(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, October 27, 2015

சார்ஜாவில் கஷ்டப்படும் தன் கணவரை மீட்டுத் தருமாறு மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பெண் கோரிக்கை!!

No comments :
துபை நாட்டில் சார்ஜாவில் கஷ்டப்படும் தன் கணவரை மீட்டுத் தருமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரிடம் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பெண் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

திருப்புல்லாணி அருகே வடக்கு கும்பரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி ஆனந்த வள்ளி (33). முனீஸ்வரன் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் துபை நாட்டில் உள்ள சார்ஜாவுக்கு பெயிண்டர் வேலைக்காக அழைத்து செல்லப்பட்டாராம். அங்கு சம்பளமும், உணவும் தராமல் துன்புறுத்துவதாகவும், அவரை விடுவிக்கவும் மறுப்பதாகவும் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு தெரிவிக்கிறாராம். மேலும் விசா தேதி முடிந்தும் தன்னை அனுப்பி வைக்க வில்லை என்றும் கூறுகிறாராம்.

அங்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள அவரை மீட்டுத் தருமாறு ஆனந்தவள்ளி ஆட்சியர் க.நந்தகுமாரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.

மகனை மீட்டுத்தர பெற்றோர் மனு: முதுகுளத்தூர் தாலுகா சாம்பக்குளம் அருகேயுள்ளது அப்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.அர்ச்சுனனும், இவரது மனைவி முனியம்மாளும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரை சந்தித்து கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது: குவைத் நாட்டில் உள்ள கம்பெனிக்கு ஓட்டுநர் வேலைக்கு எங்கள் மகன் சண்முகவேலை, பரமக்குடியைச் சேர்ந்த முகவர் மூலம் அனுப்பி வைத்தோம். அங்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே சம்பளமாகத் தருகிறார்களாம். பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்குமாறு துன்புறுத்துகிறார்களாம். தான் கொத்தடிமையாக நடத்தப்படுவதாக தொலைபேசியில் எங்கள் மகன் தெரிவித்தார். எனவே அவரை மீட்டு எங்களிடம் சேர்க்க வேண்டும். மேலும் அந்த முகவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment