முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, November 11, 2017

ராமநாதபுரம், கந்துவட்டி புகார் குறித்து சிறப்பு முகாம், ஏராளமான புகார்கள்!!

No comments :

ராமநாதபுரம், கந்துவட்டி புகார் குறித்து சிறப்பு முகாம் ராமநாதபுரத்தில் நடந்தது. இதில் புகார் கொடுக்க வந்த பெண்கள் கதறி அழுதனர். கந்து வட்டி தொல்லை தாங்க முடியவில்லை என, புகார் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கந்து வட்டி குறித்து புகார் தெரிவிக்க எஸ்.பி., அலுவலகத்தில் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் புகார் தெரிவிக்க வந்த பெண்கள் கூறியதாவது: கந்து வட்டிக்காக சம்பந்தப்பட்ட நபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், போலீசாரிடம் ஏற்கனவே கொடுத்த புகார்களில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புகார் தெரிவித்தால், கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர்.

சம்பந்தப்பட்ட நபர்கள் மனுகொடுத்தவர்கள் மீது புகார் தெரிவிக்கின்றனர். போலீசார் அவர்களுக்கு சாதகமாகவே பேசி நடவடிக்கை எடுக்கின்றனர், என கண்ணீருடன் புகார் தெரிவித்தனர்.


பல புகார்கள் வாகன கடன் நிறுவனத்தினர் மீது தெரிவித்தனர்.
அவர்கள் தெரிவித்ததாவது: தனியார் வாகன கடன் பெற்றவர்கள், பணம் வசூலித்த பின்பு, வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர். தொழில் இல்லாமல் முடங்கி கிடக்கும்எங்களிடம் வட்டிக்கு மேல் வட்டி போல் பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர். விவிசாயத்திற்கு டிராக்டர் வாங்கியவர் 5 ஆயிரம் ரூபாய் பாக்கிக்காக பல ஆயிரம் வட்டியாக கேட்பதாகவும், தெரிவித்தனர்.

ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்ததாவது:

கந்து வட்டி தொடர்பான புகார்கள் பெறப்பட்டுள்ளன. ஒரு தரப்பினர் கருத்து மட்டுமே கேட்கப்பட்டுள்ளது. வட்டி வசூலிப்பவர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் உரிய விசாரனை நடத்தப்படும்.
சட்டப்படி, பொருட்களை வைத்து கடன் பெறுவர்களிடம் ஆண்டுக்கு 9 சதவீத வட்டியும், எந்த விதி பாதுகாப்பும் இல்லாமல் வழங்கப்படும் கடனுக்கு 12 சதவீத வட்டியும் வசூலிக்கலாம், அதற்கு மேல் வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பலரிடம் ஆதாரம், ஆவணங்கள் இல்லாமல் புகார் தருகின்றனர். அவர்கள் வழங்கும் புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியவில்லை. கந்துவட்டிக்காரர்களுக்கு சாதகமாக செயல்படும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என அவர் தெரிவித்தார்.


செய்தி: திரு. தாஹீர், கீழை


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு தொடரும் கோரிக்கை!!

No comments :
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு ரயில் பெட்டிகள் அறிவிப்பு வசதி, மேற்கூரையில்லாததால், பயணிகள் தவித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். ராமநாதபுரத்தில் இருந்து சென்னை, மதுரை, கன்னியாகுமரி, திருப்பதி ஆகிய பகுதிகளுக்கும் தினசரி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ரயில் நிலையத்தில் தெற்கு பகுதியில் பாதி இடத்திலும், வடக்குப்பகுதியில் பாதி இடங்களிலும் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் மேற்கூரை இல்லை. இதன் காரணமாக கோடை வெயில் கொளுத்தும் நேரங்களில் பயணிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். மழை நேரங்களில் ஒதுங்க இடம் இல்லாமல் பயணிகள் தவித்து வருகின்றனர்.

பயணிகள் காத்திருக்கும் நிலையில் ரயில்கள் பெட்டிகளின் கோச்கள் இருக்கும் இடத்தினை அறிவிப்பு செய்யப்படும். பிளாட்பாரங்களில் வயதானவர்கள், குழந்தைகளுடன் வரும் பயணிகள் எந்த பெட்டி, எந்த இடத்தில் இருக்கும், என தெரியாமல் தவித்து வருகின்றனர். பொதுவாக ரயில் நிலையங்களில் பிளாட்பாரங்களில் இது போன்று பெட்டிகள் எந்த இடத்திற்கு வரும் என்பது குறிப்பிடப்பட்டு  டிஜிட்டல் போர்டில் தெரியும். ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இந்த வசதி செய்யப்படவில்லை. இதன் காரணமாக பயணிகள் சிறிது நேரம் மட்டுமே நிற்கும் ரயிலில், தங்கள் டிக்கெட் பதிவு செய்த பெட்டியை தேடி அலையும் நிலை ஏற்படுகிறது.

இது போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் ரயில் நிலையத்தில் பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.
ரயில் நேரங்கள், ரயில் கட்டணம், தற்போது ரயில் வந்து கொண்டிருக்கும் இடம் பற்றி அறிந்து கொள்ள பயணிகளுக்கு தொடுதிரை கணினி வசதி செய்யப்பட்டிருந்தது. இது பழுது காரணமாக செயல்படாமல் உள்ளது.

பயணிகள் தொடு திரைகளை கண்டு ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
இரவு நேரங்களில் போதிய விளக்கு வசதிகள் இல்லை. ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மூன்று உயர் கோபுர மின் விளக்குகள் எரிவதில்லை.


இரவு நேரங்களில் ரயில் நிலையத்திற்கு வரும் பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இருளில் பயத்துடன் பயணிகள் காத்திருக்கும் நிலை உள்ளது. ரயில்வே நிர்வாகத்தினர் இது போன்ற பயணிகள் அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

கருப்பு தினமாக: தி.மு.க. சார்பில் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்!!

No comments :
மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து ஒரு ஆண்டு நிறைவடைந்த தினத்தை கருப்பு தினமாக அறிவித்து தி.மு.க. சார்பில் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி ராமநாதபுரத்தில் மாவட்ட தி.மு.க. சார்பில் கருப்பு தினமாக கடைப்பிடித்து நேற்று காலை அரண்மனை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன் தலைமை தாங்கினார்.
தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சுப.த.சம்பத், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் துரை, மாவட்ட துணை செயலாளர் சங்கு முத்துராமலிங்கம், இலக்கிய அணி கிருபானந்தம், பெரியபட்டிணம் நகர் செயலாளர் அப்துல்மஜீது, மாவட்ட காங்கிரஸ் தலைவர் தெய்வேந்திரன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான், மாவட்ட தலைவர் வருசை முகம்மது, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் ரஜிசேதுபதி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது திடீரென மழை பெய்தது. இந்த மழையையும் பொருட்படுத்தாமல் தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.


ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் திவாகரன் பேசியதாவது:

கடந்த ஆண்டு நவம்பர் 8–ந்தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்ததால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் முழு அளவில் பாதிக்கப்பட்டனர். திருமணம் உள்ளிட்ட வீட்டு நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் அவதிப்பட்டனர். வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள பணத்தினை உங்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்வோம் என்று கூறி பிரதமர் மோடி மக்கள் உழைத்து தங்களின் வங்கி கணக்கில் சேர்த்து வைத்த பணத்தை எடுக்க முடியாத நிலைக்கு தள்ளியது. தங்களின் பணத்தை எடுக்க காத்திருந்து கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியாகினர்.

பண மதிப்பிழப்பினால் ஏற்பட்ட சோக நிகழ்வினை மக்கள் யாரும் மறக்க மாட்டார்கள். மத்திய அரசின் இந்த தவறான நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இன்றுவரை அதில் இருந்து மீள முடியவில்லை. சிறு, குறு வியாபாரிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில்களை மூடிவிட்டு சென்றுவிட்டனர். மக்களின் அன்றாட வாழ்க்கை முறையே பரிதாபமாக மாறிவிட்டது. தவறான முடிவால் மக்களை மிகவும் துயரத்திற்கு மத்திய அரசு உள்ளாக்கிவிட்டது. இவ்வாறு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு கொடி அணிந்தும் தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்டினர்.


செய்தி: தினதந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)