முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, November 26, 2015

பரமக்குடி அருகே பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேரிடம் விசாரணை!!

No comments :
பரமக்குடி அருகே பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து 5 பேரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

காளையார்கோவில் ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவரான சி.ரமேஷ் (30) என்பவர் பரமக்குடியில் கோழி மொத்த வியாபாரக் கடை வைத்து நடத்தி வந்தார்.

இவர், திங்கள்கிழமை புழுதிக்குளத்தில் உள்ள தனது மனைவி மற்றும் 4 மாத குழந்தையை பார்ப்பதற்காக அவரது காரில் பரமக்குடியிலிருந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற மர்மநபர்கள் தென்பொதுவக்குடி காலனி பகுதியில் அவரை வெட்டிக் கொலை செய்தனர். இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கூலிப் படையைச் சேர்ந்த கும்பலை வைத்து சிலர் ரமேஷை கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

குற்றவாளிகள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் மற்றும் அவர்கள் தப்பிச் சென்ற காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கூலிப் படையினர் யாரிடம் பணம் பெற்றுக்கொண்டு இக்கொலையைச் செய்தனர் என்பது குறித்து 5 பேரிடம் விசாரித்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுர அறிவியல் நிலையத்தில் நவ-27ம் தேதி அன்று பாலிலிருந்து தயாரிக்கப்படும் மதிப்புக் கூட்டப்பட்ட உணவுகள் பற்றிய பயிற்சி!!

No comments :
ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில்  வெள்ளிக்கிழமை(நவ.27) பாலிலிருந்து தயாரிக்கப்படும் மதிப்புக் கூட்டப்பட்ட உணவுகள் பற்றிய இலவசப் பயிற்சி நடைபெற இருக்கிறது.

இது குறித்து, அறிவியல் நிலைய அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வெள்ளிக்கிழமை(நவ.27) பாலிலிருந்து தயாரிக்கப்படும் மதிப்புக் கூட்டப்பட்ட உணவுகள் பற்றிய பயிற்சியும், 30 ஆம் தேதி சிறுதானியங்களிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் பற்றிய பயிற்சியும் இலவசமாக நடத்தப்பட உள்ளது. 

விருப்பமுள்ள உழவர்கள், பெண்கள், சுயதொழில்முனைவோர் கலந்துகொண்டு பயன்பெறலாம். இந்த இலவசப் பயிற்சியில் கலந்துகொள்ள வயது வரம்பு எதுவும் இல்லை.


பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர்

திட்ட ஒருங்கிணைப்பாளர்
வேளாண்மை அறிவியல் நிலையம்
கடலோர உழவர் ஆராய்ச்சி மையம்
ராமநாதபுரம்-623503 

என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். 

மேலும் விவரங்களுக்கு, 04567-230250 மற்றும் 04567-232639 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் திமுக நகர் கிளை சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம்!!

No comments :
ராமநாதபுரம் அரண்மனை முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக நகர் கிளை சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் இருப்பது, நகரின் முக்கிய சாலைகளை பராமரிக்காமல் இருப்பது உள்ளிட்டவற்றைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திருவாடானை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சுப.தங்கவேலன் தலைமை வகித்தார்.

கட்சியின் மாவட்டச் செயலர் சுப.த.திவாகர் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. பவானிராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா.ரகு, மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிருபானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, இலக்கிய அணிச் செயலர் அரவரசன், தொமுச பேரவை மாவட்டச் செயலர் மலைக்கண்ணு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள்  கலந்துகொண்டனர். நகர் செயலர் ஆர்.கே.கார்மேகம் வரவேற்றார்.

செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர்கள் வருகை, பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்க!!

No comments :
ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை தொடர்பான சிறப்பு மருத்துவர்கள் வரவிருப்பதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டி.கிருஷ்ணமூர்த்தி புதன்கிழமை கூறியதாவது:

ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் 600-க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.


இந்த மருத்துவமனைக்கு
புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் பாலசுப்பிரமணியன் வெள்ளிக்கிழமையும்,
புற்றுநோய் மருத்துவ சிகிச்சை நிபுணர் ராஜ்குமார் சனிக்கிழமையும் வருகின்றனர்.
சிறுநீரக அறுவை சிகிச்சை தொடர்பான சிறப்பு மருத்துவர்களான இந்துஜா சனிக்கிழமையும், முரளீதரன் வெள்ளி,சனிக்கிழமை என இரு நாள்களும் வருகின்றனர்.
உணவுக் குழாய் மருத்துவ சிகிச்சை நிபுணர் மருத்துவர் சமீம்அகமது ஞாயிற்றுக்கிழமைதோறும் வருகிறார்.
உணவுக் குழாய் அறுவை சிகிச்சை நிபுணர்களான மருத்துவர்கள் கண்ணன் வியாழக்கிழமைதோறும், சந்திரன் செவ்வாய்க்கிழமைதோறும் 

ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு வந்து நோயாளிகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்குகின்றனர்.


தேவைப்படுவோருக்கு இலவசமாக அறுவை சிகிச்சையும் செய்யப்படுவதால் பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)