Saturday, October 3, 2015
ஏர்வாடி மாரியம்மன்கோவிலில் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான முளைப்பாரி திருவிழா, தர்கா பிராத்தனையுடன் நடந்தது!!
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி யாதவர்தெருவில்
அமைந்துள்ள வாழவந்தான் மாரியம்மன்கோவில் முளைப்பாரி திருவிழா நேற்று நடைபெற்றது.
விழாவையொட்டி ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். தலைவர்
முத்துமணி, செயலாளர் பாலமுருகன், பொருளாளர் வடமலை ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலம்
ஏர்வாடி தர்காவை வந்தடைந்தது. பின்னர் 3 முறை முளைப்பாரி ஊர்வலம் தர்காவை சுற்றி வந்தது.
அதன்பின்னர் தர்காவில் முளைப்பாரி வைக்கப்பட்டு மதநல்லிணக்கத்திற்கு
எடுத்துக்காட்டாக செய்யது இஸ்மாயில் ஆலிம் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை
செய்யப்பட்டது. இதில் தர்கா கமிட்டி நிர்வாகி துல்கருணை பாட்சா லெவ்வை உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.
தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஏர்வாடி
கடற்கரையில் கரைக்கப்பட்டது. ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
கீழக்கரையில் பழமையான கட்டிடத்தின் மாடி சுற்றுச்சுவர் இடிந்து விபத்து, ஒருவர் படுகாயம்!!
கீழக்கரையில் பழமையான கட்டிடத்தின் மாடி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் முதியவர் படுகாயமடைந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் கடந்த 1973-ல் கட்டப்பட்ட மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் கீழ்பகுதியில் 2 கடைகளும், மேல்பகுதியில் 2 மாடிகளில் 2 வீடுகளும் உள்ளன. இந்த கட்டிடம் பழுதடைந்து சுவர்கள் விரிசலடைந்து காணப்பட்டன.
இந்த நிலையில் நேற்று இந்த கட்டிடத்தின் மேல்மாடி சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. 3 புறமும் சுவர் அடிமட்டத்தோடும், மேற்கூரையின் ஒருபகுதியும் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது.
இந்த சுவரின் ஒரு பகுதி அருகில் இருந்த ஓட்டு கட்டிடத்தின் மேல் விழுந்தது. இதில் ஓடுகள் உடைந்து அதில் இளநீர் வியாபாரம் செய்து கொண்டிருந்த நாகேந்திரன்(வயது 63) என்பவரின் மேல் விழுந்தது. இதில் படுகாயமடைந்த நாகேந்திரன் உடனடியாக சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். மாடிப்பகுதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தபோது அதிர்ஷ்டவசமாக கீழ்பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. சுவர் இடிந்து விழுந்ததால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கீழக்கரை போலீசார் அங்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். பட்டப்பகலில் முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் கட்டிட சுற்றுசுவர் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து நகரசபை ஆணையாளர் மருது கூறியதாவது:- கீழக்கரையில் இதுபோன்று ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள் குறித்து கண்டறிந்து சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு நோட்டீசு வழங்கப்படும். மேலும், ஆபத்தான கட்டிட அமைப்புகளை கொண்ட உரிமையாளர்கள் உடனடியாக பேராபத்து ஏற்படும் முன்னர் தங்களின் கட்டிட பழுதுகளை சரிசெய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
செய்தி: தினத்தந்தி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரம் கதர் விற்பனை நிலையத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனை!!
ராமநாதபுரம் கதர் விற்பனை நிலையத்தில் காந்தி
ஜெயந்தியையொட்டி தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட கலெக்டர்
நந்தகுமார் தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம் கதர் விற்பனை நிலையத்தில்
காந்திஜெயந்தியையொட்டி தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா
நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் கலந்து கொண்டு காந்தியடிகளின்
திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி
விற்பனையை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:–
தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம், கிராமப்புற கைவினைஞர்களை கொண்டு நூற்பு மற்றும் நெசவு
தொழிலை முழுநேரம் மற்றும் பகுதி நேர வேலை வாய்ப்பு வழங்கி செயல்பட்டு வருகிறது.
பொருளாதாரத்தில் நலிவடைந்த, வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டும் என்பதைக்
கருத்தில் கொண்டு தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியம் தமிழக அரசால்
செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு
அண்ணா, பெரியார், காமராஜர் மற்றும் காந்தியடிகள் உள்ளிட்ட தலைவர்களின் பிறந்த
தினத்தை முன்னிட்டும் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் மத்திய மற்றும்
மாநில அரசுகள் கதர் ரகங்களுக்கு 30 சதவீதம்
சிறப்பு தள்ளுபடி வழங்கிட அனுமதி அளித்துள்ளது.
மேலும் அரசுப்பணியாளர்களும், தனியார் நிறுவன ஊழியர்களும் கதர் ரகங்கள் கடன் முறையில்
வாங்கி பயன்பெறும் வகையில் அரசால் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. மதுரை கதர்
கிராமத் தொழில்கள் உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில் ராமநாதபுரம்
மாவட்டத்தில் 2 கதர் விற்பனை நிலையங்கள், 1 கிராமிய நூற்பு நிலையம், 1 கதர் உப கிளை ஆகியவற்றில் கதர் விற்பனை, கதர் நூல் உற்பத்தி, கதர் துணி உற்பத்தி நடைபெற்று வருகிறது.
தள்ளுபடி சலுகை
இந்த அலுவலக கட்டுப்பாட்டில் செயல்படும் கதர்
அங்காடிகளுக்கு 2014–ம் ஆண்டு தீபாவளி சிறப்பு
விற்பனைக்காக ரூ.25 லட்சம் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.14 லட்சத்து 74 ஆயிரம்
மதிப்பில் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 2015–ம்ஆண்டிற்கு ரூ.25 லட்சம் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு
வழங்கியுள்ள தள்ளுபடி சலுகைகளை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கதர், பட்டு, பாலிஸ்டர், உல்லன் ரகங்கள் மற்றும் ரெடிமேட் சட்டைகள், மெத்தைகள், தலையணைகள்
போன்றவற்றை வாங்கி பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார். விழாவில் உதவி போலீஸ்
சூப்பிரண்டு சர்வேஸ்ராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்குமார், பனைவெல்லம் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனர்
முத்துக்குமார், மதுரை கதர் கிராமத்தொழில்கள் கண்காணிப்பாளர்
சீனிவாசன், ராமநாதபுரம் கதர் கிராமத் தொழில் மேலாளர்கள்
ராமரத்தினம், சரவணபாண்டியன், கதிஜாபீவி மற்றும் தியாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி: தினத்தந்தி
செய்தி: தினத்தந்தி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரத்தில் இறால் பண்ணை உரிமையாளர் வீட்டில் ரூ. 25 லட்சம் நகை, பணம் கொள்ளை!!
ராமநாதபுரத்தில் இறால் பண்ணை உரிமையாளர் வீட்டில்
வெள்ளிக்கிழமை இரவு கதவை உடைத்து ரூ. 25 லட்சம் நகை, பணம் திருடு போனது.
ராமநாதபுரம் நகர் பாம்பூரணி சாலையில் இறால் பண்ணை நடத்தி வருபவர் முகம்மது
ரபீக் (51).
இவர் கடந்த 3 தினங்களுக்கு முன்பு
குடும்பத்துடன் பெரியபட்டிணத்தில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவிற்கு சென்று
விட்டு வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பினார். அப்போது, வீட்டின் பின்புற கிரில் கதவுகள் உடைக்கப்பட்டிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த
ரபீக், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 54 பவுன் நகைகள்,
ரொக்கம் ரூ.3.30லட்சம் உள்பட
மொத்தம் ரூ.25
லட்சம் மதிப்புள்ள பொருள்களை திருடிச் சென்றது தெரியவந்தது.
மேலும், கால் தடயங்களை அழிப்பதற்காக பினாயிலை தரையில் ஊற்றிச் சென்றிருப்பதும் தெரிய
வந்தது.
தகவலறிந்த ராமநாதபுரம் ஏ.எஸ்.பி. சர்வேஷ் ராஜ் நேரில்
சென்று சம்பவஇடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இது தொடர்பாக கேணிக்கரை
காவல் ஆய்வாளர் (பொறுப்பு)விவேகானந்தன்,சார்பு-ஆய்வாளர் கணேசலிங்க
பாண்டியன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)