முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, February 27, 2015

காக்கி சட்டை - தமிழ்

No comments :
தொலைக்காட்சியில் முகம் காட்டிய நாளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்து, தனக்கான ரசிகர் வட்டத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சிவகார்த்திகேயன், முதன்முதலாக காக்கி சட்டை அணிந்து போலீஸ் வேடம் ஏற்று நடிக்கிறார் என்பதால், அவரது ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகிலும் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து நிறைவளிக்கிறது ‘காக்கி சட்டை’.
படத்தில் அதிரடி ஆக்சன் இருந்தாலும், தனது வழக்கமான காமெடியிலும் கலக்கி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
மதிமாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிவகார்த்திகேயன், படத்தில் ஆரம்பத்தில் அமைதியான போலீசாக வந்து காமெடி பண்ணுகிறார். ஒரு கட்டத்தில் அவரது வாழ்க்கையில் ஏற்படும் திருப்பத்தால் தான் யார் என்பதை நிரூபிக்கும்விதமாக சீரியசாக களமிறங்கி அதிரடி ஆக்சனில் தூள் கிளப்புகிறார்.
மனித உடலுறுப்புகளை வியாபாரப் பொருளாக பாவித்து விற்பனை செய்யும் கொடூர குற்றத்தை கண்டுபிடித்து, அதை முழுமையாக சிவகார்த்திகேயன் எப்படி அழிக்கிறார் என்பது படத்தின் அடிப்படை கதை. இதில் இடையிடையே ரசிக்கும்படியாக ஸ்ரீதிவ்யாவுடன் ரொமான்ஸ் செய்கிறார்.
சிவகார்த்திகேயனுக்கு போலீஸ் வேடம் நன்றாக பொருந்தியுள்ளது. காமெடியிலும், ஆக்சனிலும் அசத்தியிருக்கிறார்.
ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வரும் பிரபு மனதில் நிற்கிறார். நாயகி ஸ்ரீதிவ்யா படம் முழுவதும் அழகு பதுமையாக வந்து ரசிகர்களை கொள்ளை கொள்கிறார்.
இம்மான் அண்ணாச்சியின் ஒன்லைனர் காமெடி ரசிக்க வைக்கிறது. ஆனால் அவரின் வழக்கமான காமெடி மிஸ்ஸிங்.
படத்தில் மழையில் வரும் சண்டைக் காட்சி பிரமிக்க வைக்கிறது. அஜித், விஜய், ரஜினி போன்ற உச்சநட்சத்திரங்களின் ரசிகர்களை கவரும் விதமாக ஆங்காங்கே வசனங்கள் வைத்து கைதட்டல் வாங்குகிறார் இயக்குனர் துரை செந்தில்குமார். ‘எதிர்நீச்சல்’ படத்தைப் போலவே இந்த படத்திலும் அனைத்துத் தரப்பினரையும் கவரும் விதமான காட்சிகளை அவர் அமைத்திருப்பது பாராட்டுக்கு உரியது.
சுகுமாரின் ஒளிப்பதிவு வண்ணமயமாக இருக்கிறது; வண்ணங்களை அள்ளித் தருகிறது. அனிருத்தின் இசையில் அனைத்துப் பாடல்களும் ஏற்கனவே செம ஹிட். பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார்.
முதல் பாதி காமெடியாகவும், இரண்டாவது பாதி சீரியசாகவும் செல்வதால், சிவகார்த்திகேயனின் ஏனைய படங்களிலிருந்து இது வித்தியாசமாக இருக்கிறது.
‘காக்கி சட்டை’– ஜெயிக்கும் சட்டை!

குவைத் நாட்டில் பணிபுரிய அரசு வேலைவாய்ப்பு நிறுவனம் ஆள் சேர்ப்பு

No comments :
இந்திய அரசின் தொலைத்தொடர்பு துறையின் குவைத் நாட்டு திட்டப்பணிகளுக்கு சென்னையில் அரசு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யும் பணி இன்றும், நாளையும் நடைபெறுகிறது.இது குறித்து தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கூறியுள்ளதாவது: இந்திய அரசு தொலைத்தொடர்பு துறையின் குவைத் நாட்டு திட்டப்பணிகளுக்கு தொலைத்தொடர்பு துறையில் பணிபுரிய 3 ஆண்டுகளுக்கு செல்லத்தக்க பாஸ்போர்ட் மற்றும் 50 வயதிற்குட்பட்ட டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 ஆண்டு அனுபவம் பெற்ற சிவில் மேற்பார்வையாளர்கள், 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்ற கொத்தனார்கள் மற்றும் சமையலர்கள், துவக்கப்பள்ளி தேர்ச்சியுடன் 5 ஆண்டு ஆண்டு அனுபவம் பெற்ற லேபர்கள், 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்ற ரிக்கர் பணி அறிந்த லேபர்கள் மற்றும் டிப்ளமோ தேர்ச்சியுடன் சிவில் பிரிவில் 5 ஆண்டு அனுபவம் பெற்ற ஆட்டோகாட் இயக்குபவர்கள் தேவைப்படுகின்றனர். 

மேலும் குவைத் நாட்டில் 2 ஆண்டுகள் பணிபுரிந்து 30 மாதங்களுக்கு செல்லத்தக்க பாஸ்போர்ட் மற்றும் குவைத் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் தேவைப்படுகின்றனர். குவைத் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு திரும்பி வந்த பிறகு 2 ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ற ஊதியத்துடன் இலவச விசா, விமான டிக்கெட், இருப்பிடம் மற்றும் இதர சலுகைகள் வேலையளிப்பவரால் வழங்கப்படும். 


இத்தகுதியுடையவர்கள் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம், கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் இரண்டு நகல்கள், வெள்ளை நிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட 6 புகைப்படம் மற்றும் ஒரிஜினல் பாஸ்போட்டுடன் பிப்ரவரி 27, 28 தேதிகளில் ஏதாவது ஒரு நாளில் காலை 8 மணிக்கு நேர்முகத் தேர்விற்கு நேரில் செல்ல வேண்டும். நேர்முகத் தேர்வு ‘’எண்.42, ஆலந்தூர் காலை, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், திரு.வி.க.தொழிற்பேட்டை, சென்னை’’ என்ற முகவரியிலுள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நடைபெறும். மேலும் விபரங்களுக்கு 044-22502267, 22505886, 08220634389 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

மாவட்ட வாலி பால், MSEC பெணகள் , ஹமீதியா பள்ளிஆண்கள், JVC க்ள்ப் அனிகள் வெவ்வேறு பிரிவுகளில் சாம்பியன்ஸ்

No comments :
ராமநாதபுரம் மாவட்ட பெண்கள் கைப்பந்து போட்டியில் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி அணி முதலிடத்தை பிடித்து சாம் பியன் பட்டத்தை பெற்றது.  ராமநாதபுரம் மாவட்ட வாலிபால் கழகம் மற்றும் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி இணைந்து 17வது ஆண்டு மாவட்ட அளவிலான ஆண்கள், பெண்கள் மற் றும் பள்ளி மாணவர்களுக் கான ‘சாம்பியன்’ கைப்பந்து போட்டி கீழக்கரையில் நடந்தது. கல்லூரி முதல்வர் முகம்மது ஜஹாபர் போட்டிகளை துவக்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட கைப்பந்துக் கழக தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி முன்னிலை வகித்தார். கைப்பந்துக் கழக செயலாளர் சோமசுந்தரம் வரவேற்றார். ஆண் கள் பிரிவில் 18 அணிகளும், பெண்கள் பிரிவில் 6 அணிகளும், பள்ளி மாணவர்கள் பிரிவில் 15 அணிக ளும், மாணவிகள் பிரிவில் 4 அணிகளும் பங்கேற்றன. 


பெண்கள் பிரிவில் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி அணி முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டதையும், ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி அணி 2ம் இடத்தையும், கீழக்கரை தாசிம்பீவி மகளிர் கல்லூரி அணி 3ம் இடத்தையும் பெற்றன. 
ஆண்கள் பிரிவில் ஜே.வி.சி அணி முதலிடத்தையும், மாரியூர் மக்கள் கைப்பந்து அணி 2ம் இடத்தையும், முகம்மது சதக் பொறியியல் கல்லூரி அணி 3ம் இடத்தையும் பெற்றன.  பள்ளி மாணவர்கள் பிரிவில் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், பரமக்குடி கே.ஜே.இ.எம். பள்ளி 2ம் இடத்தையும் பெற்றன. மாணவிகள் பிரிவில் ராமேஸ்வரம் எஸ்.பி.ஏ பள்ளி முதலிடத்தையும், மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளி 2ம் இடத்தையும் பெற்றன. 


மாலை நடந்த பரிசளிப்பு விழாவில் விளை யாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் சுந்தரராஜ், சாம்பியன் பட்டம் பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். மாவட்ட கைப்பந்துக் கழக நிர்வாகிகள் ராமசுந்தரம், தினேஷ்பாபு, செழியன் கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குநர் சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் நஜ்முதீன், மாவட்ட கைப்பந்துக் கழக நிர்வாகிகள் ரமேஷ்பாபு, ரமேஷ் செய்திருந்தனர்.

செய்தி; தினத்தந்தி

ராமநாதபுரம் மருத்துவமனையில் சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் டயாலிசிஸ் இயந்திரங்கள்

No comments :
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் டயாலிசிஸ் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளது என கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிலைக்கு உயர்த்தப்பட்டு பொதுமக்களுக்கு அனைத்து விதமான சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறுநீரக நோய் பாதிப்பிற்கான சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வகை சிகிச்சைகளும் சிறப்பு மருத்துவ நிபுணர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


சிறுநீரக நோய் சிகிச்சைக்காக இரண்டு டயாலிசிஸ் இயந்திரங்கள் மூலம் இம்மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு டயாலிசிஸ் இயந்திரம் தற்பொழுது நிறுவப்பட்டு, கூடுதலாக சிறுநீரக பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை பெற வரும் பயனாளிகளுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை வழங்கிட டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு சிகிச்சை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு டயாலிசிஸ் இயந்திரங்கள் ஒரு மாதத்திற்குள் வாங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளிகளுக்கு சிறுநீரக பாதிப்பிற்கான சிகிச்சை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அம்மருத்துவமனையில் சிறுநீரக நோய் சம்பந்தமான சிகிச்சை பெற்று வரும் அனைத்து நோயாளிகளும் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இம்மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தீன் கீழ் சிகிச்சை பெற்றிட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே சிறுநீரக நோய் பாதிப்புடையோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

செய்தி; தினத்தந்தி