(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, December 5, 2015

ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கும், ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கும் பல ஆண்டுகளுக்கு பிறகு வைகை தண்ணீர் வந்தடைந்தது!!

No comments :
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு பல ஆண்டுகளுக்கு பிறகு வைகை தண்ணீர் செல்கிறது.இதை சுப.தங்கவேலன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
தமிழகத்தின் 2-வது மிகப்பெரிய ஏரி என்று அழைக்கப்படும் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் 25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை பகுதிகளுக்கு இந்த கண்மாய் மற்றும் இதன் 72 துணை கண்மாய்கள் மூலம் பாசன வசதி கிடைத்து வருகிறது. ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு ஒவ்வொரு ஆண்டும் வைகை தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுப்பதும், ஆனால் தண்ணீர் வராமல் போவதும் வழக்கமாக இருந்து வந்தது. இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வைகை அணையில் இருந்து ராமநாபுரம் மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுஉள்ளது. இந்த 2 கண்மாய்களுக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதை திருவாடானை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சுப.தங்கவேலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 



அப்போது அவர் கூறியதாவது:- 

வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் அரசடிவண்டல் மதகு அணையை வந்தடைந்துள்ளது. அங்கிருந்து ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கும், ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் முன்னிலையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுஉள்ளது. இதற்காக கீழநாட்டார் கால்வாய் தலைமதகு திறக்கப்பட்டுஉள்ளது. 

ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை தண்ணீர் வேகமாக பாய்ந்து செல்கிறது. பல ஆண்டுகளுக்கு பின்பு ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் ராமநாதபுரம் பெரிய கண்மாய்களுக்கு வைகை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துஉள்ளனர். 

இவ்வாறு அவர் கூறினார். 

அவருடன் அச்சுந்தன்வயல் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ்கண்ணா, ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய் ஆயக்கட்டுதாரர்கள் பனிக்கோட்டை மோகன், தும்படைக்காகோட்டை ஊராட்சி தலைவர் காளிதாஸ், அழகர்தேவன்கோட்டை ஊராட்சி தலைவர் சேகர், ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி கவுன்சிலர் அழகேசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு நிர்வாகி கிருஷ்ணன் உள்பட பலர் சென்றனர்.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment