(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, August 15, 2015

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு துணை தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டு உள்ள அரசு தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.


வருகிற 17–ந்தேதி முதல் 26–ந்தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். முந்தைய பருவங்களில் தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள், அவர்கள் விருப்பப்பட்ட பாடங்களில் தற்போது தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

அறிவியல் பாடத்தில் செய்முறை தேர்வில் தேர்ச்சி பெற்று அறிவியல் கருத்தியல் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மட்டுமே கருத்தியல் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். செய்முறை தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிப்பு பெற்றவர்களும் அறிவியல் கருத்தியல் தேர்வினை தற்போது எழுதலாம்.


2014–15–ம் கல்வியாண்டில் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு 80 சதவீதம் வருகையுடன் பயிற்சி பெற்றவர்கள் அனைத்து பாடங்களிலும் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். இந்த வகை தேர்வர்கள் 1.10.2014 அன்று 14½ வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மெட்ரிக் அல்லது ஆங்கிலோ இந்திய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி தோல்வியுற்றவர்கள் தற்போதுள்ள சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படுவதால் அறிவியல் செய்முறை பயிற்சி பெற்றவர்கள் செய்முறை தேர்வு உள்பட அனைத்து பாடங்களையும் திரும்ப எழுத வேண்டும். அறிவியல் பயிற்சி பெறாதவர்கள் கருத்தியல் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்ய கல்வி மாவட்ட வாரியாக அரசுத்தேர்வுகள் சேவை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தனித்தேர்வர்கள் இந்த மையங்களுக்கு சென்று தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.


வெளிமாநில, வெளிநாடு வாழ் தனித்தேர்வர்கள் நேரடியாக சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்க இயலாத சூழ்நிலையில் உரிய ஆவணங்கள் மற்றும் புகைப்படத்துடன் குடும்ப உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் மூலம் சென்னை அரசு தேர்வுகள் இயக்கக இணை இயக்குனர் பணியாளர் அலுவலகத்தில் குறிப்பிட்ட நாளுக்குள் நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம். வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் படித்து தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் இடப்பெயர்வு சான்றிதழ், இணைச்சான்றிதழ் பெற்று சமர்ப்பித்தபின் அரசுத்தேர்வுகள் சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.


தேர்வுக்கட்டணம்
தேர்வுக்கட்டணம் ரூ.125 மற்றும் பதிவுக்கட்டணம் ரூ.50–ம் சேர்த்து ரூ.175 பணமாக செலுத்த வேண்டும். பார்வையற்றோருக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், டிஸ்லெக்சியா, நரம்பியல் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட தேர்வர்கள் தாங்கள் சொல்வதை எழுதுபவர், கூடுதலாக ஒரு மணி நேரம் போன்ற குறிப்பிட்ட சலுகைகளை பெற விரும்பினால் உரிய மருத்துவ சான்றிதழ்களை இணைத்து தனியே ஒரு சலுகை கோரும் கடிதத்தை தமது விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 

தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்த பிறகு தனித்தேர்வர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அரசு தேர்வு மையங்களில் விண்ணப்பத்தினை பதிவுசெய்யும்போது ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பாடங்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல் அல்லது 8–ம் வகுப்பு தேர்ச்சி, 9, 10–ம் வகுப்பு படித்ததற்கான மாற்றுச்சான்றிதழின் சுய சான்றொப்பமிட்ட நகல், அல்லது 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றமைக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ், அறிவியல் பாட தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் செய்முறை பயிற்சி முடித்ததற்கான அத்தாட்சி சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்று இணைக்க வேண்டும். மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் தேர்வு எழுதி தோல்வியுற்றவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அரசு தேர்வுகள் சேவை மையங்களில் ஒப்படைக்க வேண்டும். 

இத்தகைய இணைப்புகளை சமர்ப்பிக்கும் தனித்தேர்வர்களின் விண்ணப்பங்களே ஏற்றுக்கொள்ளப்படும். இணைப்பு இல்லாத விண்ணப்பங்கள் மற்றும் தபால் மூலம் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்த தகவலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு தெரிவித்தார்.


No comments :

Post a Comment