முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, August 30, 2016

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் துவங்க கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டமான "நீட்ஸ்'  திட்டத்தின் கீழ் ரூ. ஒரு கோடி வரை கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயமாக தொழில் செய்து தங்களது வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின்(நீட்ஸ்)கீழ் கடனுதவி பெற மாவட்டத் தொழில் மையத்தை அணுகலாம். பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழில்பயிற்சி படிப்பு மற்றும் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் தொழிற்கல்வி படித்த இளைஞர்கள் சுயமாக தொழில் துவங்க மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுகிறது.



இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 21 முதல் 35, சிறப்புப் பிரிவினருக்கு 21 முதல் 45 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் துவங்குவதற்கு குறைந்த பட்சம் ரூ.5 லட்சம் முதல் அதிக பட்சம் ரூ.ஒரு கோடி வரை 25 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். முறையாக கடனை திருப்பிச் செலுத்துவோருக்கு 3 சதவிகித பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் இந்நிதியாண்டில் 9 இளைஞர்களுக்கு மொத்தம் ரூ.2.36 கோடி மதிப்பில் ரூ.51.01 லட்சம் மானியத்துடன் கடனுதவி பெற்று புதிதாக தொழில் துவங்கியுள்ளனர்.

நடப்பு நிதியாண்டில் 10 இளைஞர்களுக்கு ரூ.3.66 கோடி மதிப்பில் ரூ.80.79 லட்சம் கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள தகுதியான இளைஞர்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட தொழில மையத்தினை அணுகி பயன் பெறலாம் எனவும் ஆட்சியரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுளளது.




(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, August 29, 2016

ராமநாதபுரத்தில் செயல்பட்டுவரும் தொண்டு நிறுவன விடுதிகளை பதிவு செய்ய உத்தரவு!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகளுக்கான தங்கும் விடுதி மற்றும் இல்லங்களை சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சங்கங்கள், தொழிற்சாலைகள், மதம் சார்ந்த நிறுவனங்கள் போன்றவற்றால் நடத்தப்படும் குழந்தைகளுக்கான தங்கும் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவற்றை இளைஞர் நீதிச்சட்டம்–2015, தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டம்–2014 ஆகிய சட்டத்தின்கீழ் பதிவு செய்ய வேண்டும்.


இன்னும் 6 மாத காலத்திற்குள் விண்ணப்பித்து உரிமம் அல்லது பதிவு பெற்றுக்கொள்ள வேண்டும். சட்ட நடைமுறைகளை பின்பற்றாத விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவற்றை மூடுவதற்கு உடனே நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞர் நீதிச்சட்டத்தின் கீழ் பதிவு பெறாமல் மத ரீதியாக செயல்படும் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்கள் இருந்தால் உடனடியாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு 04567–231098 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ரேஷன்பொருட்கள் வாங்குவதற்கு ஜனவரி மாதம் முதல் ஸ்மார்ட் கார்டு!!

No comments :


தமிழக அரசின் முதன்மை செயலாளரும், குடிமைப்பொருள் வழங்கல் ஆணையர் கோபாலகிருஷ்ணன் ராமநாதபுரத்திற்கு வருகைதந்து பல்வேறு ரேஷன்கடைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:


தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமான ரேஷன்கார்டுகள் உள்ளன. இவர்களுக்காக மாநிலம் முழுவதும் 35,000 ரேஷன்கடைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. தற்போது ரேஷன்கடையில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகத்தில் ஒளிவுமறைவற்ற வெளிப்படையான தன்மையை ஏற்படுத்தும் வகையில் அனைத்து செயல்பாடுகளும் கையடக்க கருவி மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுஉள்ளது.

இந்த கருவியில் அத்தியாவசிய பொருட்கள் இருப்பு, சப்ளை விவரங்கள் போன்ற அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படுவதோடு, நுகர்வோரின் ஆதார் கார்டு அடிப்படையில் விவரங்கள், செல்போன் எண் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் பொருட்கள் வாங்கியதும் சம்பந்தப்பட்ட நுகர்வோரின் செல்போனிற்கு தகவல் சென்றுவிடும். மேலும், அதிகாரிகள் முதல் நுகர்வோர் வரை இணையதளத்தில் சென்று எந்தவொரு கடையின் விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

நுகர்வோருக்கு சிறந்த சேவையளிக்கும் இந்த புதிய முறை இதுவரை 20,000 கடைகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளன. மீதம் உள்ள கடைகளில் இன்னும் ஒரு மாதத்தில் செயல்படுத்தப்படும். ரேஷன்கடைகளில் உள்ள கையடக்க கருவிகளில் நுகர்வோரின் ஆதார்எண் உள்ளிட்ட விவரங்கள் சேர்க்கும் பணிகள் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஆதார் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கும் பொருட்கள் சப்ளை செய்யப்படும். ஆதார் பெற்றவுடன் கையடக்க கருவில் விவரங்கள் சேர்க்கப்படும்.



தற்போது உள்ள ரேஷன்கார்டுகள் காலவரம்பு வருகிற டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதன்பின்னர் உள்தாள் இணைப்பதோ, புதிய கார்டு வழங்குவதோ கண்டிப்பாக இருக்காது. ஏனெனில் ஏ.டி.எம். கார்டு போன்ற அளவில் ஸ்மார்ட் கார்டு ஜனவரி மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக இந்த திட்டத்திற்காக சுமார் ரூ.400 கோடி செலவிடப்படுகிறது. இந்த ஸ்மார்ட் கார்டு முறை கொண்டுவந்ததும் நுகர்வோரின் சேவை மிகவும் எளிதாகி விடுவதோடு, போலி கார்டுகள் புழக்கம் உள்ளிட்டவைகள் முழுமையாக தடுக்கப்படும்.

தமிழகத்தில் 4 லட்சத்து 50 ஆயிரம் கார்டுகள் போலியானவையாக கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. 11 லட்சம் புதிய கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் மாதம் ஒன்றுக்கு 394 லட்சம் டன் அரிசியும், 36,500 டன் சீனியும், 16,300 டன் கோதுமையும், 13,500 டன் துவரம்பருப்பும், 7,000 டன் உளுந்தும், 25,000 கிலோ லிட்டர் மண்எண்ணெய்யும், ஒரு கோடியே 50 லட்சம் பாக்கெட்டுகள் பாமாயிலும் சப்ளை செய்யப்படுகிறது.

நுகர்வோருக்கு சிறப்பான சேவையை மேம்படுத்தும் வகையில் 13 இடங்களில் மொபைல் ரேஷன்கடை செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு ரேஷன்பொருட்கள் வழங்குவதற்காக மாநில அரசு மட்டும் ஆண்டுக்கு ரூ.1,300 கோடி மானியமாக வழங்குகிறது. இதுதவிர மத்திய அரசும் மானியம் வழங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட கலெக்டர் நடராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் அலிஅக்பர் ஆகியோர் உடன் இருந்தனர்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, August 25, 2016

பெரியபட்டிணத்தில் தீ விபத்து, நூற்றுக்கணக்கான மரங்கள் எரிந்து சேதம்!!

No comments :
பெரியபட்டிணம் புதுக்குடியிருப்பு பகுதியில் புதன்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் நூற்றுக்கணக்கான மரங்கள் எரிந்து சேதமாகின.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பெரியபட்டிணம் அருகே புதுக்குடியிருப்பு பகுதியில் ஜமாலுதீன், செய்யது இப்ராஹிம், கலீல்ரகுமான் உள்ளிட்ட 7 பேருக்கு சொந்தமான இடத்தில் பனை,தென்னை, சவுக்கு மரங்கள் என சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் இருந்தன. இப்பகுதியில் புதன்கிழமை காலை மரங்களில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகம் காரணமாக அனைத்து மரங்களுக்கும் தீ பரவியது.  



தகவலறிந்து வந்த ராமநாதபுரம் தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் 300 சவுக்கு,225 தென்னை,55 பனை மரங்கள் சேதமானதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.  வழிப்போக்கர்கள் யாரேனும் ஒருவர் காய்ந்து கிடந்த பனை ஓலைகளில் சிகரெட் தீயை தூக்கிப்போட்டதால் மரங்கள் தீப்பிடித்து எரிந்து சேதமாகியிருக்கலாம் என்று தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்தை கீழக்கரை தனி வட்டாட்சியர் .தர்மர், துணை வட்டாட்சியர் மாதவன், வருவாய் ஆய்வாளர் முனியம்மாள், கிராம நிர்வாக அலுவலர் சாகுல்ஹமீது ஆகியோரும் நேரில் பார்வையிட்டனர்.

செய்தி: தினசரிகள்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, August 24, 2016

தேசிய இளைஞர் விருதுபெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
தேசிய இளைஞர் விருதுபெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 12–ந்தேதி சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி நடைபெறும் தேசிய அளவிலான இளைஞர் விழாவில் மத்திய அரசால் சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக செய்து வரும் இளைஞர்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் தேசிய இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்த நிதியாண்டில் கடந்த 1.4.2015 முதல் 31.3.2016 வரையிலான காலகட்டத்தில் செய்த நலப்பணிகளுக்காக இந்த விருது வழங்கப்பட உள்ளது.

இளைஞர் விருது பெற தனிநபர் 15 வயது முதல் 29 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். தன்னார்வ அடிப்படையில் நிதி ஆதாயம் பெறப்படாமல் தொண்டு செய்திருக்க வேண்டும். இதற்கு முன் விருது பெற்றவர்கள் இந்த ஆண்டு விருது பெற விண்ணப்பிக்க முடியாது. மத்திய, மாநில, பல்கலைக்கழகங்கள் மற்றும் இதர அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க முடியாது.

இதேபோல இந்த விருது பெற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சங்க பதிவு சட்டத்தின்பிடி பதிவு செய்திருக்க வேண்டும். எவ்வித லாப நோக்கத்துடன் தொண்டு பணிகள் ஆற்றியிருக்கக்கூடாது. குறிப்பிட்ட சாதி, சமய அடிப்படையில் தொண்டாற்றிய நிறுவனங்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. ஏற்கனவே விருது பெற்ற தொண்டு நிறவனங்களும் விண்ணப்பிக்க முடியாது. சமுதாய பணிகளில் ஈடுபட்டு தொண்டாற்றிய புகைப்படம் மற்றும் செய்திக்குறிப்பு மற்றும் இதர ஆவணங்களுடன் சான்றொப்பமிட்ட ஆதாரங்கள் இணைக்கப்பட வேண்டும்.



இதற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து 2 நகல்களுடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் வருகிற 2–ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தகுதியான விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு பரிசீலித்து மாநில அளவிலான குழுவுக்கு பரிந்துரைக்கும். பின்னர் மாநில குழுவினர் தகுதியான விண்ணப்பங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பார்கள். 

எனவே கடந்த 2015–16–ம் நிதியாண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் உரிய காலகட்டத்திற்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் நடராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகத்தில் தீ விபத்து, தொலைபேசி இணைப்புகள் துண்டிப்பு!!

No comments :
ராமநாதபுரம் பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் மாவட்டம் முழுவதும் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

ராமநாதபுரம் அரண்மனை அருகே மில்லர் பங்களா சாலையில் பி.எஸ்.என்.எல்.தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு 2ஆவது மாடியில் தரைவழித் தொடர்பு மற்றும் இணையம் தொடர்பான சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணைப்புகள் உள்ளன. இத் தளத்திலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை ஜன்னல் வழியாக திடீரென புகை வெளியேறியது. இதைக்கண்ட அலுவலர்கள், ஊழியர்கள் உடனடியாக வெளியே ஓடிவந்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.   

தகவலறிந்து வந்த ராமநாதபுரம் தீயணைப்புக் கோட்ட அலுவலர் முரளி தலைமையிலான வீரர்கள் 2ஆவது மாடிக்குள் நுழைய முயன்றனர். ஆனால், புகைமூட்டம் மற்றும் துர்நாற்றம் காரணமாக நுழைய முடியவில்லை. பின்னர் கார்பன்டை ஆக்ஸைடு நிரப்பப்பட்ட புகையை கக்கும் கருவியை பயன்படுத்தி வயர்கள்,பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவற்றின் மீது பீய்ச்சியடித்து புகை மூட்டத்தை அணைத்தனர்.


இதனால்  மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொலைப்பேசி இணைப்புகள் செயலிழந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, August 21, 2016

மாநில அளவில் மூன்றாவது சிறந்த நகராட்சியாக ராமநாதபுரம்!!

No comments :

தமிழக அளவில் சிறந்த நகராட்சியாக ராமநாதபுரம் 3 ஆவது இடத்துக்கு தேர்வு செய்யப்பட்டு, அதற்கான விருதை தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கி கௌரவித்திருப்பதாக, அதன் நகர்மன்றத் தலைவர் எஸ்.கே.ஜி.எஸ். சந்தானலெட்சுமி  தெரிவித்துள்ளார்.

இது குறித்து, ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை அவர் மேலும் கூறியதாவது: ராமநாதபுரம் நகராட்சியின் உள்கட்டமைப்பு, வரி வசூல், பாதாளச் சாக்கடைத் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றியது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளுக்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதா சுதந்திர தின விழாவில் விருது வழங்கியுள்ளார். இந்த விருதினை, ராமநாதபுரம் நகர் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

விருது வழங்கி கௌரவித்த முதல்வருக்கும், ஒத்துழைப்பு நல்கியவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


ராமநாதபுரம் நகரில் தெருவிளக்குகளை பணியாள்கள் மூலம் பராமரித்ததில், ஆண்டுக்கு ரூ. 44 லட்சம் வரை செலவானது. இதை, தனியார் வசம் விடப்பட்ட பின்னர் ஆண்டுக்கு ரூ. 22 லட்சமே செலவாகிறது.

ராமநாதபுரம் நகரில் உள்ள ஊரணிகளான கிடாவெட்டி, லெட்சுமிபுரம், சிதம்பரம் பிள்ளை, சோத்தூரணி உள்ளிட்ட பல ஊரணிகள் தூர்வாரப்பட்டதுடன், அப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளையும் அகற்றி, கம்பி வேலியும் அமைத்துள்ளோம்.

நகரில் பாதாளச் சாக்கடைத் திட்டம் 9 வார்டுகளில் முழுமையடைந்து, மொத்தமுள்ள 12 ஆயிரம் இணைப்புகளில் 7,300 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

நகராட்சியில் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கும் வகையிலும், நகராட்சிக்குத் தேவையான நிதியை இட்டுவைப்புகள் மூலம் சேகரித்தும் வருவாயை உயர்த்தியிருக்கிறோம். நகராட்சிக்கு இருந்த வங்கிக் கடன்கள் பலவற்றையும் அடைத்துள்ளோம். பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக பெறப்பட்ட ரூ. 34 கோடியில், ரூ12 கோடி மட்டுமே பாக்கி உள்ளது.

நகரில் மீன்மார்க்கெட் ரூ. 1.10 கோடியில் அமைக்க நிதி ஒதுக்குமாறு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்தொகை கிடைத்தவுடன் சந்தைக்கடைப் பகுதியில் புதிதாக மீன்மார்க்கெட் அமைக்கப்படும். ரூ.32 லட்சம் மதிப்பில் ஒரே நேரத்தில் 20 டன் எடையுள்ள குப்பைகளை நசுக்கி அள்ளி எடுத்துச்செல்லும் வகையிலான வாகனமும் கேட்டுள்ளோம்.

தற்போதுள்ள நிலையில், நகராட்சியின் வருமானமும், செலவும் சமமாக இருக்கிறது. நகராட்சியின் சாதனைகள் மேலும் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் 27ம் தேதி முதல் குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு!!

No comments :

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 27 ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கவுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் செயலர் பெ.சேகர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ராமநாதபுரம் மாவட்ட மையம் சார்பில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு சங்க அலுவலகமான எண்.68, ரயில்வே குட்செட் தெரு அண்ணாநகர் என்ற முகவரியில் நடைபெறும்.


வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புவோர், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் 27 ஆம் தேதி காலை 9 மணிக்கு வந்து பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

மேலும் விபரங்களுக்கு 9443502005 அல்லது 9448044111 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)