(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, November 21, 2015

ஒரு நாள் இரவில் - தமிழ் திரை விமர்சனம்

No comments :
நடிப்பு: சத்யராஜ், அனுமோள், யூகி சேது, ஆர் சுந்தர்ராஜன், வருண் ஒளிப்பதிவு: எம்எஸ் பிரபு
இசை: நவீன்
பிஆர்ஓ: நிகில்
தயாரிப்பு: ஏஎல் அழகப்பன், சாம் பால்
இயக்கம்: ஆன்டனி


மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற ஷட்டர் படத்தின் ரீமேக்தான் இந்த ஒரு நாள் இரவில். எடிட்டர் ஆன்டனி இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார் இந்தப் படம் மூலம். எப்போதுமே இந்த மாதிரி ரீமேக் படங்கள் ஒரிஜினலோடு ஒப்பிட வைக்கும். தவிர்க்க முடியாத ஒப்பிடல் அது. இந்தப் படத்தையும் அப்படி ஒப்பிட்டால்... இருங்க, விமர்சனத்தை முழுசா படிச்சிடுங்க!

சிங்கப்பூர் ரிட்டர்ன் சத்யராஜ் கொஞ்சம் பசையுள்ள பார்ட்டி. மனைவி, இரு குழந்தைகள் என கவுரவமான குடும்பம். மூன்று கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். அதில் ஒரு கடை காலியாக இருக்க, அதை நண்பர்களுடன் சரக்கடிக்க பயன்படுத்துகிறார்.

வீட்டில் ஒரு பிரச்சினை. மகள் தன் ஆண் நண்பனுடன் சகஜமாகப் பழகுவதை தவறாக நினைத்து, திடீரென ஒரு நாள் கல்லூரியை விட்டு நிறுத்தி, கல்யாண ஏற்பாடு செய்கிறார். வீட்டில் தகராறு. டென்ஷனில் கடைக்குள் நண்பர்களுடன் சரக்கடிக்கிறார். நண்பர்கள் சென்ற பிறகு, தனது ஆஸ்தான ஆட்டோ ஓட்டுநர் பையனை அழைத்துக் கொண்டு மேலும் சரக்கு வாங்கக் கிளம்புகிறார். அப்போதுதான் பஸ் ஸ்டாண்டில் 'கஸ்டமருக்காகக்' காத்திருக்கும் அனு மோளைப் பார்க்கிறார். மனசில் சபலம் தட்டும் நேரம், அனுமோளும் அவரைப் பார்த்து கண்ணசைக்க, ஆட்டோ பையனே ரேட் பேசி அழைத்து வருகிறான். எந்த ஹோட்டலிலும் ரூம் போட முடியாத சூழல். 
சரி, காலியாக இருக்கும் கடைக்குள்ளேயே வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்து உள்ளே போகிறார்கள். அப்போது அனுமோள் சாப்பாடு கேட்கிறாள். கடையின் ஷட்டரை வெளிப்பக்கம் பூட்டிவிட்டுப் போகிறான் பையன். போனவன் போனவன்தான்... குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டியதாக போலீசில் மாட்டிக் கொள்கிறான். அடுத்த நாள் இரவு வரை அவன் ஷட்டரைத் திறக்க வரவே இல்லை.

கடைக்குள் மாட்டிக் கொண்ட சத்யராஜ் - அனுமோள் நிலை என்ன? எப்படி வெளியே வந்தார்கள்? அந்தப் பையன் திரும்பி வந்தானா? என்பதெல்லாம் திரையில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யங்கள். ஒரு சின்ன சபலம்... ஒரு சினிமா இயக்குநர், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் ஒரு சினிமா பிரபலம்... இந்த மூவரும் செய்யும் ஒரு தவறு, எந்த மாதிரி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை கவித்துவமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். மலையாளத்தில் இரண்டரை மணி நேரப் படம் இது. தமிழில் இரண்டு மணிநேரப் படமாகச் சுருக்கி விறுவிறுப்பாகத் தந்திருக்கிறார் ஆன்டனி. சத்யராஜ் ஓகே. இப்படிச் சொல்லக் காரணம், மலையாளத்தில் லால் அத்தனை கச்சிதமாகப் பொருந்தியிருப்பார். ஆனால் தமிழில் சத்யராஜின் தோற்றம்.. வயது முதிர்ச்சி இந்தப் பாத்திரத்தில் அவரை பொருந்த விடவில்லை. இன்னொன்று, தனது சபலத்தையும், அந்தப் பெண் மீதான ஈர்ப்பையும் அவர் சரியீகக் காட்டவே இல்லை. வேண்டா வெறுப்பாகவே அவர் நடந்து கொள்வதால் அந்தக் காட்சிகள் ஈர்ப்புடன் இல்லை. ஆனால் ஷட்டரிலிருந்து வெளியே வந்த பிறகு வீட்டில் மனைவியைப் பார்க்க முடியாமல், மகளை எதிர்கொள்ள முடியாமல் அவர் தவிப்பதும், கலங்குவதும் க்ளாஸ் நடிப்பு. அவருக்கு அதிகபட்சம் ஒரு பக்க வசனம் மட்டும்தான்.

கால் கேர்ளாக வரும் அனுமோள் ஆடையை விலக்காமலேயே அபாரமான கவர்ச்சியைக் காட்டுகிறார். பிரமாதமான நடிப்பு. தான் யார் என்பதை தன் நண்பன் தெரிந்து கொண்டதை உணரும் அந்த நொடியில் அவர் காட்டும் 'எக்ஸ்பிரஷன்' அடேங்கப்பா...!

சத்யராஜின் மூத்த மகளாக வரும் அந்தப் பெண்.. ஒரு காட்சி என்றாலும் நிறைவாகச் செய்திருக்கிறார். எம்எஸ் பிரபுவின் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் பலம். சினிமா ஆர்வமுள்ள ஒரு இன்ஸ்பெக்டராக அவர் வரும் ஒரு காட்சி கலகலப்பு. இயல்பான, உறுத்தாத பின்னணி இசை. இயக்குநராக முதல் படத்தை பாதுகாப்பாகத் தேர்வு செய்துள்ளார் ஆன்டனி. எடிட்டரே இயக்குநர் என்பதால் செம ஷார்ப்பாக 'கத்தரி' போட்டிருக்கிறார்!


ஒரு நாள் இரவில் ஒரு முறை பார்த்து ரசிக்கக் கூடிய படம்!

விமர்சனம்: ஒண் இண்டியா

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment