(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, March 26, 2016

தோழா - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
நடிகர்கள்: நாகார்ஜுனா, கார்த்தி, அமலா, ஜெயசுதா, விவேக் ஒளிப்பதிவு: பிஎஸ் வினோத்
இசை: கோபி சுந்தர்
தயாரிப்பு: பிவிபி சினிமா
இயக்கம்: வம்சி பைடிபல்லி

ஃபீல் குட் படம் என்று ஆங்கிலத்தில் ஒரு பதம் இருக்கிறது. அதாவது நேர்மறையான சிந்தனைகளைத் தூண்டும், மனதை நல்லவிதமாக வைத்திருக்கும் ஒரு படம். அப்படி ஒரு படம் 'தி இன்டச்சபிள்ஸ்'. அந்த பிரெஞ்சுப் படத்தைத்தான் தமிழில் தோழாவாகவும் தெலுங்கில் ஊபிரியாகவும் ரீமேக்கியிருக்கிறார்கள்.

தமிழில் அந்த ஃபீல் குட் மனநிலை கிடைத்ததா... பார்க்கலாம்! அம்மா, தம்பி, தங்கையுடன் சென்னையில் வசிக்கும் மிடில்கிளாஸ் இளைஞர் கார்த்திக்கு, ஒரு கெட்ட பழக்கம். அடிக்கடி சின்னச் சின்ன திருட்டுக்களில் மாட்டிக் கொண்டு சிறைக்குப் போய்விடுவார். இதனால் குடும்பத்தில் மரியாதையே இல்லாமல் போகிறது. கார்த்தியை வீட்டை விட்டே துரத்திவிடுகிறார் அம்மா.

கார்த்தியைத் திருத்த முனைகிறார் நண்பராக வரும் விவேக். ஒரு பெரிய தொழிலதிபருக்கு வேலைக்கு ஆள் வேண்டும் என்ற விளம்பரம் பார்த்து அங்கே போகிறார் கார்த்தி. அந்தத் தொழிலதிபர் நாகார்ஜூனா. சக்கர நாற்காலியிலேயே கிடக்கும் நாகார்ஜூனாவுக்கு கார்த்தியின் இயல்பு பிடித்துப் போக, தேர்வு செய்கிறார்.

இருவரும் சீக்கிரமே நல்ல புரிதலுக்கு வந்துவிட, நாகார்ஜூனாவின் உடன்பிறப்பு மாதிரியாகிவிடுகிறார் கார்த்தி. சக்கர நாற்காலி உலகத்திலிருக்கும் அவருக்கு வேறு உலகங்களை, சந்தோஷங்களைக் காட்டுகிறார் கார்த்தி. நாகார்ஜூனாவின் செக்ரடரி தமன்னாவை ஒருதலையாக காதலிக்கவும் ஆரம்பிக்கிறார்.

ஒரு நாள் திடீரென கார்த்தியை வீட்டுக்குப் போகச் சொல்கிறார் நாகார்ஜூனா. இருவருக்குமான நட்பு என்ன ஆகிறது? தமன்னா காதலில் விழுந்தாரா? என்பதெல்லாம் சுவாரஸ்யமான மிச்சப் பகுதிகள். ரீமேக் என்றாலும், அதை ஓரளவு நேர்மையாகவே செய்திருக்கிறார் இயக்குநர் வம்சி. தெலுங்கு சாயலில் எடுத்து கொல்லப் போறாங்க.. என்ற நினைப்போடு போனால்... ம்ஹூம்... பக்கா தமிழ்ப் படம்.

கார்த்திக்கு அவர் கேரியரில் இன்னொரு சிறந்த படம் தோழா. அவரது ட்ரேட் மார்க் ஜாலி உதார் பேர்வழி பாத்திரம். நகைச்சுவைக்கென்று தனியாக ஒரு காமெடியனே தேவைப்படவில்லை. அப்படி ஒரு ஜாலியான கேரக்டர். அனுபவித்து நடித்திருக்கிறார். முந்தைய படங்களை விட உடல் மொழில் நல்ல தேர்ச்சி. நாகார்ஜுனா என்ற ஆஜானுபாகுவான ஒரு ஆக்ஷன் ஹீரோவை சக்கர நாற்காலியிலேயே வலம் வர வைத்திருக்கிறார்கள். ஆனாலும் தன் முக பாவனைகளிலேயே அனைத்தையும் சாதித்து மனசுக்கு நெருக்கமாகிறார் நாகார்ஜுனா. உதயம் காலத்து அவரது ரசிகர்கள் மெய்சிலிர்த்துப் போய் அவரை ரசிப்பதை அரங்கில் பார்க்க முடிந்தது.

தமன்னா அபாரம். என்றும் மாறாத அழகு, அம்சமான நடிப்பு. இவருக்கும் கார்த்திக்கும் காதல் வரும் காட்சி அழகான கவிதை. விவேக், பிரகாஷ் ராஜ் சில காட்சிகளில் வந்தாலும் மனசில் நிற்கிறார்கள். படத்தின் முக்கிய பலம் வசனங்கள். எழுதிய ராஜு முருகன், முருகேஷ் பாபு இருவருமே பத்திரிகையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வினோத்தின் ஒளிப்பதிவு மிக இதம். அதிலும் பாரிஸ் காட்சிகளில் பிரான்சுக்கு ஓசிப் பயணம் போன திருப்தி. கோபி சுந்தரின் இசையில் இத்தனை பாடல்கள் தேவையா? பின்னணி இசை உறுத்தவில்லை.


படத்தின் நீளம், கார்த்தியின் திருட்டு கேரக்டர் போன்றவை கொஞ்சம் உறுத்தலாக இருந்தாலும், தெளிவான, சுவாரஸ்யமான திரைக்கதைக்கு முன் அவை காணாமல் போகின்றன. தோழா.. நிச்சயம் பார்க்கலாம்!

விமர்சனம்: ஒண் இண்டியா

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment