முகவை முரசு

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Saturday, December 5, 2015

சென்னை உட்பட, அனைத்து மாவட்டங்களிலும், நாளை ஞாயிறு டிசம்பர் 6ம் தேதி அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகளும் செயல்படும்!!

No comments :
சென்னை உட்பட, அனைத்து மாவட்டங்களிலும், நாளை ஞாயிறு டிசம்பர் 6ம் தேதி அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகளும் செயல்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. ஏ.டி.எம்., மையங்களில் பணத்தை நிரப்பும்படியும், சில பகுதிகளில் மொபைல் ஏ.டி.எம்.,கள் இயங்கவும், கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம், பொருட்கள் வாங்கும் சேவைகளை சிறப்பான வகையில் அளிக்கவும், வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. 

வரலாறு காணாத மழை வெள்ளம் காரணமாக சென்னை தனி தீவானது. இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிய நிலையில், உணவு, குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். வங்கிகளில் லட்சக்கணக்கில் பணம் இருந்தும் கூட அவர்களால் எதையும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.

பல வங்கிகளிலும், ஏ.டி.எம் மையங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் பணம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. கட்டுக்கடங்காத வெள்ளத்தால், பள்ளி, கல்லூரிகள் மட்டுமல்ல அரசு, தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கும் பொது விடுமுறை விடப்பட்டது. 

இதனிடையே மத்திய அரசின் நிதிச் சேவை துறையினர் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வங்கி சேவைகள் குறித்து அரசு, தனியார் வங்கிகளின் நிர்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர். பின்னர் மத்திய நிதி அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் வங்கிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை கூடுதல் நேரம் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏ.டி.எம்., மையங்களில் பணத்தை நிரப்பும்படியும், சில பகுதிகளில் மொபைல் ஏ.டி.எம்.,கள் இயங்கவும், கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம், பொருட்கள் வாங்கும் சேவைகளை சிறப்பான வகையில் அளிக்கவும், வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கும், ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கும் பல ஆண்டுகளுக்கு பிறகு வைகை தண்ணீர் வந்தடைந்தது!!

No comments :
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு பல ஆண்டுகளுக்கு பிறகு வைகை தண்ணீர் செல்கிறது.இதை சுப.தங்கவேலன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
தமிழகத்தின் 2-வது மிகப்பெரிய ஏரி என்று அழைக்கப்படும் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் 25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை பகுதிகளுக்கு இந்த கண்மாய் மற்றும் இதன் 72 துணை கண்மாய்கள் மூலம் பாசன வசதி கிடைத்து வருகிறது. ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு ஒவ்வொரு ஆண்டும் வைகை தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுப்பதும், ஆனால் தண்ணீர் வராமல் போவதும் வழக்கமாக இருந்து வந்தது. இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வைகை அணையில் இருந்து ராமநாபுரம் மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுஉள்ளது. இந்த 2 கண்மாய்களுக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதை திருவாடானை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சுப.தங்கவேலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் அரசடிவண்டல் மதகு அணையை வந்தடைந்துள்ளது. அங்கிருந்து ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கும், ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் முன்னிலையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுஉள்ளது. இதற்காக கீழநாட்டார் கால்வாய் தலைமதகு திறக்கப்பட்டுஉள்ளது. 

ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை தண்ணீர் வேகமாக பாய்ந்து செல்கிறது. பல ஆண்டுகளுக்கு பின்பு ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் ராமநாதபுரம் பெரிய கண்மாய்களுக்கு வைகை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துஉள்ளனர். 

இவ்வாறு அவர் கூறினார். 

அவருடன் அச்சுந்தன்வயல் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ்கண்ணா, ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய் ஆயக்கட்டுதாரர்கள் பனிக்கோட்டை மோகன், தும்படைக்காகோட்டை ஊராட்சி தலைவர் காளிதாஸ், அழகர்தேவன்கோட்டை ஊராட்சி தலைவர் சேகர், ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி கவுன்சிலர் அழகேசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு நிர்வாகி கிருஷ்ணன் உள்பட பலர் சென்றனர்.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

5.12.2015 முதல் 8.12.2015 ஆகிய நான்கு நாட்களுக்கு சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து இலவசம்!!

No comments :
சென்னையில் சனிக்கிழமை தொடங்கி நான்கு நாட்களுக்கு மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யும் பயணிகளிடமிருந்து கட்டணம் எதுவும் வசூலிக்கப்படக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மக்களின் வசதிகளுக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கை:

கடந்த சில நாட்களாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிப்பு அடைந்துள்ள மக்கள் எனது உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட போர்கால நடவடிக்கைகள் காரணமாக வெள்ளப் பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவதுடன் மருத்துவ வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.


இதுவன்றி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்கள் இல்லங்களிலேயே தங்கி உள்ளவர்களுக்கும் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தற்போது இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பி வருகிறது. மக்கள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பும் இந்தத் தருவாயில் பல்வேறு காரணங்களுக்காக மக்கள் உள்ளூர் பயணங்கள் மேற்கொள்ளும் அவசியம் ஏற்படும்.

எனவே, இதற்கு ஏதுவாக 5.12.2015 முதல் 8.12.2015 ஆகிய நான்கு நாட்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யும் பயணிகளிடமிருந்து கட்டணம் எதுவும் வசூலிக்கப்படக் கூடாது என நான் உத்தரவிட்டுள்ளேன்.


இந்த நான்கு நாட்களும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் கட்டணம் ஏதுமின்றி மக்கள் பயணம் செய்யலாம்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)