முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, May 10, 2015

பிகு (PIKU) - ஹிந்தி திரைவிமர்சனம்

No comments :
வயதானாலே குழந்தையாக மாறிவிடும் பெற்றோருக்கும் அவர்களின் குழந்தைகளுக்குமான பாசம் என்னவாக இருக்கும்? அவர்களுக்கான விருப்பம், சண்டை, சிரிப்பு, கோபம். இதுவே பிகு (இந்தி) திரைப்படம்.

70 வயதான அமிதாப் பச்சன்  வேலையிலிருந்து ஓய்வு பெற்று வீட்டில் இருக்கிறார். தன்னுடைய உடலின் மேல் அதிக அக்கறை எடுத்துக் கொள்பவர். பெரிய தொப்பையுடன் வயிற்றில் பிரச்னையால் அவதிப்படுகிறார். இவரின் மகளே பிகு (தீபிகா). கட்டிடக் கலை நிபுணராகப் பணிபுரிகிறார். 

வேலை டென்ஷன் இதற்கு நடுவில் சின்னச் சின்ன விஷயத்திற்கும் தீபிகாவை பாடாய்ப்படுத்தி எடுக்கிறார் அமிதாப்,அதனால் எப்போதுமே கோபத்துடனே திரையில் உலாவுகிறார் தீபிகா.  தந்தைக்காகவே திருமணம் செய்யாமல் அவரைக் கவனித்துக் கொள்கிறார்.  கால் டாக்சி ஓனரான இர்பான்கானின் நிறுவனத்திலிருந்தே தினமும் தீபிகாவை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல வண்டி வருகிறது. ஆனால் தினமும் எதாவது பிரச்னை வருவதால் அடிக்கடி சமாதானம் பேச தீபிகாவை சந்திக்கும் இர்பான் என்று கதை தொடங்குகிறது. 

உடல் நிலை சரியில்லாததால் தன் சொந்த ஊரான கோல்கட்டாவிற்கு செல்ல ஆசைப்படுகிறார் அமிதாப். கால் டாக்சி ஓனரான இர்பானே டிரைவராக தீபிகாவையும், அமிதாப் பச்சனையும் காரில் அழைத்துச் செல்கிறார். அந்த பயணத்தின் சுவாரசிய நிகழ்வு, சொந்த ஊரில் அமிதாப் செய்யும் அட்டகாசம், கடைசியில் அமிதாப் என்ன ஆனார் என்பதே கதையின் முடிவு.

அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே மற்றும் இர்பான் கான் ஆகிய இந்த மூன்று பேரைச் சுற்றி மட்டுமே கதை நகரருகிறது, ரசிக்கச் செய்கிறது. தேவையில்லாத காட்சிகள் என்று எதுவுமே இல்லாமல் சரியாக உருவாகியிருக்கிறது பிகு. 

ஒரு பார்ட்டியில் வெளிநாட்டு ரிட்டன் மாப்பிள்ளையை அமிதாப்பிற்கும் தீபிகாவிற்கும் அறிமுகம் செய்துவைக்கிறார்கள். உடனே அவனிடம், “ நான் ரொம்ப கோவப்படுவேன், என் பொண்ணு அத விட ரொம்ப கோவப்படுவா, நாங்க ரொம்ப சண்ட போடுவோம், உனக்கு எப்படிஎன்று அந்த மாப்பிள்ளையை பேசவிடாமல் மிரட்டி எடுக்கிறார் அமிதாப்.


இர்பான் கானுடன் வண்டியில் வரும் போது கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்து கொண்டிருக்கும் அமிதாப்பை, “ இப்படியெல்லாம் கேள்வி கேட்பதை விட்டுவிட்டு உங்களுக்கு என்ன பிரச்னைனு யோசிங்கனுசொல்லும் போது, வயிற்றுப் பிரச்னைக்கு துளசி சாப்பிட்டா சரியாகிடும், சைக்கிள் ஓட்டுனா ஈஸியா மோஷன் போகுனும் இர்பானின் ஒவ்வொரு அறிவுரையையும் அப்படியே செய்து சந்தோஷப்படும் இடங்களில் அமிதாப் நடிப்பு உச்சம். மோஷன் போகுறதையே பெரிய விஷயாமா நினைச்சி கஷ்டப்படும் அமிதாப்பிற்கு எப்படி மோஷன் போனா ஈஸியா இருக்குனு இர்பான் சொல்லிக் குடுக்கும் காட்சிகள் காமெடியின் உச்சம். சாதாரண வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதை அப்படியே ஒரே நேர்க்கோட்டில் பிரதிபலித்திருக்கிறார்கள்.

பயணத்தின் போது காதலில் விழும் தீபிகா, “ எங்க அப்பா இப்படித்தான், ஓகேன்னா கல்யாணம் பண்ணிக்கிறீயானு தீபிகா கேட்க, எங்க அம்மா ரொம்ப மோசமானவங்க, நீ ஓகேன்னா சொல்லுனுபுரிதலுடன் காதலை பரிமாறிக்கொள்ளும் காட்சிகள் சிலிர்க்க வைக்கின்றன. இந்தக் காட்சியைத் தவிர காதலுக்குப் படத்தில் இடமில்லை என்பது மற்றுமொரு ப்ளஸ்.  இர்பான்கானின் நடிப்பு சில இடங்களில் ஒகே என்றும், சில இடங்களில் கடுப்ஸ் ஆஃப் இந்தியாவாக இருப்பது மைனஸ். அமிதாப்பிற்கு இணையாக கண்களாலே நடித்துவிட்டுப் போகிறார் தீபிகா. திரை நகர்வு மெதுவாக இருந்தாலும் இரண்டு மணி நேரம் கடந்ததே தெரியாத அளவிற்கு முகம் சுழிக்காமல் ரசிகர்களைப் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் சூஜித் சிர்கார். 

தந்தைக்கும் மகளுக்கும் இடையே என்னென்ன பிரச்னைகள் வரும், அதை மகள் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும், மகள்  தன் தந்தையை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை இயல்பாகப் பதிவு செய்திருக்கிறது பிகு.
-சினிமா விகடன் குழு- 


எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் விண்ணப்பங்கள் நாளை முதல் விநியோகம்!!

No comments :
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. பிளஸ் 2 படிப்பில் உயிரியல்- இயற்பியல்- வேதியியல் ஆகிய பாடங்களை எடுத்துப் படித்த மாணவர்களை எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர்ப்பதற்கு விண்ணப்ப விநியோகம் நாளை தொடங்குவதாக மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த விண்ணப்பங்களை சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். இந்தாண்டு மொத்தம் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன.


எம்.பி.பி.எஸ். விண்ணப்பத்தைப் பெற, வேண்டுகோள் கடிதத்துடன் 'Secretary, Selection Committee, Kilpauk, Chennai' என்ற பெயரில் விண்ணப்பக் கட்டணமான ரூ. 500-க்கு வரைவுக் காசோலை அளிக்க வேண்டும்.


சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org மூலமும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப விநியோகம் தொடங்கும் நாளை பகல் 12 மணிமுதல் சுகாதாரத் துறையின் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.


எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் விளையாட்டு வீரர்- மாற்றுத் திறனாளிகள்- முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், முதல் தலைமுறை மாணவர்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் படிவங்கள் ஏற்கெனவே சுகாதாரத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் சேர்த்து ஒரே விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அளித்தால் போதுமானது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் சேர வரும் 28-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.



பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்துசேர, வரும் 29-ஆம் தேதி கடைசி நாளாகும். ஜூன் 15-ஆம் தேதிக்குள் தரவரிசைப் பட்டியலை வெளியிட மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது. ஜூன் மாதம் 3-ஆவது வாரத்தில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடைபெறும் என எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த ஆண்டுகளைப் போன்றே இந்த ஆண்டும் பி.. கலந்தாய்வுக்கு முன்னதாக எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடைபெற உள்ளது.