் நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம். வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் படித்து தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் இடப்பெயர்வு சான்றிதழ், இணைச்சான்றிதழ் பெற்று சமர்ப்பித்தபின் அரசுத்தேர்வுகள் சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.


தேர்வுக்கட்டணம்
தேர்வுக்கட்டணம் ரூ.125 மற்றும் பதிவுக்கட்டணம் ரூ.50–ம் சேர்த்து ரூ.175 பணமாக செலுத்த வேண்டும். பார்வையற்றோருக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், டிஸ்லெக்சியா, நரம்பியல் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட தேர்வர்கள் தாங்கள் சொல்வதை எழுதுபவர், கூடுதலாக ஒரு மணி நேரம் போன்ற குறிப்பிட்ட சலுகைகளை பெற விரும்பினால் உரிய மருத்துவ சான்றிதழ்களை இணைத்து தனியே ஒரு சலுகை கோரும் கடிதத்தை தமது விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 

தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்த பிறகு தனித்தேர்வர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அரசு தேர்வு மையங்களில் விண்ணப்பத்தினை பதிவுசெய்யும்போது ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பாடங்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல் அல்லது 8–ம் வகுப்பு தேர்ச்சி, 9, 10–ம் வகுப்பு படித்ததற்கான மாற்றுச்சான்றிதழின் சுய சான்றொப்பமிட்ட நகல், அல்லது 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றமைக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ், அறிவியல் பாட தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் செய்முறை பயிற்சி முடித்ததற்கான அத்தாட்சி சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்று இணைக்க வேண்டும். மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் தேர்வு எழுதி தோல்வியுற்றவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அரசு தேர்வுகள் சேவை மையங்களில் ஒப்படைக்க வேண்டும். 

இத்தகைய இணைப்புகளை சமர்ப்பிக்கும் தனித்தேர்வர்களின் விண்ணப்பங்களே ஏற்றுக்கொள்ளப்படும். இணைப்பு இல்லாத விண்ணப்பங்கள் மற்றும் தபால் மூலம் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்த தகவலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு தெரிவித்தார்.


பூரண மதுவிலக்கு கோரி ராமநாதபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி உண்ணாவிரத போராட்டம்!!

No comments :
பூரண மதுவிலக்கு கோரி ராமநாதபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மாவட்ட தலைவர் குட்லக் ராஜேந்திரன் ஏற்பாட்டின்பேரில் 11 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் நகரில் அரண்மனை பகுதியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு நகர் தலைவர் கோபி தலைமை தாங்கினார். இதில் செல்லத்துரை அப்துல்லா, முத்துராமலிங்கம், மாவட்ட தலைவர்கள் காமராஜ், நிஜாம்அலிகான், மேகநாதன், நசுருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மீனவர் அணி செயலாளர் பாம்பன் ஆர்ம்ஸ்ட்ராங், மாவட்ட பொது செயலாளர்கள் பால்சாமி, கருப்பையா, மீன்கடை முருகேசன், கருணாகரன், வீரசேகரன், வீரபாண்டி, ஆறுமுகம், பாஸ்கரசேதுபதி, வக்கீல் அன்புசெழியன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், வட்டார தலைவர் காருகுடி சேகர், பாராளுமன்ற பொதுச்செயலாளர் நேரு உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட தலைவர் குட்லக் ராஜேந்திரன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.



பரமக்குடி
பரமக்குடி நகர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஐந்துமுனை பகுதியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு நகர் தலைவர் அப்துல் அஜீஸ் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் பாம்பூர் வேலுச்சாமி, ராம்சுபாக் சிங், முனீசுவரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் பொது செயலாளர் கோபிநாத் வரவேற்று பேசினார். இதில் டாக்டர் பாலகிருஷ்ணன், மாவட்ட பொது செயலாளர்கள் கிருஷ்ணராஜ், கணேசன், கோட்டைமுத்து, மாவட்ட துணை தலைவர்கள் ஆலம், மகாதேவன், கோவிந்தராமன், மாரிமுத்து, பார்த்திபனூர் நகர் தலைவர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நயினார்கோவில் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு வட்டார தலைவர் ஜோதிபாலன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் செந்தாமரைக்கண்ணன், ஆதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில பேச்சாளர் வீரபத்திரன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் போஸ், கோட்டைமுத்து, நிர்வாகிகள் நாராயணன், ஹரிகரன், ராஜேஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு நகர் தலைவர் சுரேஷ்காந்தி தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் போஸ், நவநீதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொது செயலாளர் திருமூர்த்தி வரவேற்று பேசினார். இதில் மாநில பொதுச் செயலாளர் மலேசியா பாண்டியன், முன்னாள் மாவட்ட தலைவர் பூவலிங்கம், மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் சரவணாகாந்தி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் வேலுச்சாமி, கீழக்கொடுமலூர் கணேசன், தலைமை கழக பேச்சாளர் கருணாகரன், ஆலம் ஆகியோர் பேசினர்.

சாயல்குடி
இதேபோல சாயல்குடியில் நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மாவீரன் வேலுச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி செயலாளர் சுசிலா மனுவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மக்கண் அமிர்தம் கல்லூரி தாளாளர் ரமணி பாண்டியன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். இதில் வட்டார தலைவர் பிரமநாதன், மாவட்ட செயலாளர் போஸ், நரிப்பையூர் சுலைமாடன், மாவட்ட செயலாளர் சண்முகவேல், லட்சுமணன், அழகுவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடலாடி
கடலாடி பஸ் நிலையம் அருகே நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு வட்டார தலைவர்கள் கருங்குளம் தனசேகரன், ஆப்பனூர் சுப்பிரமணிய சேர்வைக்காரர் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட துணை தலைவர் முத்துத்தேவர் முன்னிலை வகித்தார். இதில் ஆப்பனூர் ராமகிருஷ்ணன், சிக்கல் அமீன், ஏர்வாடி கரீம், சிறைக்குளம் செல்வராஜ், பழனி, சக்திவேல், தனிக்கொடி, புண்ணியவேல், பாண்டி, கூரிக்கிழவன், பச்சமால், நீலமேகம், முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவாடானை
திருவாடானையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வட்டார காங்கிரஸ் தலைவர்கள் குமார், தட்சிணாமூர்த்தி, நகர் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வக்கீல் பிரிவு துணை தலைவர் கண்ணன் வரவேற்று பேசினார். உண்ணாவிரதத்தை மாவட்ட காங்கிரஸ் தலைவர் குட்லக் ராஜேந்திரன் தொடங்கி வைத்து பேசினார். இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் முருகானந்தம், கோடனூர் கணேசன், தொண்டி தியாகராஜன், மாவட்ட பொது செயலாளர்கள் நம்புதாளை பிச்சைக்கண்ணு, எட்டுகுடி மரியஅருள், சேந்தனி சத்தியேந்திரன், ஜெயபாண்டி, விவசாய பிரிவு தலைவர் உதயக்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை தலைவர் அஜீஸ், அஞ்சுகோட்டை ராமநாதன், துரை கதிர் கார்த்திகேயன், முன்னாள் ஊராட்சி தலைவர் மருதுபாண்டியன், முன்னாள் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் வாணியேந்தல் மகாலிங்கம், தொண்டி நகர் தலைவர் காத்தராஜா, நகர் செயலாளர் காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர் செயலாளர் தட்சிணாமூத்தி நன்றி கூறினார்.

கீழக்கரை
கீழக்கரையில் இந்து பஜா£ரில் நகர் தலைவர் ஹமீதுகான் தலைமையிலும், கமுதியில் தலைவர் கோவிந்தன் தலைமையிலும், அபிராமத்தில் நகர் தலைவர் அருணாசலம் தலைமையிலும், திருப்பாலைக்குடியில் தாலுகா தலைவர் முருகன் தலைமையிலும் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தி: தினத்தந்தி