(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, August 31, 2015

ராமநாதபுரம்-ராமேசுவரம் சாலை அகலப்படுத்தப்படுகிறது!!

1 comment :
ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே சாலையை அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரம் வரை உள்ள 55 கிலோ மீட்டர் தூர தேசியநெடுஞ்சாலை தற்போது 7 மீட்டர் அகலத்தில் உள்ளது. இந்தநிலையில் இந்த சாலை மற்றும் தனுஷ்கோடி முகுந்தராயர்சத்திரம் வரை உள்ள சாலையை அகலப்படுத்த தேசியநெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.96 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து சாலையை அலப்படுத்துவதற்கான பணிகள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ராமநாதபுரம் புறநகர் பகுதி முதல் வழுதூர், பிரப்பன்வலசை, வேதாளை வரையிலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரம் தனுஷ்கோடி முகுந்தராயர்சத்திரம் வரையிலும் தற்போது 7 மீட்டர் அகலத்தில் உள்ள சாலை 10 மீட்டர் அகல சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முழுமையாக இன்னும் 6 மாதத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் ராமேசுவரம் நகரில் ஏற்பட்டு வரும்போக்கு வரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வுகாண ராமேசுவரம் பஸ் நிலையத்தில் இருந்து ரெயில்வே நிலையம் பின்புறம் வழியாக தனுஷ்கோடி நம்புநாயகி அம்மன் கோவில் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் ரூ.34 கோடி மதிப்பில் புதிதாக புறவழிச்சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது. இந்த புறவழிச்சாலையிலேயே மேம்பாலம் அமைத்து ரெயில்வே நிலையம் மற்றும் பஸ் நிலையத்தை இணைக்கும் வகையில் ஒரு சாலையும் மற்றொரு பகுதியில் பஸ் நிலையத்தில் இருந்து தனுஷ்கோடி சாலையை இணைக்கும் வகையில் ஒரு சாலையும் அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. விரைவில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ராமேசுவரம் பகுதியில் புறவழிச்சாலை பணிகள் முடியும் பட்சத்தில் பல வருடங்களாக ராமேசுவரம் நகரில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்று கூறப்படுகின்றது.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

1 comment :

Post a Comment