முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, August 27, 2015

அழகிய கடன் ஐஏஎஸ் அகடமி நுழைவுத் தேர்வுக்கு ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம்!!

No comments :
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட தேர்வுகளை எழுத இலவசப் பயிற்சியை அழகிய கடன் ஐஏஎஸ் அகடமி வழங்குகிறது. இதில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை www.akias.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக "அழகிய கடன் ஐஏஎஸ் அகாதெமி'யின் தலைவர் மௌலானா ஷம்சுதீன் காஸிமி தெரிவித்துள்ளதாவது:

இந்திய இஸ்லாமிய எழுத்தறிவு இயக்கம் (இல்மி) நடத்தும் "அழகிய கடன் ஐஏஎஸ் அகாதெமி' சார்பில், கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளித்து வருகிறது. 15 மாணவிகள், 60 மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம், புத்தகங்கள், தரமான பயிற்சி உள்பட அனைத்தும் எந்தக் கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கப்படுகின்றன. 


இந்த மையத்தில் பயின்ற முதல் குழுவிலேயே ஒரு மாணவர் யுபிஎஸ்சி தேர்விலும், 25 மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி போன்ற மத்திய, மாநில அரசு பணித் தேர்வுகளிலும் வெற்றி பெற்று பணியில் சேர்ந்துள்ளனர். இந்த அமைப்பு தன்னுடைய பணியை விரிவுபடுத்தும் வகையில், இந்த ஆண்டு முதல் சிறுபான்மை முஸ்லிம்கள் மட்டுமன்றி அனைத்து மதங்களையும் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, ஏழை மாணவர்களுக்கு போட்டித் தேர்வுப் பயிற்சிகளை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. இதற்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 30-ஆம் தேதி சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இந்த நுழைவுத் தேர்வுக்கு ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலமாக பதிவு செய்யலாம் என்றார் அவர்.


மாணவர்களே முந்துங்கள்!!!!!

உச்சிப்புளியில் ரெயில்வே மேம்பாலம் சர்வே பணிகள் நேற்று தொடங்கின!!

No comments :
உச்சிப்புளியில் ரெயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான சர்வே பணிகள் நேற்று தொடங்கின. 

ராமேசுவரத்தில் இருந்து தினமும் சென்னை,மதுரை மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளுக்கு எக்ஸ்பிரஸ், பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்கள் ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே செல்லும்போது உச்சிப்புளி பகுதியில் உள்ள ரெயில்வேகேட் அடைக்கப்படுவது வழக்கம். இவ்வாறு ரெயில்வேகேட் அடைக்கப்படுவதால் வாகனங்களில் ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகளும், பொது மக்களும் நீண்டநேரம் காத்திருக்கவேண்டிய நிலை உள்ளது. 


அவ்வப்போது கேட் பழுதாகிவிடுவதால் எந்த ஒரு வாகனமும் செல்ல முடியாமல் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதையடுத்து உச்சிப்புளி ரெயில்வேகேட்டை கடந்து செல்ல ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, உச்சிப்புளி ரெயில்வே கேட் பகுதியில் புதிதாக ரெயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான சர்வே பணிகள் நேற்று தொடங்கியது. இதற்காக தென்னக ரெயில்வே கட்டுமான பிரிவு என்ஜினீயர்கள் விஜய்ஆனந்த், வினேஷ், சாஜின் ஆகிய 3 பேர் கொண்ட குழுவினர் நவீன கருவிகளை கொண்டு பாலம் அமைப்பதற்கான இடத்தை சர்வே செய்து வருகின்றனர். 


இந்த பணிகள் முடிந்த பிறகு, ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும். பின்னர் ரெயில்வே வாரியத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் உச்சிப்புளி ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த பாலம் கட்டப்பட்டால், பொதுமக்கள் வாகனங்களில் எந்த சிரமமும் இல்லாமல் ராமேசுவரத்திற்கு சென்றுவர முடியும். 

செய்தி: தினத்தந்தி

ராமநாதபுரத்தில் காவல் சார்பு-ஆய்வாளர் பணியிட நேர்முகத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி!

No comments :
காவல் சார்பு-ஆய்வாளர் பணியிட நேர்முகத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற இருக்கிறது.

 இது குறித்து, ஃபோகஸ் அகாதெமியின் ஒருங்கிணைப்பாளர் 
மு. சிபிகுமரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் 94 பின்னடைவுக் காலியிடங்கள் உள்பட சுமார் 1,078 பொது மற்றும் துறை சார்ந்த சார்பு-ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வு முடிந்து, வரும் 3.9.2015 ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.

 இதற்கான ஏற்பாடுகளை, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் செய்து வருகிறது. இந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்க உள்ளவர்களுக்கு வழிகாட்டும் விதமாக, ஃபோக்கஸ் அகாதெமி பயிற்சி வகுப்பினை இலவசமாக நடத்துகிறது.

நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் தங்களது சுய விவரங்களுடன், ராமநாதபுரம் ரயில்வே பீடர் சாலையில் வலம்புரி வணிக வளாகத்தில் உள்ள ஸ்பெக்டிரம் ஹெல்த் கிளப் அலுவலகத்தில் நேரில் வந்து முன்பதிவு செய்யவேண்டும். 

மேலும் விவரங்களுக்கு 99626-12726 அல்லது 95970-12144 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கீழக்கரை அருகே குடும்பத்தகராறில் ஒருவர் தீக்குளிப்பு!!

No comments :
கீழக்கரை அடுத்துள்ள திருப்புல்லாணி அருகே குதக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் கணேசன் (34). இவர், தினமும் குடிபோதையில் மனைவி காளிமுத்துவிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மனைவியை பயமுறுத்துவதற்காக கணேசன் தனது உடலில் தீ வைத்துக் கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக உடலில் தீப்பற்றி படுகாயமடைந்த கணேசன், சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து, அவரது மனைவி காளிமுத்து அளித்த புகாரின்பேரில், திருப்புல்லாணி காவல் உதவி ஆய்வாளர் ராஜாதேசிங்கு வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

செய்தி: தினமணி