முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, October 29, 2015

பறவைகளை வேட்டையாடிய திருப்புல்லாணி வாலிபர் கைது!!

No comments :

ராமநாதபுரம் அருகே பறவைகளை வேட்டையாடிய வாலிபரை வனத்துறையினர் பிடித்து கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வயல்வெளிகள் மற்றும் நீர்நிலைகளை தேடி பறவைகள் வந்தவண்ணம் உள்ளன. அழிந்து வரும் இனங்களில் உள்ள இந்த பறவைகளை மருத்துவ குணம் உள்ளதாக நம்பி கறிக்காக சில சமூக விரோதிகள் வேட்டையாடி வருகின்றனர். இதனை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 




ராமநாதபுரம் அருகே உள்ள பொக்கானரேந்தல் அய்யனார்கோவில் காட்டுப்பகுதியில் வனச்சரகர் கணேசலிங்கம் தலைமையில், வனக்காப்பாளர்கள் காதர்மஸ்தான், கார்மேகம், வேட்டை தடுப்பு காவலர்கள் நவநீதன், அழகர் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வலை விரித்து உள்ளான் பறவைகளை வேட்டையாடியது தெரியவந்தது. 
இதுதொடர்பாக திருப்புல்லாணி இந்திராநகரை சேர்ந்த புல்லாணி மகன் ராஜபாண்டி(வயது30) என்பவரை வனத்துறையினர் பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 17 உள்ளான் பறவைகளை வனத்துறையினர் கைப்பற்றினர். லோடுமேன் வேலை பார்த்து வரும் ராஜபாண்டி உடல் வலிமை பெறுவதற்காக தனது குழந்தைகள் விரும்பி கேட்டதால் இரவு நேரத்தில் இந்த பறவைகளை பிடிக்க வந்ததாக தெரிவித்தார். வேட்டையாட தடைவிதிக்கப்பட்டுள்ள இந்த பறவைகளை வனத்துறையினர் மீண்டும் காட்டுப்பகுதியில் பறக்க விட்டனர். 

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

தேவர் குருபூஜையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கனரக வாகன போக்குவரத்தில் மாற்றம்!!

No comments :
தேவர் குருபூஜையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கனரக வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி நிகழ்ச்சியை முன்னிட்டு ராமேசுவரம், கீழக்கரை, ராமநாதபுரம் பகுதிகளிலிருந்து மதுரை சென்று வரும் தினசரிப் பேருந்துகள் மற்றும் கனரக வாகன போக்குவரத்தில் பொதுமக்கள் நலன் கருதி ஒரு நாள் மட்டும் மாற்றம் செய்யயப்பட்டுள்ளது. 


நிகழ்ச்சி நடைபெறும் அக்.30 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் ராமநாதபுரம்,பாண்டியூர், நயினார்கோயில், அண்டக்குடி, இளையான்குடி,சிவகங்கை, பூவந்தி வழியாக மதுரை சென்று வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.




(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமேசுவரம் திருக்கோயிலில் உண்டியல் ரூ. 67 லட்சம்!!

No comments :

ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டதில் ரூ. 67 லட்சம் காணிக்கையாக கிடைத்தது.     


ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல்கள் எண்ணும் பணி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், மடப்புரம் காளியம்மன் கோயில் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இதில், ரொக்கமாக வெளிநாட்டு பணம் உள்பட ரூ. 67 லட்சத்து 4 ஆயிரத்து 390ம், 51  கிராம் தங்கமும், 3 கிலோ 750 கிராம் வெள்ளியும் கிடைத்திருந்தன.   இப்பணியில் ஆய்வாளர் சுந்தரேஸ்வரி, மேலாளர் லெட்சுமிமாலா, பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், ஆசிரியைகள், இந்தியன் வங்கிப் பணியாளர்கள், கோயில் அலுவலர்கள்,ஊழியர்கள் ஈடுபட்டனர்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் அருகே வீடுபுகுந்து பெண்களை துன்புறுத்துவதாக புகார் கூறி, வனத்துறை அதிகாரிகளை சிறைபிடித்து பழங்குடியின மக்கள் போராட்டம்!!

No comments :
ராமநாதபுரம் அருகே வீடுபுகுந்து பெண்களை துன்புறுத்துவதாக புகார் கூறி, வனத்துறை அதிகாரிகளை பழங்குடியின மக்கள் புதன்கிழமை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் அருகே காட்டூரணி பகுதி எம்.ஜி.ஆர்.நகரில் நரிக்குறவர் இன பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் முயல் மற்றும் கதுவாலிப்பறவைகளை வேட்டையாடி வந்ததாகக் கூறி வனத்துறை அதிகாரிகள் புதன்கிழமை இவர்களது வீடுகளில் புகுந்து சோதனை செய்துள்ளனர். மேலும் அங்கிருந்த பாத்திரங்களையும் சமையல் பொருள்களையும் பறிமுதல் செய்து அவற்றை ஜீப்பில் ஏற்றியுள்ளனர்.
 இதனால் ஆத்திரமுற்ற பழங்குடியின மக்கள் வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வனக்காப்பாளர் எஸ்.பாஸ்கரன், வனவர் மதியழகன், ஜீப் ஒட்டுநர் சரவணன் உள்ளிட்டோரை சிறை பிடித்துக் கொண்டனர். மேலும் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலைய ஆய்வாளர் துரை.விவேகானந்தன், சார்பு ஆய்வாளர்கள் கணேசலிங்க பாண்டியன், முத்துராமலிங்கம் மற்றும் பேராவூர் ஊராட்சி மன்றத் தலைவர் கோட்டைச்சாமி உள்ளிட்டோர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.  பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது, பழங்குடியின இளைஞர்களான துரை மற்றும் பொன்னையா ஆகிய இருவரும் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து சமாதானப்படுத்தினர்.


வன அதிகாரிகள் அடிக்கடி லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும் சோதனை என்ற பெயரில் வீடுபுகுந்து பெண்களை துன்புறுத்துவதாகவும் அவர்கள் புகார் கூறினர். பேச்சுவார்த்தைக்குப்பிறகு வன அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். மறியல் கைவிடப்பட்டது.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)