முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, January 10, 2017

ராமநாதபுரத்தில் வங்கியை முற்றுகையிட்ட 3 பெண்கள் உள்பட 32 பேர் கைது!!

No comments :


ரூபாய் நோட்டு பிரச்சனையை மத்திய அரசு இதுவரை தீர்க்காததை கண்டித்து ராமநாதபுரத்தில் ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் வங்கி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியதும், ரூபாய் நோட்டுகள் வங்கியில் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதித்தது. இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் மக்களுக்கு பணம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டு பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது.


இந்தநிலை தொடர்வதை கண்டித்தும், இந்த அறிவிப்பால் தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற சிரமம் ஏற்படுவதை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தின் சார்பில் வங்கியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு பொது செயலாளர் ராதா தலைமை தாங்கினார். மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்க செயலாளர் லோகநாதன் முன்னிலை வகித்தார். சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் ராஜன் வரவேற்று பேசினார். இதில் ரூபாய் நோட்டு பிரச்சினையில் தொழிலாளர்களையும், மக்களையும் அவதிக்குள்ளாக்கும் மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.


இதில், கைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், மீனவர் சங்க செயலாளர் முருகையா, மீனவர் சங்க தலைவர் தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் வங்கியை முற்றுகையிட முயன்ற போது பஜார் போலீசார் வழிமறித்து 3 பெண்கள் உள்பட 32 பேரை கைது செய்தனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3.24 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுப்பொருட்கள்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3.24 லட்சம் குடும்ப அட்டைதார்களுக்கு விலையில்லா பொங்கல் பரிசுப்பொருள்கள் விநியோகத்தை திங்கள்கிழமை ஆட்சியர் எஸ்.நடராஜன் தொடக்கி வைத்தார்.

ராமநாதபுரம் இளங்கோவடிகள் தெருவில் உள்ள நியாய விலைக்கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியருடன் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் அ.அன்வர்ராஜாராம்கோ தலைவர் செ.முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



இத்திட்டத்தின் கீழ் கடலாடியில் 28,992,
கமுதி 29,688,
கீழக்கரை 31,774,
பரமக்குடி 63,447,
முதுகுளத்தூர் 31,597,
ராமநாதபுரம் 66,572,
ராமேசுவரம் 17525,
திருவாடானை 54903
ஆகிய 8 தாலுகாக்களில் மொத்தம் 3,24,678 பேருக்கு பொங்கல் பரிசுப்பொருள்கள் வழங்கப்படவுள்ளதாக ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்தார்.


இவ்விழாவில் ராம்கோ பொதுமேலாளர் பாட்ஷா வரவேற்று பேசினார். கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப்பதிவாளர் ஹேமாசலோமி, பொதுவிநியோகத் திட்டத் துணைப் பதிவாளர் பத்மகுமார்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் கோ.ஜெயசங்கர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)