முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, June 27, 2017

கலெக்டர் நடராஜன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!!

No comments :
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் நடராஜன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. 

மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, வேளாண்மை துறை இணை இயக்குனர் அரிவாசன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் மோகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெள்ளைச்சாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன், நபார்டு திட்ட பொது மேலாளர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் நடராஜன் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மை துறை மற்றும் வேளாண்மை சார்ந்த தோழமை துறைகளின் மூலம் பல்வேறு வேளாண் மேம்பாட்டு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2016–17–ம் நிதியாண்டில் பிரதமரின் புதிய பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நெல் மற்றும் இதர வேளாண் பயிர்களுக்கு 1 லட்சத்து 17 ஆயிரத்து 542 விவசாயிகளுக்கு 1 லட்சத்து 12 ஆயிரத்து 981 எக்டேர் பரப்புக்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டு உள்ளது. மிளகாய் போன்ற தோட்டக்கலை விவசாயிகளுக்கு 10,044 விவசாயிகளுக்கு 8,220 எக்டேர் பரப்பிற்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டு உள்ளது. 2016–17–ம் பயிர் காப்பீடு இழப்பீடு தொகையாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 65 லட்சமும், கடன் பெறாத விவசாயிகளுக்கு ரூ.353 கோடியே 63 லட்சமும் முதல் தவணையாக ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. விரைவில் இழப்பீட்டு தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


வேளாண்மை பொறியியல் துறை மூலமாக நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை திட்டம் நடப்பு ஆண்டில் 5,000 எக்டேரில் முதல் கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு தொகுப்புக்கு 1000 எக்டேர் என்ற அடிப்படையில் 5 தொகுப்புகள் நடப்பு ஆண்டில் 5 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மானாவாரி நிலங்களை மேம்படுத்தி உற்பத்தியை நீடித்த நிலையான வகையில் பெருக்கி விவசாயிகளின் வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டுஉள்ளது.

இதில் மொத்தம் 53 ஊருணிகள் தேர்வு செய்யப்பட்டு இதுவரையில் 20 ஊருணிகளில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுதவிர குடிமராமத்து திட்டப்பணிகள் குண்டாறு வடிநிலக்கோட்டத்தில் 14 கண்மாய்களில் முடிவு பெற்றுள்ளன. திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரங்களில் 5 கண்மாய்களில் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே விவசாயத்தையும், விவசாயிகளின் நலனையும் பாதுகாக்கிற வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.


இவ்வாறு அவர் கூறினார். 

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி ராமநாதபுரத்தில் மதுரை ரோட்டில் உள்ள ஈதுகா கோரித்தோப்பு மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

நகரில் உள்ள அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் நடைபெற்ற இந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். இதில் உலக நன்மைக்காகவும், மழைவேண்டியும், அமைதி நிலவவும் வேண்டி சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. சிறப்பு தொழுகையின் முடிவில் சிறியவர் முதல் பெரியவர் வரை ஒருவரையொருவர் கட்டித்தழுவி பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.



ராமநாதபுரம் சின்னமுகல்லம் அம்பலகாரத்தெரு முஸ்லிம் ஜமாத் சின்ன பள்ளிவாசலில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து திரளாக கலந்து கொண்டனர். தொழுகையின் முடிவில் உலக அமைதிக்காக சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடத்தினர். இந்த தொழுகைக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் பெரிய முகல்லம் மற்றும் சின்ன முகல்லம் பாசிப்பட்டறை ஜமாத் மற்றும் காதர் பள்ளிவாசல் ஆகிய ஜமாத்களின் சார்பில் செய்திருந்தனர்.

நோன்பு பெருநாளை ஈகை திருநாளாக கொண்டாட வேண்டும் என இஸ்லாமிய மார்க்கத்தில் அறிவுறுத்தப்பட்டுஉள்ளதால் ஏராளமான ஏழைகளுக்கு தானதர்மங்களை முஸ்லிம்கள் வழங்கினர். சிறப்பு தொழுகைக்கு முன்னதாக பித்ரா எனப்படும் ஏழை வரியை நலிந்தவர்களுக்கு வழங்கினர்.

இதேபோல, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மதரசா மற்றும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் ஏராளமான பெண்கள் திரண்டு சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர்.

இதேபோல கீழக்கரையில் உள்ள பெரிய குத்பா பள்ளிவாசல் உள்பட அனைத்து தொழுகை பள்ளிவாசல்களிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு தொழுகையின் முடிவில் உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.



இதேபோல, ஏர்வாடி, பெரியபட்டிணம், காஞ்சிரங்குடி உள்பட அனைத்து பகுதிகளிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)