முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, January 4, 2016

ராமநாதபுரத்தில் ரூ.1½ கோடி செலவில் மெகா மல்டி பார்க்!!

No comments :
சிறுவர்களின் சிந்தனையை தூண்டும் அறிவியல் நுட்ப உபகரணங்களுடன் ராமநாதபுரத்தில் ரூ.கோடி செலவில் மெகா மல்டி பார்க் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

மெகா மல்டி பார்க்

பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லாத ராமநாதபுரத்தில், மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் நகர மக்களுக்கும், சிறுவர் சிறுமிகளுக்கு தற்போது பொழுதுபோக்கு அம்சங்கள் கிடைத்து வருகின்றன. ராமநாதபுரம் நகர் நுழைவு வாயில் பகுதியில் படகு சவாரியுடன் கூடிய நடைபயிற்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் அருகே அச்சடிபிரம்பு பகுதியில் ஐந்தினை மரபணு பூங்கா மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுதவிர, உடலுக்கும், உள்ளத்திற்கும் மகிழ்ச்சியையும், மன அமைதியையும் தரும் வகையிலும், சிந்தனையை தூண்டும் வகையிலும் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் மெகா அறிவியல் பூங்காவுடன் கூடிய மல்டி பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜாவின் தொகுதி மேம்பாட்டு நிதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் நிதி ஆகியவற்றின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் டி பிளாக் அருகில் சுமார் 10 ஏக்கரில் இந்த பூங்கா அறிவியல் நுட்ப உபகரணங்களுடன் அமைக்கப்பட்டு வருகிறது. 



அறிவியல் தகவல்கள்

பிரமாண்ட நடைபயிற்சி மைதானமும், திறந்த வெளி அரங்கத்துடன் கூடிய மைதானமும், சிறுவர்களின் சிந்தனையை தூண்டும் வகையில் மெகா அறிவியல் பூங்காவும் இதில் அமைக்கப்பட்டு வருகின்றன. இங்கு பொழுதுபோக்கு அம்சம் மட்டுமில்லாமல், அறிவியல் தொழில்நுட்ப அறிவை வளர்க்கும் வகையிலும், சிறுவர், சிறுமிகளை சிந்திக்க வைக்கும் வகையிலும் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

கூண்டுக்குள் கிளி, கம்பிவடமற்ற ஒலி பிரதிபலிப்பான், பல்வேறு நாடுகளின் நேரம் காட்டும் கருவி, பிடிப்பதற்கு ஏற்ப அமைந்துள்ள அளவைகளின் எடை மாறுபடுதல், பழுதூக்குவதில் எடை வித்தியாசம் அறிதல், இருவேறு முனையில் எந்த தொடர்புமில்லாமல் பேசுதல், 3டி ஒட்டகம், தனி ஊசல், சதுர வடிவிலான டயர்களை வாகனங்களில் இயக்கும் முறை, பந்து விசை, எடை கற்கள் இழுவிசை என அறிவியல் ரீதியிலான பொழுதுபோக்கு கருவிகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. 

பொழுதை கழிக்க வருபவர்களுக்கு நல்ல உபயோகமான அறிவியல் தகவல்களை தெரிவிக்கும் வகையில் ஒவ்வொன்றும் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, வாகனங்கள் நிறுத்த தனி இடம், கடைகள், கழிப்பறை, திறந்தவெளி திரையரங்கம் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன. மனதிற்கு இதமளிக்கும் வகையில் சுற்றிலும் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் இந்த மெகா மல்டி பார்க் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)