முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, April 20, 2015

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்பு!!

No comments :
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள புரொ பேஷனரி அதிகாரி காலியிடங்களைப் பொது எழுத்துத் தேர்வு மூலமாக நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு : 01.04.2015 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.



தேர்ச்சி முறை:
முதல் கட்டத்தில் 100 மதிப்பெண்களுக்கான ஆன்-லைன் முறையிலான அப்ஜெக்டிவ் வகை பொது எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இரண்டாம் கட்ட பொது எழுத்துத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு அப்ஜெக்டிவ் வகையிலும், 50 மதிப்பெண்களுக்கு டெஸ்கிரிப்டிவ் வகையிலும் நடத்தப்படும். இதன் பின்னர் நேர்காணல் மற்றும் மருத்துவத் தகுதித் தேர்வு என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

தேர்வு மையங்கள்:
தமிழ் நாட்டில் சென்னை கோவை, சென்னை, மதுரை ஆகிய ஏதாவது ஒரு மையத்தில் இத்தேர்வை எதிர்கொள்ளலாம்.
விண்ணப்பக்கட்டணம்: எஸ்.பி.ஐயின் புரொபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க ரூபாய் 600/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத் திறனாளிகள் பிரிவைச் சார்ந்தவர்கள் ரூபாய் 100/- மட்டும் செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்களை ஆன் லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
முழுமையான தகவல்களை இணையதளத்தில் பார்த்து அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:
02.05.2015 விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: www.sbi.co.in


மண்டபம் ஒன்றியம், புதுமடத்தில் புதிய “ட்ரான்ஸ்ஃபார்மர்”

No comments :
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டபம் ஒன்றியம், புதுமடம் தெற்குத்தெருவில் சட்டமன்ற உறுப்பினரின் பெரும் முயற்சியால் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது ! !

இதன் தொடக்கவிழாவுக்கு ஊராட்சி தலைவர் தர்வேஸ் தலைமை தாங்கினார். இதில் மின்வாரிய என்ஜினீயர்கள் சின்னத்துரை, யோகானந்தம், ஜோசப் செல்வராஜ்,பால்ராஜ்,ஒன்றிய குழு உறுப்பினர் கானிதா பானு, பைத்துல்மால் தலைவர் அகமதுகனி, ஜமாத் தலைவர் செய்யது முஸ்தபா, வடக்குத்தெருஜமாத் அப்துல் காதர், முகம்மது முஸ்தபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


புதுமடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர்.முனைவர். M.H.ஜவாஹிருல்லா MLA அவர்களால் செய்யப்பட்ட மேம்பாட்டு பணிகள்:
புதுமடம் ஊராட்சி:
இந்து மயானம் சுற்றுசுவர் 8.10 லட்சம்
தெற்கு தெரு கபர்ஸ்தான் சுற்றுசுவர் 5.00
வடக்கு தெரு கபர்ஸ்தான் சுற்றுசுவர் 2.00
நடுத்தெரு கபர்ஸ்தான் சுற்றுசுவர் 4.00
அரசு மேனிலை பள்ளி கழிப்பறை 2.00
அகஸ்தியர் கூட்டம் இந்து மயானம் 5.00
அம்மாபட்டினம் அங்கன்வாடி 8.00
மாநாங்குடி ஊராட்சி:
தரவையில் தரைப்பாலம் மற்றும் சாலை 14.00
காரான் ஊராட்சி:
தலைதோப்பு கிராம அங்கன்வாடி 6.00
கும்பரம் ஊராட்சி:
அய்யப்புடா ஊரணி தடுப்புச்சுவர் மற்றும் படித்துறை 3.00
கோரவள்ளி ஊராட்சி:
நிழற்குடை மற்றும் தரவை தடுப்புச்சுவர் 6.00
தாமரைக்குளம் ஊராட்சி:
ஆதி திராவிடர் மயானம் 4.00
அரசு உயர்நிலை பள்ளியில் சிமின்ட் சாலை 3.00
நியாயவிலைக் கடை 8.00
என்மனம் கொண்டான் ஊராட்சி:
உச்சிபுளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சு.ழு. 2.35
மொத்தம் ரூ.77.85 லட்சங்கள்
இவை தவிர
உச்சிபுளி - புதுமடம் சாலை 2011 ம் ஆண்டு பெய்த மழையில் முற்றிலும் சேதமானபோது சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்து வெள்ள நிவாரண நிதியில் ரூ.ஐந்து லட்சம் செலவில் சாலை செப்பனிடப்பட்டது.
2013 ம் ஆண்டு முழுவதுமாக சாலையை மேம்பாடு செய்திட அமைச்சரிடமும், சட்டமன்றத்திலும் கோரிக்கை வைத்து ரூ.77 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கப்பட்டது.
தெற்கு தெரு பகுதியில் நிலவிய குறைந்த மின் விநியோகம் பிரச்சினை சரி செய்திட மின்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் கடையை அமைச்சரிடம் முறையிட்டு அப்புறப்படுத்தப் பட்டது.
கொப்பரை தேங்காய்க்கு நியாயமான விலை கொடுக்க வேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டதால் ரூ.35 என இருந்த தேங்காய் விலை ரூ.50 என உயர்த்தப்பட்டது.
புதுமடம் தெற்கு கடல் பகுதியில் நிலவும் கடல் அரிப்பு பிரச்சினை குறித்து எழுப்பப்பட்ட கோரிக்கை காரணமாக கடல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைத்திட நிபுணர் குழு மூலம் அரசு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
உச்சிபுளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் மருத்துவர் நியமிக்கப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் வாய்த்த கோரிக்கை காரணமாக அங்கு பெண் மருத்துவர் நியமிக்கபட்டுள்ளார்.
பழுதடைந்த என்மனம்கொண்டான் துவக்கப்பள்ளி குறித்து கோரிக்கை வைத்ததால் அதை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தென்னை விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க வழி செய்ய வேண்டும் என வாய்த்த கோரிக்கையை அடுத்து சொட்டுநீர் பாசனம் அமைக்க அரசு மானியம் வழங்க அறிவிப்பு செய்துள்ளது.
புதுமடத்தில் அரசு மகளிர் மேனிலை பள்ளி அமைக்க வேண்டும் என சட்டமன்றத்திலும், பள்ளிக்கல்வி அமைச்சரிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அரியமான் பீச் செல்லும் சாலை மற்றும் பாலம் பழுது குறித்து சட்டமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டதால் ஆட்சியர் ரூ.11.10 லட்சம் ஒதுக்கி மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்
புதுமடம் புதிய மின்மாற்றி சம்பந்தமாக ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மின்சாரத்துறை அமைச்சருக்கு அனுப்பிய கடிதம் : -
-----------------------------------------------------------------------------------------------------------------
பெறுநர்
மாண்புமிகு நத்தம் ஆர்.விசுவநாதன் அவர்கள்
எரிசக்தி துறை அமைச்சர்
சென்னை.
பொருள்: புதுமடம் ஊராட்சி - கூடுதல் மின்மாற்றி ஏற்படுத்துதல் தொடர்பாக
பார்வை: புதுமடம் ஊராட்சி தலைவரின் கோரிக்கை மனு
ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட புதுமடம் ஊராட்சி பகுதியில் மின் விநியோகம் பற்றாக்குறையாக உள்ளதாகவும் இதனால் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் உட்பட விளக்குகள் சரியாக எரிவதில்லை என்றும் பாhர்வையில் கண்ட மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான தேவைகள் முடிந்த பின் அதாவது இரவு 10 மணிக்கு பிறகுதான் விளக்குகள் எரிகின்றன என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
எனவே மாண்புமிகு அமைச்சர் அவர்கள் புதுமடம் ஊராட்சியின் கிழக்குப் பகுதியில் புதிதாக கூடுதல் மின்மாற்றி அமைத்து பகுதி மக்களின் மின்குறையை போக்கிட ஆவணச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
இவ்வாறு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்தும் அனுப்பிய கடிதத்தை தொடர்ந்து இக்கோரிக்கையை வலியுறுத்தி வந்ததின் அடிப்படையில் தற்போது பொதுமக்களுக்கு பெரிதும் சிரமத்தை ஏற்படுத்தி வந்த பெரும் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது பொதுமக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

செய்தி: இராமநாதபுரம் MLA அலுவலகம்

விபத்தில் மரணமடைந்த பள்ளப்பட்டி ஆலிம்கள், ஓட்டுநர், காயமடைந்தவர் குடும்பங்களுக்கு ரூ.3,25,654/-- நிதி உதவி!!

No comments :
விபத்தில் மரணமடைந்த பள்ளப்பட்டி ஆலிம்கள், ஓட்டுநர், காயமடைந்தவர் குடும்பங்களுக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) மூணேகால் இலட்சம் ரூபாய் நிதி உதவி!


சாலை விபத்தில் பலியான பள்ளப்பட்டி ஆலிம்கள், ஓட்டுநர் குடும்பத்திற்கும் மற்றும் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் ஆலிம் ஒருவருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) சார்பில் 3,25,654 (மூன்று இலட்சத்து இருபத்தைந்தாயிரத்து அறுநூற்றி ஐம்பத்தி நான்கு) ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.


கடந்த 03.04.2015 அதிகாலை செம்பட்டி அருகே சித்தையன்கோட்டை பிரிவில் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்த பள்ளபட்டி இளம் உலமாக்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்யுமாறு பள்ளப்பட்டி நகர ஜமாஅத்துல் உலமா சபை விடுத்த கோரிக்கையை குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் உலகம் முழுவதும் சேர்க்கும் பணியையும், குவைத்தில் நிதி திரட்டும் பொறுப்பையும் முன்னெடுத்து செய்தது.



பள்ளபட்டி நகர ஜமாஅத்துல் உலமா சபை செயலாளரின் வங்கிக் கணக்கு எண்ணிற்கும், கரூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளரின் வங்கிக் கணக்கு எண்ணிற்கும் சகோதர, சகோதரிகள் தாராளமாக உதவி அனுப்பியது அறிந்து குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் பேருவகை அடைந்தது.


இதன்றி, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை சார்பாகக் கடந்த 10.04.2015 வெள்ளியன்று ஜும்ஆவில் தமிழகமெங்கும் பொதுமக்களிடம் வசூல் செய்யப்பட்டதிலும் நம் சகோதரர்கள் தாராளமாக நிதியுதவி செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு பள்ளிவாசலிலும் அந்தந்த இமாம்களே முன் நின்று அக்கறையோடு இந்த நல்ல பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். நிதியுதவியும் வழங்கியிருக்கிறார்கள்.


16.04.2015 வியாழன் அன்று 11 பேர் கொண்ட உலமாக்கள் குழு பள்ளபட்டி சென்று, விபத்தில் இறந்த இளம் ஆலிம்களின் குடும்பத்தாரைச் சந்தித்து, நிதியுதவியை வழங்கிவிட்டு வந்துள்ளனர். இறந்தவர்களில் சிறுகுழந்தைகள் இருப்பவர்களுக்கு, குழந்தைகளின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத் தக்க நடவடிக்கையாகும்.


எவர் ஒரு முஃமினின் இவ்வுலக கஷ்டமொன்றை நீக்கி வைக்கின்றாரோ அல்லாஹ் அவரை விட்டும் மறுமையின் கஷ்டமொன்றை நீக்கி வைப்பான். எவர் கஷ்டத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவுகின்றாரோ அல்லாஹ் அவருக்கு உலகிலும் மறுமையிலும் கஷ்டங்களை நீக்கி வைத்து உதவுவான். மேலும், எவர் (ஆடை கொடுத்தோ அல்லது குறைகளை மறைத்தோ) ஒரு முஸ்லிமின் மானத்தை மறைக்கின்றாரோ அல்லாஹ் அவரது மானத்தை ஈருலகிலும் மறைப்பான். ஒரு அடியான் தனது சகோதரனுக்கு உதவியாக இருக்கும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவியாக இருக்கின்றான்என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அருள்மொழியை கவனத்தில் கொண்டு அம்மாபெரும் பணிகளில் பங்கெடுப்பதற்காக குவைத் வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுமைக்கும் நற்காரியங்களை எடுத்துரைக்கும் உன்னத பணிகளை கடந்த பத்து ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) சார்பில் அதன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் வழங்கிய மூன்று இலட்சத்து இருபத்தைந்தாயிரத்து அறுநூற்றி ஐம்பத்தி நான்கு (3,25,654) ரூபாய்களை காசோலை வழியாக பள்ளபட்டி நகர ஜமாஅத்துல் உலமா சபை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


நம் சகோதரர்களின் கொடையுள்ளம் பார்போற்றத் தக்கது. நிறைவான உதவியைத் தாராளமாக வழங்கியுள்ளார்கள். சமூக வலைத் தளங்களில் செய்தியறிந்து உதவிகளை அனுப்பிய நண்பர்களுக்கும், ஜும்ஆவில் தாராளமாக உதவிய பெருமக்களுக்கும், அதற்காக முன் நின்று உழைத்த மாநில, மாவட்ட, வட்ட ஜமாஅத்துல் உலமா சபை பெரியவர்களுக்கும், இமாம்களுக்கும், சகோதர, சகோதரிகளுக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் தமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.
இவர்கள் அனைவருக்கும், இனியும் உதவிகளை வழங்க இருக்கும் சகோதர, சகோதரிகளுக்கும் அருளாளன் அல்லாஹ் வளமான வாழ்க்கையை இம்மையிலும், சுகந்த சுவனத்தை மறுமையிலும் அருளி, பிரதிபலன் வழங்குவானாக!

நன்றி! வஸ்ஸலாம்.

அன்புடன்....
மவ்லவீ அல்ஹாஜ் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ - தலைவர்
மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., - பொதுச் செயலாளர்
மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்.


குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)