(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, September 24, 2016

ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்மாய்களில் சீமைக்கருவேல் மரங்களை வேரோடு அழிக்க நடவடிக்கை - கலெக்டர்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான 33 கண்மாய்களிலும் சீமைக்கருவேல் மரங்களை வேரோடு அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, ஆட்சியர் எஸ். நடராஜன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்றக் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அதிகாரி மு. அலிஅக்பர், வேளாண்மை இணை இயக்குநர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எஸ். வெள்ளைச்சாமி வரவேற்றார்.

கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியதாவது

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 169 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. விவசாயிகளுக்கு தேவையான வேளாண் இடுபொருள்கள், நெல் 211 மெட்ரிக் டன், சிறு தானியங்கள் 4,895 மெட்ரிக் டன், எண்ணெய் வித்துகள் 1 மெட்ரிக் டன், பயறு வகைகள் 1,111 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
 

இது தவிர, கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகவும், தனியார் கடைகள் மூலமாகவும் மொத்தம் 4,608 டன் அளவில் உரங்களும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் 2,131 பண்ணைக் குட்டைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பண்ணைக் குட்டைகள் அமைக்க வரப்பெற்ற 1,340 மனுக்களில் 652-க்கு பணிகள் முடிந்துவிட்டன. மீதமுள்ள மனுக்களுக்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் 33 கண்மாய்களில் சீமைக்கருவேல் மரங்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் முதுகுளத்தூர், நயினார்கோவில், பரமக்குடி,திருப்புல்லாணி, போகலூர், ஆர்.எஸ்.மங்கலம், கமுதி ஆகிய 6 ஒன்றியங்களில் வாடகை மையம் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி மேலும் கூடுதலாக வேளாண் இயந்திரங்கள் வாடகை மையமும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் பேசினார்.   பின்னர், விவசாயிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.

இதில், அரசின் பல்வேறு துறை அதிகாரிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment