(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, October 3, 2016

விவசாயிகள் பயிர் காப்பீட்டுப் பிரிமியம் தொகையை நவம்பர் 30 க்குள் செலுத்த வேண்டும்!!

No comments :
கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள் பயிர் காப்பீட்டுப் பிரிமியம் தொகை செலுத்துவதற்கு நவம்பர் 30 கடைசி நாள் என ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அரிவாசகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பாரதப் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் கடன் பெறும் கடன் பெறா விவசாயிகளுக்கான திட்டமாகும். பயிர் சாகுபடியில் விதைப்பு முதல் அறுவடைக்கு பின்பும் கூட ஏற்படும் பல்வேறு விதமான பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நெல், மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை, கேழ்வரகு, சோளம், கம்பு, தட்டைப்பயறு, எள், சூரியகாந்தி, பருத்தி மற்றும் கரும்பு ஆகிய பயிர்களுக்கு இத்திட்டத்தில் இழப்பீடு வழங்கப்படுகிறது.

நெல் ஒரு ஏக்கருக்கு பிரிமியம் ரூ.322.50. காப்பீட்டுத் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.21,500. இதர பயிர்களுக்கு மாவட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ள பயிர்க்கடன் தொகையில் 1.5 சதவிகிதம் மற்றும் வருடாந்திர வணிகப் பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு ரூ.5 சதவிகிதமும் வழங்கப்படும்.

காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் உரிய விண்ணப்ப படிவம், உறுதிமொழிப் படிவம், அடையாள மற்றும் முகவரிச் சான்று, நில உடைமைச் சான்று, வங்கிக்கணக்கு எண் ஆகிய ஆவணங்களுடன் அந்தந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் அல்லது வணிக வங்கிகளில் பிரிமியம் செலுத்தலாம்.


பிரிமியம் தொகை செலுத்துவதற்கு இறுதி நாள் நவம்பர் 30 ஆகும். இத்தேதிக்குள் விவசாயிகள் அனைவரும் பிரிமியம் செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெற கேட்டுக்கொள்கிறோம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment