முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, October 12, 2015

ராமநாதபுரம் புனித ஜெபமாலை அன்னை ஆலய தேர் பவனி!!

No comments :

 ராமநாதபுரத்தில் புனித ஜெபமாலை அன்னை ஆலயத் திருவிழா தேர் பவனி சனிக்கிழமை நடைபெற்றது.

அன்னை ஆலயத் திருவிழா அக்.2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 9 நாள்கள் மாலையில் நவநாள் திருப்பலியும், ஜெப மாலையும் நடைபெற்றது. விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான அன்னை தேர்பவனி சனிக்கிழமை நடந்தது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித ஜெபமாலை அன்னையின் திருஉருவம் தாங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி வந்தது.

முன்னதாக தேர்பவனியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்புத் திருப்பலிக்கு பாளையங்கோட்டை புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் முனைவர்.எல்.பிரான்சிஸ் சேவியர் தலைமை வகித்தார். பங்குத்தந்தை ராஜ மாணிக்கம், உதவிப் பங்குத்தந்தை ஆரோக்கிய பிரிட்டோ பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்புத் திருப்பலியிலும், தேரோட்டத்திலும் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித ஜெபமாலை அன்னையின் ஆசி பெற்றனர். 

தேர் ஆலயம் வந்தடைந்ததும் மறைஉரை நிகழ்த்தி ஆராதனையுடன் கொடியிறக்கம் நடந்தது. ஞாயிற்றுக்கிழமை காலையில் திருவிழா திருப்பலியும், அதனைத் தொடர்ந்து புதுநன்மை திருப்பலியும், மாலையில் திருவிழா நிறைவுத் திருப்பலியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பங்குப்பேரவையினர், அன்பியங்கள், பங்கு இறைமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் வேலைவாய்ப்பு முகாமில் 1204 பேருக்கு பணி நியமன ஆணை!!

No comments :
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி அமைச்சர் சுந்தர்ராஜன் பேசியது: 

கடந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் இரு முகாம்கள் நடத்தப்பட்டு அதில் 4310 பேர் பங்கேற்றனர். அவர்களில் 1204 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு நடைபெறும் முதல் முகாமில் 39 நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் 824 பேர் பங்கேற்றுள்ளனர்.

ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் மணக்குடியில் 244 ஏக்கரில் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா 150 கோடியில் அமைக்கப்படவுள்ளது. இப்பூங்காவில் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார். நிறைவாக பேசிய மகளிர் திட்ட அலுவலர் ஜெயராமன், 824 பேர் பங்கேற்றதில் 230 பேர் பல்வேறு நிறுவனங்களுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.


முகாமுக்கு எம்.பி. அ.அன்வர்ராஜா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மு.சுந்தரபாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஜெயஜோதி,நிலவள வங்கியின் தலைவர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராம்கோ தலைவர் செ.முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் தொடர்புடைய 3 பேர் கைது!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கீழக்கரையில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி வங்கி ஒன்றில் செலுத்த வந்த பணத்தில் ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் அதிகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டு பிடிக்க, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில், கீழக்கரை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கஞ்சாவை கடத்திச் சென்று கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக வெளிநாட்டில் அச்சடிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை கொண்டு வந்து புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, பாம்பன் ராஜரெத்தினம் மகன் வெனிட்டன்(31), தூத்துக்குடி திரேஸ்புரம் மோடசம்பிரிஸ் மகன் அந்தோணி(37), பாம்பன் தெற்குத்தெரு முகம்மது மீராசா மகன் முஹம்மதுநாசர்(27) ஆகிய மூவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)