முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, July 5, 2015

ராமநாதபுர மாவட்டத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் அதானி குழுமம்!!

No comments :
ராமநாதபுரத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்க அதானி குழுமம்- தமிழக அரசு இடையிலான ஒப்பந்தம் தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று காலை கையெழுத்தாகியுள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், "தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் 4,536 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதானி குழும நிறுவனங்கள் அமைக்கவுள்ள ஐந்து சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்களிலிருந்து மொத்தம் 648 மெகாவாட் அளவிற்கு சூரிய மின்சாரம் வாங்குவதற்கான மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தங்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கும் அதானி குழும நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தானது.

தமிழ்நாடு சூரிய மின்சக்தி கொள்கை 2012-ன்படி, சூரிய மின்சக்தி வாங்குவதற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 12.9.2014-ல் நிர்ணயித்துள்ளபடி யூனிட் ஒன்றுக்கு 7 ரூபாய் 1 பைசா என்ற விலையில் மின்சாரம் கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், 436 மெகாவாட் அளவிற்கு சூரிய மின்சாரம் வாங்குவதற்காக 31 சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்களுடன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஏற்கெனவே மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தம் செய்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், அதானி குழும நிறுவனங்களால் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் 4,536 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்களிலிருந்து 648 மெகாவாட் அளவிற்கு சூரிய மின்சாரம் வாங்குவதற்கு இன்று கையெழுத்தான ஒப்பந்தங்களுடன் சேர்த்து, இதுவரை மொத்தம் 1084 மெகாவாட் சூரிய மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களின் மூலம் தமிழ்நாட்டில் சூரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனங்களால் 7,588 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நிறுவப்படவுள்ள சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை எடுத்து செல்வதற்கு, ராமநாதபுரம் மாவட்டம் - கமுதியில் 435 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் நிறுவும் பணிகள் மற்றும் விருதுநகர் மாவட்டம் - திருச்சுழி அருகே 47 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 230 கிலோ வோல்ட் புதிய முத்துராமலிங்கபுரம் துணை மின் நிலையம் நிறுவும் பணிகள் ஆகியவை தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


மேலும், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 208 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மின் பாதை அமைக்கும் பணிகள் மற்றும் துணை மின் நிலைய மேம்பாட்டு பணிகள் ஆகிய பணிகளும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை ஒப்பந்தங்கள் செய்துள்ள நிறுவனங்கள் தவிர மேலும், 107 சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்கள் 2722.5 மெகாவாட் நிறுவுதிறன் கொண்ட சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்களை நிறுவிட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடம் பதிவு செய்துள்ளனர். அதில் மொத்தம் 1132 மெகாவாட் திறனுள்ள 53 சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்களின் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டங்களுக்கான மின்னோட்ட பகுப்பாய்வு முடிக்கப்பட்டுள்ளது. சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்கள் நில ஆவணங்களை சமர்ப்பித்து, வைப்புத் தொகை செலுத்தியவுடன், மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தங்கள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழ்நாடு சூரிய மின்சக்தி கொள்கை 2012-ல் குறிப்பிட்டுள்ள இலக்கினை விரைந்து எட்டும் வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அனைத்து நடவடிக்கைகளையும் விரைவுபடுத்தி வருகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதில் மகிழ்ச்சி. இந்த முயற்சி வெற்றியடையும் என நான் நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


செய்தி: ஜெயா நியூஸ்

வேலைவாய்ப்பற்ற ராமநாதபுர இளைஞர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் உதவித்தொகை!!

No comments :
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.


உதவித்தொகை

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு மாதம் ரூ.100-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.150-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.200-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.300-ம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும். உதவி தொகை பெற விரும்புபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராகவும். தங்களது பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்குள்ளும், மற்றவர்கள் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 50,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது. எனினும் தொலைதூர கல்வி அல்லது அஞ்சல் வழிக்கல்வி மூலம் கல்வி படிப்பவர்கள் உதவித்தொகை பெறலாம். 

சுய உறுதிமொழி:

மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. இவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்றிருந்தால் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்திருந்தால் ரூ.300-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ.375-ம், பட்டதாரிகளுக்கு ரூ.400-ம் உதவித்தொகையாக வழங்கப்படும். பயனாளிகள் வேறு எந்த ஒரு அலுவலகத்திலும் உதவித் தொகை பெறக்கூடாது. 

எனவே தகுதிஉள்ளவர்கள் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்து கல்வி சான்றுகள், அடையாள அட்டை போன்றவற்றுடன் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் வழங்கப்படும். ஏற்கனவே உதவி தொகை பெற்று வருபவர்கள் வங்கி கணக்கு புத்தகத்துடன் சுய உறுதிமொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இந்த தகவலை கலெக்டர் நந்தகுமார் தெரிவித்தார். 


கீழக்கரை நகர்மன்ற 20ஆவது வார்டு தி.மு.க. உறுப்பினர் ராஜினாமா!!

No comments :
கீழக்கரை நகர்மன்ற 20ஆவது வார்டு தி.மு.க. உறுப்பினர் ராஜினாமா செய்தார்.

கீழக்கரை நகர்மன்றக் கூட்டம் ஜூலை 2ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் 20ஆவது வார்டு உறுப்பினர் ஹாஜா நஜிமுதீன் (திமுக) தனது வார்டில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டி நகர்மன்ற தலைவர் ராவியத்துல் கதரியாவிடம் தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதத்தை கொடுத்தார். இந்நிலையில் அவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக நகர்மன்ற தலைவர் சனிக்கிழமை அறிவித்தார்.

இது குறித்து ஹாஜா நஜிமுதீன் கூறியதாவது: எனது வார்டில் உள்ள மக்களின் பிரச்னைகள் குறித்து பலமுறை நகர்மன்ற கூட்டத்திலும், நேரடியாகவும் முறையிட்டு வந்துள்ளேன். கோரிக்கைக்கு செவி சாய்க்காததால் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன் என்றார். 

நகர்மன்றத் தலைவி ராவியத்துல் கதரியா கூறுகையில், வெள்ளிக்கிழமை உறுப்பினரின் ராஜினாமா கடிதம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசின் ஒப்புதலின்படி அவரது கடிதம் ஏற்கப்பட்டு விட்டது என்றார்.கீழக்கரை சுற்றுப்புற பகுதிகளில் நாளை ஜூலை 6ம் தேதி மின் தடை!!

No comments :
கீழக்கரையில் திங்கள்கிழமை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.கீழக்கரை உபமின் நிலையத்தில் திங்கள்கிழமை (ஜூலை 6) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழக்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள அலவாய்கரைவாடி, மாயாகுளம், முஹம்மது சதக் கல்லூரிகள், ஏர்வாடி, உத்திரகோசமங்கை, தேரிருவேலி, பாலையரேந்தல் மற்றும் மோர்குளம் ஆகிய கிராமங்கள் அனைத்தும் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கங்காதரன் தெரிவித்துள்ளார்.

நோன்பு காலமக இருப்பதால் இந்த பராமரிப்பு பணிகளை மற்றொரு நாள் திட்டமிட தன்னார்வக்குழுக்களும், கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி: திரு. தாஹீர், கீழக்கரை

பரமக்குடி அருகே பைக் விபத்து, வாலிபர் இறப்பு!!

No comments :
பரமக்குடி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

 சிவகங்கை மாவட்டம் அதிகரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராஜேந்திரன் (35). இவர் தனது நண்பரான மலைராஜூடன் பைக்கில் திருவாடி கிராமத்தில் நடந்த காது குத்து நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் பைக்கில் அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர். சரஸ்வதி நகர் பகுதியில் மதுரையிலிருந்து ராமநாதபுரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து பைக் மீது மோதியது. 


இதில் பலத்த காயமடைந்த இருவரும் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் செல்லும் வழியிலேயே ராஜேந்திரன் உயிரிழந்தார். மலைராஜ் மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டார்.

 இதுகுறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் ராஜேந்திரனின் தந்தை ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி: தினமணி