Sunday, May 17, 2015
சென்னையில் போட்டியிடுகிறார் ஜெயலலிதா!?? ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. வெற்றிவேல் ராஜினாமா!!
சென்னை ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. வெற்றிவேல் தனது சட்டமன்ற
உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகரும் அவரது ராஜினாமாவை உடனடியாக
ஏற்றுக் கொண்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் ஸ்ரீரங்கம்
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக முதல்வர் பதவியை இழந்தார் அதிமுக
பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
இந்நிலையில், சொத்துக்குவிப்பு
மேல்முறையீட்டு வழக்கில் அவரை கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதனால்
அவர் மீண்டும் முதல்வராவதில் இருந்த சட்டச்சிக்கல் தீர்ந்தது. எனவே, எம்.எல்.ஏ.க்கள் கூடி அவரை மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுப்பார்கள் என்றும், பின்னர் இடைத்தேர்தல் மூலம் மீண்டும் ஜெயலலிதா சட்டசபைஉறுப்பினர் ஆவார்
என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், ஜெயலலிதா சென்னைத் தொகுதி
ஒன்றில் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாயின. தற்போது இந்தத் தகவலை உறுதி
செய்யும் வகையில் சென்னை ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. வெற்றிவேல் தனது சட்டமன்ற
உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகரும் உடனடியாக அவரது ராஜினாமாவை
ஏற்றுக் கொண்டுள்ளார். ஜெயலலிதாவே நேரில் அழைத்து வெற்றிவேலை ராஜினாமா செய்யச்
சொன்னதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. ராஜினாமா செய்த வெற்றிவேல் அதிமுகவைச்
சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பு காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக இருந்தவர் வெற்றிவேல்.
பின்னர் அங்கிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். தற்போது அவரது பதவி விலகல் மூலம்
சென்னையில் ஜெயலலிதா போட்டியிடும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. தொகுதி காலி -
அதி வேக அறிவிப்பு! ராஜினாமா ஏற்ற கையோடு இதுதொடர்பான அறிவிக்கையையும் சபாநாயகர்
தனபால் அவசரமாக வெளியிட்டார். மேலும் தொகுதி காலியாக இருப்பதாகவும் சபாநாயகர்
அறிவித்துள்ளார்.
தொகுதி காலியாகி விட்டால் அங்கு 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா போட்டியிடுவதற்கு வசதியாகவே வெற்றிவேல் ராஜினாமா, அதை சபாநாயகர் வேகமாக ஏற்றது, தொகுதி காலியாக இருப்பதாக
வேகமாக அறிவித்தது ஆகியவை நடந்தேறியுள்ளதாக கருதப்படுகிறது.
No comments :
Post a Comment