(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, August 15, 2015

69வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றினார் முதல்வர் ஜெயலலிதா.!!

No comments :
69வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் சனிக்கிழமை காலை தேசிய கொடியை ஏற்றினார் முதல்வர் ஜெயலலிதா.அதனைத் தொடர்ந்து பேசிய அவர், 

அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த அனைத்து வீரர்கள் மற்றும் தலைவர்களை நினைவு கூறுவதற்காக இந்த நாளை நாம் கொண்டாடி வருகிறோம். சுதந்திரத்தின் அச்சாணியாக விளங்குவது பொருளாதார சுதந்திரம். ஏற்றத்தாழ்வு இல்லாத நிலையே உண்மையான சுதந்திரம். அனைவருக்கும் தேவையான வாழ்வாதாரம் கிடைப்பதே உண்மையான சுதந்திரம். 

கடந்த 4 ஆண்டுகளில் 54 கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஏழைகளுக்கு ஏற்றம் தரும் கல்விக்கு தமது அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் 72,843 ஆசிரியர்கள் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 182 ஆரம்ப பள்ளிகள் கடந்த 4 ஆண்டுகளில் தொடங்கப்பட்டுள்ளன. 

4 ஆண்டு ஆட்சியில் நாலாபுரமும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மனின் வழிதோன்றல்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1000லிருந்து ரூ.5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1000 லிருந்து ரூ.11,000 ஆக உயர்த்தப்பட உள்ளது. இவ்வாறு சுதந்திர தின உரையில் பேசினார்.
No comments :

Post a Comment