(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, June 19, 2016

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.62 கோடியே 48 லட்சம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய அரசுக்கு பரிந்துரை!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.62 கோடியே 48 லட்சம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை இணை இயக்குனர் அரிவாசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் பேசியதாவது:

மாவட்ட நிர்வாகத்தால் ஒவ்வொரு ஆண்டும் சான்றுபெற்ற மிளகாய் விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மாவட்டத்தில் இருந்து முக்கிய பணப்பயிரான முண்டுமிளகாய் அதிகஅளவில் சாகுபடி செய்து வெளிநாடுகளுக்கும் அனுப்பபட்டு வருகிறது.

பெரும்பாலான விவசாயிகள் பயிரிடும் முண்டு மிளகாய் விதைகளை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும். பயிர்க்கடன் தள்ளுபடி விசயத்தில் சிறு,குறு விவசாயிகள் என்று மட்டும் பார்க்காமல் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். ஆடு,மாடுகள் அதிகம் உள்ள பகுதிகளில் கால்நடை ஆஸ்பத்திரிகளை அமைக்க வேண்டும். மிளகாய் விவசாயம் அதிகம் மேற்கொள்ளும் கமுதி, முதுகுளத்தூர் பகுதிகளில் மிளகாய் குளிர்பதன கிடங்கு அமைக்காமல் பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அமைத்துள்ளது தேவையற்றது. மிளகாய் பயிர்களை குழித்தட்டு முறையில் வழங்கும்போது அதனை குறிப்பிட்ட பகுதிகளில் கொண்டு செல்லும் முன் செடிகள் வளைந்து சேதமடைந்து விடுகின்றன.எனவே, விதைகளாக வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். மாவட்ட நீர் ஆதாரத்திற்கும், விவசாயத்திற்கும் எமனாக விளங்கும் காட்டுக்கருவை மரங்களை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும். சோழந்தூர், ஆனந்தூர், கண்ணங்குடி பகுதிகளில் போதிய நீரின்றி சாவியாகி போன நெல்விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கி கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள்பேசினர்.

கூட்டத்தில் கலெக்டர் நடராஜன் பேசியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 827 மில்லிமீட்டர் ஆகும். கடந்த 2015–ம் ஆண்டு மாவட்டத்தில் 1,114 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 108 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. குறிப்பாக மே மாதத்தில் மட்டும் 91.38 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பண்ணை குட்டைகள் அமைக்க விண்ணப்பித்தால் 15 நாளில் அனுமதி வழங்கப்படும். இந்த ஆண்டு புதிதாக பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் முன்பு பிர்க்கா அளவில் பயிர்சேதம் கணக்கிடப்பட்ட நிலையில் தற்போது வருவாய் அளவில் பயிர்சேதம் கணக்கிடப்படும்.

இதுவிவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். மாவட்டத்தில் போதிய அளவு உரம் மற்றும் விதைகள் இருப்பு உள்ளது. சோலார் பம்பு செட்டு அமைக்க 80 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. சோலார் உலர்களம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. அரசின் அறிவிப்பின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 25,106 சிறு,குறு விவசாயிகளின் ரூ.62 கோடியே 48 லட்சம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய பரிந்துரை செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். 

கூட்டத்தில் வேளாண் துறை சார்பில் நெல்பயிர் மகசூல் போட்டியில் முதலிடம் பெற்ற ஆவரேந்தல் காந்தி என்பவருக்கு ரூ.15,000 ரொக்கப்பரிசையும், 2ம் இடம் பெற்ற களத்தாவூர் பகுதியை சேர்ந்த தமயந்தி என்பவருக்கு ரூ.10,000 ரொக்கப்பரிசையும் கலெக்டர் நடராஜன் வழங்கினார்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment