(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, August 1, 2015

சகலகலா வல்லவன் - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
நடிகர்கள்: ஜெயம் ரவி, அஞ்சலி, த்ரிஷா, விவேக், சூரி, பிரபு, ராதாரவி ஒளிப்பதிவு: யுகே செந்தில்குமார்
இசை: எஸ்எஸ் தமன்
தயாரிப்பு: லட்சுமி மூவி மேக்கர்ஸ்
இயக்கம்: சுராஜ்

தென்காசியில் சேர்மன் பதவிக்கான மோதலில் ஜெயம் ரவி குடும்பத்துக்கும், சூரி குடும்பத்துக்கும் பெரும் பகை. ஆனால் அந்தப் பகையை, சூரியின் அக்கா மகள் அஞ்சலியைக் கண்டதும் மறந்து நட்பாகிறார் ஜெயம் ரவி. இருவரும் ரொம்ப சீக்கிரமே காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்த நேரம் பார்த்து ஜெயம் ரவியின் சொந்த மாமாவான ராதாரவி, தன் மகள் த்ரிஷாவின் திருமணத்துக்காக ஊரையே சென்னைக்கு அழைக்கிறார். திருமண நேரத்தில் மாப்பிள்ளை ஜான் விஜய்யை போலி என்கவுன்டர் வழக்கில் கைது செய்ய, வேறு வழியின்றி த்ரிஷாவை மணக்கிறார் ஜெயம் ரவி.



ஆனால் ரவிக்கும் த்ரிஷாவுக்கும் ஒத்துப் போகவில்லை. இருவரும் எலியும் பூனையுமா தினசரி மோதிக் கொள்ள, விவாகரத்து கோருகிறார் த்ரிஷா. ஊருக்கு வந்து தன்னுடன் 30 நாட்கள் தங்கினால் விவாகரத்து தருவதாக கூறுகிறார் ரவி. த்ரிஷாவும் வருகிறார். அதன் பிறகு நடந்தவற்றை திரையில் பாருங்கள். இயக்குநர் சுராஜின் பெரிய பலமே காமெடி. ஆனால் இந்தப் படத்தில் அந்தக் காமெடி விவேக் தயவால் ரசிக்கும்படி உள்ளது. சூரி வரும் காட்சிகளில் சில எரிச்சல் ரகம்.

ஜாலி இளைஞராக வரும் ஜெயம் ரவி ரசிக்கும்படி நடித்திருக்கிறார். அவருக்கும் அஞ்சலிக்கும்தான் பொருத்தம் பர்ஃபெக்டாக உள்ளது. நீச்சல் கற்றுக் கொள்ளும் காட்சி, அருணாச்சலம் படத்தில் வருவது போன்ற பச்சக் முத்தக் காட்சிகளும் கிளு கிளு ரகம். த்ரிஷாவுக்கு மேக்கப் சரியில்லையா.. முகமே அப்படித்தானா தெரியவில்லை.

கவர்ச்சி காட்டுவதில் புதிய எல்லையைத் தொட்டிருக்கும் அஞ்சலி எடைக்குறைப்பில் கவனம் செலுத்துவது நல்லது. பல காட்சிகள் ஏற்கெனவே பார்த்தது போலவும், எதிர்ப்பார்த்த மாதிரியே இருப்பதும் சுராஜ் திரைக்கதையின் பலவீனம். குறிப்பாக அந்த சண்டைக் காட்சி அநாவசியம்.

விவேக்கின் காமெடி சில இடங்களில் அடல்ட்ஸ் ஒன்லி ரகம் என்றாலும், அவரும் செல்முருகனும் அடிக்கும் லூட்டிதான் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. ஜெயம் ரவி போடும் 'ஒரு மாதம் என்னோடு வந்து தங்கு' என்ற கண்டிஷனெல்லாம் ஏற்கெனவே பல படங்களில் பார்த்தவைதானே!

யுகே செந்தில்குமாரின் ஒளிப்பதிவு ஓகே. ஆனால் அதே ஓகேவை தமனின் இசைக்கு சொல்ல முடியாது. மூன்று பாடல்களை கண்ணை மூடிக் கொண்டு தூக்கிவிடலாம். வழக்கமான காமெடி மசாலாதான். ஆனால் ஆங்காங்கே சுவையயான சிரிப்புக்கு உத்தரவாதம் இருப்பதால் அப்பாடக்கராக நிற்கிறான் சகலகலா வல்லவன்!


விமர்சனம்: ஒன் இண்டியா


No comments :

Post a Comment