(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, May 28, 2015

ராமேசுவரம் -சென்னை ரெயிலில் பெண்கள் பெட்டியில் முதல் முறையாக சி.சி.டி.வி. காமிரா!!

No comments :
கொள்ளை மற்றும் ஈவ் டீசிங் குற்றங்களை தடுக்கும் வகையில் சென்னை–ராமேசுவரம் ரெயிலில் பெண்கள் பெட்டியில் முதல் முறையாக சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்பட்டு உள்ளது.

ரெயில்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பு கருதி, கார்டு பயணம் செய்யும் கடைசி பெட்டியின் முன்னதாக பெண்கள் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பெண்கள் பெட்டிக்குள் நுழைந்து பலாத்காரம், நகை பறிப்பு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுவதாக அவ்வப்போது புகார்கள் வருகின்றன.

கேரளாவில் பெண்கள் பெட்டியில் தனியாக பயணம் செய்த ஒரு பெண், பலாத்காரம் செய்யப்பட்டு ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டார். இதில் தொடர்புடைய குற்றவாளிக்கு கேரள நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்தது. அத்துடன் ரெயிலில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுரையும் வழங்கி இருந்தது.

இந்த நிலையில் தேசிய பெண்கள் கமிஷன் விடுத்த வேண்டுகோளின்படி இந்த ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டில் பெண்கள் பெட்டியில் சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் உள்ள ரெயில்களில் சி.சி.டி.வி. காமிரா பொருத்தும் பணி தொடங்கி உள்ளது.
தென்னக ரெயில்வேயில் முதல் முறையாக சென்னையில் இருந்து ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண்கள் பெட்டியில் சி.சி.டிவி. காமிரா பொருத்தப்பட்டது.

இது குறித்து ரெயில்வே பாதுகாப்பு போலீசார் கூறியதாவது:–
பெண்கள் பெட்டியின் 2 நுழைவு வாயில்களிலும் 2 காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் பதிவாகும் காட்சிகள், கார்டு பெட்டியில் உள்ள கம்பியில்லா ஆண்டனா மூலம் சென்னை ரெயில்வே கட்டுப்பாட்டு மையத்தில் சேமிக்கப்படும்.

பெண்கள் பெட்டியின் நுழைவுவாயிலில் இக்காமிராக்கள் பொருத்தப்பட்டிருப்பதால் பெட்டிக்குள் நுழையும் வரை காமிரா முழுமையாக பதிவு செய்கிறது. இதனால் ரெயில்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை விரைவில் கண்டறிந்து கைது செய்ய முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தனர்.

செய்தி: தினசரி நாளிதழ்

No comments :

Post a Comment