(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, August 25, 2015

ராமநாதபுரம் மாவட்டத்தின் நீர்ஆதாரத்தை பெருக்க 5 ஆயிரம் பண்ணைக் குட்டைகள் அமைக்க ரூ.500 கோடி நிதி!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தின் நீர்ஆதாரத்தை பெருக்க 5 ஆயிரம் பண்ணைக் குட்டைகள் அமைக்க ரூ.500 கோடி நிதியை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கியிருப்பதாக மக்களவை உறுப்பினர் அ.அன்வர்ராஜா திங்கள்கிழமை பேசினார்.

ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் காரீப் முன்பருவ கையேட்டினை வெளியிட்டு அவர் மேலும் பேசியதாவது: 

தென்னை விவசாயத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பின்னோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. வேளாண்மைத் துறையில் ஏராளமான தொழில் நுட்பங்கள் இருந்தும் அவை சாதாரண விவசாயிகளை இன்னும் சென்றடைய வில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் நீராதாரத்தை பெருக்கி விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ.500 கோடி நிதி ஒதுக்கி 5 ஆயிரம் பண்ணைக் குட்டைகளை அமைக்க உத்தரவிட்டுள்ளார். 

இந்தியாவிலேயே சூரியஒளி வெப்பம் குறையாமல் உள்ள மாவட்டம் ராமநாதபுரம். எனவே தான் கமுதியில், சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்ட ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன என்று அவர் பேசினார்.

விழாவுக்கு ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆர்.ஹரிவாசன், நபார்டு வங்கி மேலாளர் சி.மதியழகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சு.சுரேஷ்பாபு, கால்நடைத் துறை துணை இயக்குநர் மு.பாலச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் ஐ.சீகன்பால் வரவேற்றார். விழாவில் தோட்டக் கலைத் துறை துணை இயக்குநர் பா.இளங்கோவன், மீன் வள உதவி இயக்குநர் பிரதீப்குமார், தென்னை விவசாயிகள் சங்கத் தலைவர் அ.செல்லத்துரை அப்துல்லா, வேளாண்மைத் துறை செயற்பொறியாளர் மு.யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அறிவியல் மைய உதவிப் பேராசிரியர் ம.சாந்தஷீலா நன்றி கூறினார்.

 விழாவில் 40 ஆயிரம் விவசாயிகளின் செல்லிடப் பேசிகளுக்கு ஒலிவடிவ குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கும் செய்தியையும் எம்.பி. அ.அன்வர்ராஜா வெளியிட்டார். இதில் விவசாயிகளுக்கு இலவசமாக இடுபொருள்களும் வழங்கப்பட்டன. வேளாண் கருவிகள் தொடர்பான கண்காட்சியும் நடந்தது.

செய்தி: தினசரிகள்

No comments :

Post a Comment