முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, March 31, 2016

இராமநாதபுரம் அருகே 5 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானவர் கொல்லப்பட்டது கண்டுபிடிப்பு!!

No comments :
5 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானவர் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொன்று புதைக்கப்பட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. கீழக்கரை டிஎஸ்பி மஹேஸ்வரி தலைமையிலான போலீஸ் விசாரணையில் துப்பு துலங்கியது. 


ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே களரிகண்மாய் பகுதியில் ஆலங்குளம் ஊராட்சியின் சார்பில் நீர்வள நிலவளத்திட்டத்தின்கீழ் கண்மாய் வரத்துகால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்றது. இந்த கால்வாயில் மண் அள்ளியபோது கரைபகுதியில் என்ஜின் இல்லா பதிவு செய்யப்படாத புத்தம்புதிய மோட்டார்சைக்கிள் இருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த வழக்கில் எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவின் பேரில் கீழக்கரை டி.எஸ்.பி. மகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அந்த‌ இடத்தில் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிளின் முக்கிய மையப்பகுதியில் பதிவாகி இருந்த தயாரிப்பு எண்ணின் அடிப்படையில் விசாரித்தபோது அது இதம்பாடல் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவருடைய மகன் தர்மர்(வயது40) வாங்கிய மோட்டார்சைக்கிள் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் சென்று மீண்டும் தோண்டி பார்த்தபோது தர்மரின் கைப்பை கிடைத்தது. அதில் இருந்த தகவல்களின் அடிப்படையில் தர்மர் குறித்த முழு விவரங்கள் தெரியவந்தன. கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி புதிய மோட்டார்சைக்கிளில் வெளியில் சென்ற தர்மர் மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவருடைய தங்கை யசோதை அளித்த புகாரின் அடிப்படையில் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். தர்மருக்கு திருமணமாகி பாண்டியம்மாள் என்ற மனைவியும், தர்மபார்த்தசாரதி என்ற மகனும், கார்த்தீஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.


பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த தர்மர் கடந்த 2010-ம் ஆண்டுதான் சொந்த ஊருக்கு வந்து குடும்பத்துடன் தங்கியுள்ளார். தர்மர் குறித்த விவரங்கள் போலீசாருக்கு தெரியவந்த நிலையில் மனைவி பாண்டியம்மாள் மற்றும் இதம்பாடல் பகுதியை சேர்ந்த பசுமலை என்பவருடைய மகன் அரசு பஸ் கண்டக்டர் முருகேசன்(45) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து  டிஎஸ்பி மஹேஸ்வரி தலைமையிலான போலீசார் தீவிர போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் முருகேசனுக்கும் பாண்டியம்மாளுக்கும் பழக்கம் உள்ள தகவல் தெரியவந்தது.  இந்த பழக்கம் குறித்து அறிந்த தர்மர் பலமுறை 2 பேரையும் கண்டித்துள்ளார். இதுதவிர, முருகேசன் தனது தம்பி அழகர்சாமியை பாண்டியம்மாளின் மகள் கார்த்தீஸ்வரிக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதுவும் தர்மருக்கு

பிடிக்கவில்லையாம். இதன்காரணமாக தர்மருக்கும் முருகேசனுக்கும் விரோதம் முற்றியது. தனது கள்ளக்காதல் உள்ளிட்டவற்றிற்கு இடையூறாக இருப்பதால் தர்மரை தீர்த்துக்கட்ட முருகேசன் திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக வெளியூரை சேர்ந்த தனது நண்பர்களுடன் சேர்ந்து தர்மரை தீர்த்துக்கட்ட சமயம் பார்த்து காத்திருந்துள்ளார்.

இந்தநிலையில் தர்மர் புதிய மோட்டார்சைக்கிளில் செல்வதை அறிந்து தனது கூட்டாளிகளுடன் சென்று மடக்கி ஆலங்குளம் கண்மாய் பகுதிக்குள் கொண்டு சென்று தாக்கி கொலை செய்துள்ளனர். இதன்பின்னர் மோட்டார்சைக்கிள் மட்டும் தனியாக கிடந்தால் தர்மரை கொலை செய்தது தெரிந்துவிடும் என்பதால் அதனை என்ஜின் இல்லாமல் மண்ணை தோண்டி புதைத்து வைத்துள்ளனர். இதன்பின்னர் தர்மரின் உடலை கொண்டு சென்று இதம்பாடல் அருகே உள்ள பெரியஇழை பஸ்நிறுத்தம் பகுதியில் பெரியகண்மாய் பகுதிக்குள் குழிதோண்டி புதைத்துள்ளனர். மோட்டார்சைக்கிளுடன் தர்மர் குடும்பத்தை விட்டு எங்கோ சென்றுவிட்டதாக ஊராரை நம்ப வைத்துள்ளனர்.

இதன்பின்னர் முருகேசன் தனது கள்ளத்தொடர்பை எந்தவித இடையூறும் இல்லாமல் தொடர்ந்து வந்துள்ளார். இதுகுறித்த தகவல்களை போலீசாரிடம் முருகேசன் தெரிவித்ததை தொடர்ந்து கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரி, ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்பாண்டி உள்ளிட்ட போலீசார் முருகேசன் மற்றும் பாண்டியம்மாளை அழைத்து கொண்டு தர்மர் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்றனர். அங்கு தாசில்தார் கோவிந்தன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் முன்னிலையில் தர்மரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. முற்றிலும் மட்கிய நிலையில் ஒருசில சிறிய எலும்பு துண்டுகள் மற்றும் நைலான் கயிறு மட்டும் கிடைத்தது. இதன்படி தர்மரின் கழுத்தை இறுக்கி கொலை செய்திருக்கலாம் என்றும், அல்லது கொலை செய்து கை,கால்களை கட்டி  புதைத்திருக்கலாம் என்றும் போலீசார் விசாரணையில் தெரிய வந்ததது.


இதனை தொடர்ந்து அரசு டாக்டர்கள் மூலம் அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து இக்கொலை தொடர்பாக முருகேசன் கைது செய்யப்பட்டார். மாயமானதாக கூறப்பட்டவர் கொலை செய்யப்பட்ட விவரம் 5 ஆண்டுகளுக்கு பின்னர் தெரியவந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கண்மாய் வரத்துக்கால்வாயை மராமத்து செய்தபோது மோட்டார்சைக்கிள் கிடைத்ததாலும் எஸ்பி உத்தரவில் டிஎஸ்பி மஹேஸ்வரி தலைமயிலான போலீசாரின் தொடர் விசாரணையினால‌ இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இல்லாவிட்டால் 5 ஆண்டுகளாக மாயமானதாக கூறப்பட்ட தர்மர் கடைசிவரை மாயமாகியே இருந்திருப்பார்.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களுக்காக புதிய எப்.எம்.!!

No comments :

ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கடலில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்துகொள்ளும் வகையில் கடல் ஒசை எப்.எம் புதிய வானொலி நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளது என தனியார் அறக்கட்டளை நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

இது குறித்து கடல் ஒசை எப்.எம் வானொலி நிலைய இயக்குநர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கூறியது: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் நேசக்கரங்கள் தனியார் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில், கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழச்சிகளை நடத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பயன் பெறும் வகையில் பாம்பன் பகுதியில் கடல் ஒசை எப்,எம் வானொலி நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளது.



இந்த வானொலி மூலம் கடலில் ஏற்படும் சுனாமி, புயல், நீரோட்டம், கடல் சீற்றம் கடலில் மீனவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை சந்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தல், அரசு அறிவிப்புகளையும் பொதுமக்களிடம் பகிர்ந்து கொள்ளவும்,வேலைவாய்ப்பு செய்திகளை பற்றி தெரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வானொலியின் தொலை தொடர்பை 15 கடல் மைல் தொலைவு வரை பயன்படுத்தலாம். இந்த வானொலி நிலையம் ஏப்ரல் மாதம் திறக்கப்படவுள்ளது என அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது அறக்கட்டளையின் செயலாளர் குணசேகரன், பொருளாளர் அப்துல்காதர் மற்றும் நம்புசேகரன் ராமநாதன், அருள்ரோச் ஆகியோர் கலந்துகொண்டனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமேசுவரம் கோயில் உண்டியல் வசூல் ரூ.68 லட்சம்!!

No comments :

ராமேசுவரம் கோயில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரொக்கமாக ரூ.68 லட்சத்துக்கு மேல் கிடைத்திருந்தது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள உண்டியல்களை திறந்து எண்ணும் பணி திருக்கல்யாண மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் செல்வராஜ் முன்னிலையிலும், இந்து அறநிலையத் துறையின் பரமக்குடி உதவி ஆணையர் ரோசாலிசுமைதா, ஆய்வர் சுந்தரேஸ்வரி ஆகியோர் மேற்பார்வையிலும்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பக்தர்களால் உண்டியலில் செலுத்தப்பட்ட வெளிநாட்டுப் பணம் உள்பட ரொக்கமாக 68 லட்சத்து 30 ஆயிரத்து 124 ரூபாயும், 95 கிராம் தங்கமும், 4 கிலோ 110 கிராம் வெள்ளியும் கிடைத்திருந்தது.



இப்பணியில், கோயில் உதவிக் கோட்டப் பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர்கள் ராஜாங்கம், ககாரீன்ராஜ், பாலசுப்பிரமணியன், காசாளர் ராமநாதன், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன் மற்றும் பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், ஆசிரியைகள், இந்தியன் வங்கி ஊழியர்கள் மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் ஈடுபட்டனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, March 30, 2016

முஸ்லீம் லீக் வரலாறு - பகுதி-2!!

No comments :

1906-ம் ஆண்டு மின்டோ பிரபு இந்தியாவின் வைஸ்ராயாக இருந்தார். அச்சமயம் பிரிட்டனில் இந்திய விவகார அமைச்சராக இருந்த மார்லி பிரபு இந்தியாவில் சீர்திருத்தங்கள் செய்யப்பட இருப்பதை அறிவித்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்க முஸ்லிம்கள் திட்டமிட்டனர்.

1906
அக்டோபர் 1ல் சிம்லாவில் தங்கியிருந்த மிண்டோ பிரபுவை சர் ஆகாகான் தலைமையில் முஸ்லிம் பிரதிநிதிகள் சந்தித்து முஸ்லிம்களின் கோரிக்கை மனுவை அளித்தனர்.

இவை நிச்சயம் பரிசீலிக்கப்படும் என வைஸ்ராய் உறுதி அளித்தார். 
சிம்லா தூதுக்குழுவின் முக்கியதுவத்தை உணர்ந்த நவாப் சலீமுல்லாஹ் கான் 1906 நவம்பர் 6 அன்று ஒரு அறிக்கை வெளியிட்டார். முஸ்லிம்களுக்கு தனி அரசியல் அமைப்பு வேண்டியதன் அவசியத்தை அதில் அவர் உணர்த்தியிருந்தார்.

அகில இந்திய முஸ்லிம் லீக் உதயம் 1906 டிசம்பர் 30
இன்றைய வங்க தேச தலைநகர் டாக்காவில் நவாப் வாக்காருல் முல்க் தலைமையில் அகில இந்திய முஸ்லிம் கல்வி மாநாடு கூட்டப்பட்டது.
முஸ்லிம்களின் நலன்களை பாதுகாக்க ஓர் அரசியல் கட்சி வேண்டும் என்ற கோரிக்கையை நவாப் சலீமுல்லா கான்இக்கூட்டத்தில் வலியுறுத்தினார். 

அது அனைவராலும் ஏற்கப்பட்டது. இதற்கான முறைப்படி தீர்மானத்தை டில்லி ஹக்கீம் அஜ்மல் கான் முன் மொழிந்தார். நவாப் முஹ்ஸினுல் முல்க் வழிமொழிந்தார்

அகில இந்திய முஸ்லிம் லீக்’’ அன்று உதயமானது.
1906
டிசம்பர் 31
அகில இந்திய முஸ்லிம் லீகின் முதல் கூட்டம் நவாப் வக்காருல் முல்க் தலைமையில் நடைபெற்றது. 


சர் சுல்தான் முஹம்மது ஷாஹ் ஆகாகான் தலைவராகவும், நவாப் முஹ்ஸினுல் முல்க், நவாப் வக்காருல் முல்க் ஆகியோர் பொதுச் செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முஸ்லிம் லீகிற்கு சட்டதிட்டங்கள் அமைக்க மௌலான முஹம்மதலி ஜவஹர் அவர்களை பொறுப்பாளாராக்க கொண்டு குழு அமைப்பட்டது.
இளம்பிறையும், ஜந்து முனை கொண்ட நட்சத்திரம் இடதுபுற மூலையில் பதிக்கப்பட்ட பச்சிளம் பிறைக் கொடி முஸ்லிம் லீகின் கொடியாக வடிவமைக்கப்பட்டது.

1907 டிசம்பர் 29ல் கராச்சியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் முதலாவது மாநாட்டில் கல்வி வேலை வாய்ப்பில் முஸ்லிம் சமுதாயத்தின் பின் தங்கிய நிலை பற்றி பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.
1908 மார்ச் 18-ல் அலிகரிலும், டிசம்பர் 30,31 அமிர்தரஸிலும் நடைபெற்ற மாநாடுகளில் நீதித்துறை, அரசுப்பணிகள், கல்வி, பாடநூல் குழு, உள்ளாட்சி அமைப்புகள், வைஸ்ராய் மற்றும் மாகான ஆளுனர்களின் ஆலோசனை கமிட்டிகளில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரப்பட்டது.

இதன் விளைவாக கிடைக்கப் பெற்றதே மிண்டோ -மார்லி சீரிதிருத்தம்என்ற 1909-ம் ஆண்டு இந்தியன் கவுன்ஸில் சட்டம்.
1913 அக்டோபர் 10-ல் முஸ்லிம் லீகில் சேர்ந்த காயிதெ ஆஜம் முஹம்மதலி ஜின்னாஹ் 1935-ல் தான் அதன் நிரந்தர தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1921 டிசம்பர் அஹமதாபாத்தில் நடைபெற்ற முஸ்லிம் லீகின் 14வது மாநாட்டில் இந்தியாவிற்கு பூரண சுதந்திரம் வேண்டும் என்ற தீர்மானம் ஹஸரத் மோகானி அவர்களால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 

1940 மார்ச் 23-ல் லாகூர் மாநாட்டில்தான் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வடமேற்கு, வடகிழக்கு மாகானங்கள் தனி ராஜ்யமாக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; அதையும் 1946 ஜுன் 6 ல் நடந்த கூட்டத்தில் கைவிட முடிவு செய்யப்பட்டது.

இந்திய சுதந்திர போராட்டமும் பிரிவினை கோரிக்கையும் உச்ச கட்டத்தை எட்டின. 

1947
மார்ச் 24-ல் மவுண்ட் பேட்டன் பிரபு இந்திய வைஸ்ராயாக பதவி ஏற்றதும் தேசப்பிரிபினைக்கான செயல் வடிவம் தீட்டப்பட்டது. இதற்கான பொறுப்பு வி.பி. மேனனிம் ஒப்படைக்கப்பட்டது.

வி.பி. மேனன் தயாரித்த திட்டத்தை பிரிட்டிஷ் அரசு ஏற்றது 1947 ஜுன் 2ம் தேதி டெல்லி வைஸ்ராய் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் நேரு, பட்டேல், ஆச்சசார்ய கிருபளானி ஆகியோர் காங்கிரஸ் சார்பிலும்,
முஹம்மதலி ஜின்னாஹ், லியாகத் அலிகான், அப்துர் ரவூப் நிஷ்தார் ஆகியோர் முஸ்லிம் லீக் சார்பிலும் பல்தேவ்சிங் சீக்கியர் சார்பிலும் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டனர்.

(தொடரும்...)



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்தநாள் விழா!!

No comments :
மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்தநாள் விழா ஆட்சியர் நட்ராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விடுதலை போராட்ட வீரரும் இராமநாதபுரம் சமஸ்தாணம் மன்னருமான ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்த தின விழாவை முன்னிட்டு இன்று காலை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் நடராஜன் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.




உடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் காந்தி மற்றும் இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் இராம்பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரையில் கல்லூரி மாணவரை கொல்ல முயன்றவர் கைது!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கல்லூரி மாணவரை கொல்ல  முயன்றவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெருவைச் சேர்ந்தவர் ஹபீப் முஹம்மது மகன் முஹம்மது மகாசின்(27). இவர் கடற்கரை அருகே குடி போதையில் இருந்துள்ளார். அவரை, அந்த வழியாக வந்த கேட்டரிங் கல்லூரி மாணவர் நபில்மரைக்காயர்(17) கிண்டல் செய்துள்ளார்.  


இதன் காரணமாக அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், முஹம்மது மகாசின்  அருகில் கிடந்த பாட்டிலை எடுத்து உடைத்து நபில் மரைக்காயரை குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து புகாரின் பேரில் கீழக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து முஹம்மது மகாசினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, March 29, 2016

முஸ்லீம் லீக் வரலாறு (பகுதி-1)!!

No comments :
1142 ஆண்டுகள் இந்தியத் திருநாட்டை முஸ்லிம்கள் ஆட்சி செய்துள்ளனர். முகலாய சக்கரவர்த்திகளின் காலத்தில் இந்திய துணை கண்டமே அவர்களின் ஆட்சியில் இருந்துள்ளது.

ஆயினும் 592 ஆண்டுகள் முஸ்லிம் மன்னர்களுக்கு தலைநகராக இருந்த டெல்லி உட்பட இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருப்பது மட்டுமின்றி கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் அனைத்திலும் பின்தங்கியுள்ளனர்.

ஆக முஸ்லிம் மன்னர்கள் முஸ்லிம்களுக்காக ஆளவும் இல்லை; இஸ்லாத்தை பரப்புவது அவர்கள் நோக்கமும் இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.


முஸ்லிம் லீக் உருவாக்கப்பட்டது ஏன்? 
1600
டிசம்பர் 31

பேரரசர் அக்பர் ஆட்சி செய்து கொண்டிருந்த போதுதான் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காலடி எடுத்து வைக்கிறது.
1799
மே 4 மைசூர் போரில் மாவீரன் திப்பு சுல்தானின் வீரமரணத்தை அடுத்து 1806 ஜுலை 10ல் வேலூரில் நடைபெற்ற சிப்பாய் புரட்சிதான் ஆங்கில ஏகாதி பத்தியத்தை விரட்டும் இந்திய சுதந்திர வேட்கைக்கு அடித்தளம் அமைத்தது.

1857 –
இந்திய வரலாற்றில் திருப்புமுனை ஆண்டு! முகலாயப் பேரரசர் பஹதூர்ஷா தலைமையில் முதல் சுதந்திரப் போர் வெடித்தது.
அக்கிளர்ச்சி அடக்கப்பட்டு பஹதூர்ஷா கைது செய்யப்பட்டதும் இது இந்தியர்களின் உள்ளத்தில் தேசிய உணர்வை கொளுந்து விடச் செய்தது. 
கிளர்ச்சி அடக்கப்பட்டதும் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கம் விக்டோரியா மகாராணியிடம் ஒப்படைக்கப்பட்டது.

1858
நவம்பர் 1 – அலகாபாத்தில், விக்டோரியா மகாராணியின் அறிக்கையை கவர்னர் ஜெனரல் கானிங் பிரபு சமர்ப்பித்தார்.
ஆங்கிலேயர்களைப் போல் இந்தியர்களும் சமமாக நடத்தப்படுவர்; மதவிஷயங்களில் அரசு தலையிடாது; கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கு பொது மன்னிப்பு என உறுதி கூறப்பட்டது. 

1861-
ல் இந்தியன் கவுன்சில் ஆக்ட்என்ற பெயரில் ஆங்கிலேயர் வெளியிட்ட சட்டப்படி, கவர்னர் ஜெனரல் சபையில் பாதியிடம் இந்தியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
ஆனால் இவை அனைத்தும் முஸ்லிம்கள் விஷயத்தில் பொய்த்துப் போனது. 


முதல் சுதந்திரப் போரை முஸ்லிம்கள் முன்னின்று நடத்தினார்கள் என்பதற்காக ஆங்கிலேயர்களால் பழிவாங்கப்பட்டனர்.
அனைத்து பதவிகளிலிருந்தும் ராணுவத்திலிருந்தும் முஸ்லிம்கள் நீக்கப்பட்டனர். அவர்களின் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு தண்டமாக அபகரிக்கப்பட்டது. மத்ரஸாக்கள் நசுக்கப்பட்டன.
இதனால் பொருளாதாரம் கல்வி வேலை வாய்ப்பில் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கினர்.

ஆங்கிலேயர் மீது கோபத்திலும் ஆங்கிலம் கற்பது ஹராம் என்ற நிலையிலும் முஸ்லிம்கள் இருந்த போது
1884-
ல் வைசி ராயாக இருந்த டஃபரின்பிரபு மக்களுக்கும் அரசுக்கும் இணைப்பு பாலமாக இருக்கும் அமைப்பை உருவாக்க ஆலோசனை வழங்கினார்.

அவரது ஆலோசனையின்படி 1885 டிசம்பர் 28-ல் யு.எஸ். பானர்ஜி தலைமையில், ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்ற ஆங்கிலேயே அதிகாரி இந்திய தேசிய காங்கிரஸை உருவாக்கினார்.
காங்கிரஸின் முதலாவது மாநாட்டில் இந்திய அரசு ஊழியர் அனைவரும் இந்தியர் மயமாக்கப்பட வேண்டும் என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டிருந்தது  ஆனால் அதன் பலன் முற்பட்ட சமூகத்தை மட்டுமே சென்றடைந்தது.
இதைப்பற்றி தீவிரமாக சிந்தித்தார் சர் சையத் அகமத்கான். 

முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முஸ்லிம் கல்வி மாநாட்டை உருவாக்கினார். 1886ல்-ம் ஆண்டில் அலிகரில் முஹம்மடன் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியை தொடங்கினார். இதுவே பின்னாளில் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகமாக வளர்ந்தது.

ஆங்கிலேயர் பிரித்தாளும் சூழ்ச்சியை ஏற்படுத்தினர் . இதனால் இந்து முஸ்லிம் கலவரங்கள் உருவாயின. 

1894-
ல் சர் சையத் அகமத்கான், நவாப் முஹ்ஸினுல் முல்க் ஆகியோர் முஸ்லிம் பொலிடிகல் அஸோஸியேஷன் என்ற அமைப்பை உருவாக்கினர்.  


(தொடரும்....)

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, March 28, 2016

மண்டபம் பகுதியில் மாணவர்களிடையே மோதல், மூவர் காயம்!!

No comments :
மண்டபம் அருகே பள்ளி விழாவில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சனிக்கிழமை இரவு மாணவர்கள் மீண்டும் மோதிக்கொண்டதில் மூவர் காயம் மடைந்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் போலீஸார் குவிக்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே நடுமனைக்காடு பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் மண்டபம் சேது நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மகன் முரளிதரன் (16), இத்ரிஸ்கான் மகன் இம்ரான்கான்(15), சீனி இபுராஹிம் மகன் இசாகான்(16) ஆகிய மூவரும் படித்து வருகின்றனர்.



இப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் முரளிதரனுக்கும், இம்ரான்கான், இசாகான் ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக நான்கு நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை இரவு மண்டபம் பகுதியில் மூவரும் கத்தி, பிளேடால் தாக்கிக் கொண்டனர்.

இதில் காயமடைந்த முரளிதரன் தனியார் மருத்துமனையிலும் மற்ற இருவரும் அரசு மருத்துமனையிலும் கிகிச்சை பெற்றனர்.
இந்நிலையில் இம்ரான்கான், இசாகானின் உறவினர்கள் சனிக்கிழமை இரவு  முரளிதரன் சிகிச்சை பெறும் தனியார் மருத்துமனையையும், அவரை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தையும் தாக்கியுள்ளனர். இதனால் மண்டபம் பகுதியில் பதற்றம் நிலவியது.  
இதையடுத்து ராமேசுவரம் காவல்துறை கண்காணிப்பாளர் முத்துராமலிங்கம் தலைமையில்  போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.  மூன்று மாணவர்கள் மீதும் மண்டபம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி: தினமணி



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, March 27, 2016

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களுக்கு சேவை மையம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பான புகார்களுக்கு சேவை மையம் அமைக்கப்பட்டு தொலைபேசி எண்களையும் ஆட்சியர் எஸ்.நடராஜன் சனிக்கிழமை அறிவித்துள்ளார்.

அவரது செய்திக் குறிப்பு:

நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் முறைகேடுகளைத் தடுக்கும் பொருட்டு புகார் அளிக்க வசதியாக தொலைபேசி எண்கள் கொண்ட புகார் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 7038. சென்னையில் உள்ள வருமான வரி அலுவலக கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 6669. ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்: 04567-232243.



இச்சேவை மையங்களில் பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கென 24 மணி நேரமும் சுழற்சி முறையில் உரிய அலுவலர்கள் பணியிலிருந்து செயல்பட்டு வருகிறார்கள்.

தேர்தல் முறைகேடுகள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Saturday, March 26, 2016

தோழா - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
நடிகர்கள்: நாகார்ஜுனா, கார்த்தி, அமலா, ஜெயசுதா, விவேக் ஒளிப்பதிவு: பிஎஸ் வினோத்
இசை: கோபி சுந்தர்
தயாரிப்பு: பிவிபி சினிமா
இயக்கம்: வம்சி பைடிபல்லி

ஃபீல் குட் படம் என்று ஆங்கிலத்தில் ஒரு பதம் இருக்கிறது. அதாவது நேர்மறையான சிந்தனைகளைத் தூண்டும், மனதை நல்லவிதமாக வைத்திருக்கும் ஒரு படம். அப்படி ஒரு படம் 'தி இன்டச்சபிள்ஸ்'. அந்த பிரெஞ்சுப் படத்தைத்தான் தமிழில் தோழாவாகவும் தெலுங்கில் ஊபிரியாகவும் ரீமேக்கியிருக்கிறார்கள்.

தமிழில் அந்த ஃபீல் குட் மனநிலை கிடைத்ததா... பார்க்கலாம்! அம்மா, தம்பி, தங்கையுடன் சென்னையில் வசிக்கும் மிடில்கிளாஸ் இளைஞர் கார்த்திக்கு, ஒரு கெட்ட பழக்கம். அடிக்கடி சின்னச் சின்ன திருட்டுக்களில் மாட்டிக் கொண்டு சிறைக்குப் போய்விடுவார். இதனால் குடும்பத்தில் மரியாதையே இல்லாமல் போகிறது. கார்த்தியை வீட்டை விட்டே துரத்திவிடுகிறார் அம்மா.

கார்த்தியைத் திருத்த முனைகிறார் நண்பராக வரும் விவேக். ஒரு பெரிய தொழிலதிபருக்கு வேலைக்கு ஆள் வேண்டும் என்ற விளம்பரம் பார்த்து அங்கே போகிறார் கார்த்தி. அந்தத் தொழிலதிபர் நாகார்ஜூனா. சக்கர நாற்காலியிலேயே கிடக்கும் நாகார்ஜூனாவுக்கு கார்த்தியின் இயல்பு பிடித்துப் போக, தேர்வு செய்கிறார்.

இருவரும் சீக்கிரமே நல்ல புரிதலுக்கு வந்துவிட, நாகார்ஜூனாவின் உடன்பிறப்பு மாதிரியாகிவிடுகிறார் கார்த்தி. சக்கர நாற்காலி உலகத்திலிருக்கும் அவருக்கு வேறு உலகங்களை, சந்தோஷங்களைக் காட்டுகிறார் கார்த்தி. நாகார்ஜூனாவின் செக்ரடரி தமன்னாவை ஒருதலையாக காதலிக்கவும் ஆரம்பிக்கிறார்.

ஒரு நாள் திடீரென கார்த்தியை வீட்டுக்குப் போகச் சொல்கிறார் நாகார்ஜூனா. இருவருக்குமான நட்பு என்ன ஆகிறது? தமன்னா காதலில் விழுந்தாரா? என்பதெல்லாம் சுவாரஸ்யமான மிச்சப் பகுதிகள். ரீமேக் என்றாலும், அதை ஓரளவு நேர்மையாகவே செய்திருக்கிறார் இயக்குநர் வம்சி. தெலுங்கு சாயலில் எடுத்து கொல்லப் போறாங்க.. என்ற நினைப்போடு போனால்... ம்ஹூம்... பக்கா தமிழ்ப் படம்.

கார்த்திக்கு அவர் கேரியரில் இன்னொரு சிறந்த படம் தோழா. அவரது ட்ரேட் மார்க் ஜாலி உதார் பேர்வழி பாத்திரம். நகைச்சுவைக்கென்று தனியாக ஒரு காமெடியனே தேவைப்படவில்லை. அப்படி ஒரு ஜாலியான கேரக்டர். அனுபவித்து நடித்திருக்கிறார். முந்தைய படங்களை விட உடல் மொழில் நல்ல தேர்ச்சி. நாகார்ஜுனா என்ற ஆஜானுபாகுவான ஒரு ஆக்ஷன் ஹீரோவை சக்கர நாற்காலியிலேயே வலம் வர வைத்திருக்கிறார்கள். ஆனாலும் தன் முக பாவனைகளிலேயே அனைத்தையும் சாதித்து மனசுக்கு நெருக்கமாகிறார் நாகார்ஜுனா. உதயம் காலத்து அவரது ரசிகர்கள் மெய்சிலிர்த்துப் போய் அவரை ரசிப்பதை அரங்கில் பார்க்க முடிந்தது.

தமன்னா அபாரம். என்றும் மாறாத அழகு, அம்சமான நடிப்பு. இவருக்கும் கார்த்திக்கும் காதல் வரும் காட்சி அழகான கவிதை. விவேக், பிரகாஷ் ராஜ் சில காட்சிகளில் வந்தாலும் மனசில் நிற்கிறார்கள். படத்தின் முக்கிய பலம் வசனங்கள். எழுதிய ராஜு முருகன், முருகேஷ் பாபு இருவருமே பத்திரிகையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வினோத்தின் ஒளிப்பதிவு மிக இதம். அதிலும் பாரிஸ் காட்சிகளில் பிரான்சுக்கு ஓசிப் பயணம் போன திருப்தி. கோபி சுந்தரின் இசையில் இத்தனை பாடல்கள் தேவையா? பின்னணி இசை உறுத்தவில்லை.


படத்தின் நீளம், கார்த்தியின் திருட்டு கேரக்டர் போன்றவை கொஞ்சம் உறுத்தலாக இருந்தாலும், தெளிவான, சுவாரஸ்யமான திரைக்கதைக்கு முன் அவை காணாமல் போகின்றன. தோழா.. நிச்சயம் பார்க்கலாம்!

விமர்சனம்: ஒண் இண்டியா

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)