முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, March 12, 2016

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்றது, கீழக்கரை ஜமாத்திற்கு முன்மாதிரி விருது!!

No comments :
10/3/2016 அன்று விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ் மாநில தலைவருமான பேராசிரியர் K.M. காதர் மொஹிதீன் தலைமையில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு நடைபெற்றது.இதில் திமுக பொருளாளர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார், அவர் பேசியதாவது:

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது முஸ்லிம்களின் குறைகளுக்காக போராடியது. ஆளும் கட்சியாக வந்தபின் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் சிறுபான்மை நலவாரியம் அமைக்கப்பட்டது. அதற்கான சட்ட அங்கீகாரத்தையும் வழங்கினார். சிறுபான்மையினருக்கு அரசு வேலை வாய்ப்பில் 3.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. திட்டங்கள் முழுமையாக சேரு வதற்கு முதன்மை செயலர் தலைமையில் குழு அமைத்து கண்காணிக்கப்பட்டது. ஜெயலலிதா முதல்வராக வந்த பின்பு இதை செயல்படாமல் தடுத்தார். நபிகள் நாயகம் பிறந்தநாளை அரசு விடுமுறையாக திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. 


சிறுபான்மை சுயநிதி பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் உள்ளிட்ட 5,499 பேருக்கு அரசு ஊதியம் வழங்க அறிவிக்கப்பட்டது. மேல்நிலைப் பள்ளிகளில் 6,456 பணியிடங் களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் முஸ்லிம்களுக்கு சதவீதம் இடஒதுக்கீடு வேண் டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை மீண்டும் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும். கடந்த ஆண்டுகால ஆட்சி எதையும் செய்யவில்லை. ஆட்சி முடியும் நேரத்தில்பல திட்டங் களை அறிவித்துள்ளனர். தமிழகம் பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந் தும்ஊழலில் முதலிடத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த ஆட்சியை மாற்ற வேண்டும். 

இவ்வாறு பேசினார்.

பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வழித்தோன்றலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில தலைவருமான ஸய்யிது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் விருதுகளை வழங்கி துஆ செய்தார்இலங்கை அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் வாழ்த்துரை வழங்கினார்.

கீழக்கரை நடுத்தெரு ஜும்ஆ மஸ்ஜித் ஜமாஅத்திற்கு " முன்மாதிரி முஸ்லிம் ஜமாஅத் " விருது வழங்கப்பட்டது.

விருதை நடுத்தெரு ஜும்ஆ மஸ்ஜித் பரிபாலண கமிட்டியின் செயலாளர் ஜனாப் S.M.K. ஃபாரூக் பெற்றுக்கொண்டார்.

கூட்டத்தில் முஸ்லீம் லீக் மாநிலத் தலைவர் காதர் மொய்தீன், மாவட்ட செயலாளர் அமீர் அப்பாஸ், முன்னாள் அமைச்சர்கள் துரை முருகன், பொன்முடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


செய்தி: திரு. தாஹீர், கீழக்கரை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

காதலும் கடந்து போகும் - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
நடிப்பு: விஜய் சேதுபதி, மடோனா, சமுத்திரக்கனி
ஒளிப்பதிவு: தினேஷ் கிருஷ்ணன்
இசை: சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பு: சிவி குமார் - ஞானவேல் ராஜா
இயக்கம்: நலன் குமாரசாமி
கொரியப் படமான Nae Kkangpae Kateun Aein-வின் உரிமையை ரூ 40 லட்சத்துக்கு வாங்கி காதலும் கடந்து போகும் படத்தை எடுத்திருக்கிறார்.
ரொம்பப் பாசமான பெற்றோர்... அவர்களின் எதிர்ப்பை மீறி விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு 'ஓடிப் போகிறார்லோக்கல் கல்லூரியில் எஞ்ஜினீயரிங் படித்த நாயகி மடோனா. காதலால் அல்ல.. ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்ற 'லட்சியத்துக்காக'.
போன இடத்தில் வேலை கிடைத்து சந்தோஷமாக நாட்கள் போய்க் கொண்டிருக்கும்போதுதிடீரென கம்பெனியை இழுத்து மூடுகிறார்கள். திரும்ப வீட்டுக்குப்போனால் விழுப்புரத்தைத் தாண்ட விடமாட்டார்கள் என்பதால்சென்னையிலேயே குறைந்த வாடகைக்குத் தங்கி வேலை தேடும்போதுபக்கத்து அறையில் குடியிருக்கும் 'அடியாள்விஜய் சேதுபதியின் அறிமுகம் கிடைக்கிறது. விஜய் சேதுபதியின் ஒரே 'லட்சியம்பார் ஓனராக வேண்டும். அவ்வளவுதான்.
வேண்டா வெறுப்பாக ஆரம்பிக்கும் அந்த அறிமுகம் இருவரும் சேர்ந்து சரக்கடிக்கும் அளவுக்கு நட்பாக மாறுகிறது. இந்த நட்புக்காக விஜய் சேதுபதி எதையும் செய்யத் தயாராக இருக்கிறார். ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதியையே திருமணம் செய்து கொள்ளவும் தயாராகிறார் மடோனா. இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா.. விஜய் சேதுபதி பார் ஓனரானா என்பது மீதி. எதார்த்தமான கதை. சினிமாத்தனம் இல்லாத கதை மனிதர்கள். இடைவேளைக்குப் பிறகு இலக்கில்லாமல் பயணிப்பது போன்ற உணர்வைத் தந்தாலும், கடந்து போகிற மேகங்கள் மாதிரிதான் காதலும் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார் நலன் குமாரசாமி.

படத்தின் இன்னொரு ப்ளஸ்... வலிந்து திணிக்கப்படாத நகைச்சுவை. நாயகி மடோனாதான் படத்தின் பலம் (ப்ரேமம் புகழ்). அழகு, நடிப்பு இரண்டிலுமே டிஸ்டிங்ஷன். தமிழ் சினிமா அத்தனை சீக்கிரம் இவரை கேரளாவுக்கு அனுப்பாது என நம்பலாம். தூங்கு மூஞ்சி, சோம்பேறி, நல்ல மனசு கொண்ட அரைகுறை ரவுடி... இதுதான் படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர். அச்சு அசலாகப் பிரதிபலிக்கிறார். எஸ்கிமோ நாய் என்ற வார்த்தையால் பட்ட வலியை அவர் சொல்லிக் காட்டும் விதம் க்ளாஸ்.

மொடா குமாரு என்ற பாத்திரத்தில் சமுத்திரக்கனி. மொத்தம் மூன்றே காட்சிகள்தான். சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமில்லை. பார் ஓனர்களாக வரும் இருவர் மற்றும் விஜய் சேதுபதிக்கு துணையாக நடித்திருக்கும் இளைஞர் கவனிக்க வைக்கின்றனர். விஜய் சேதுபதியை தன் காதலனாக செட் பண்ணி ஊருக்கு மடோனா அழைத்துப் போகும் காட்சிகள் அப்படியே 'பூவேலி' படத்தை நினைவூட்டின.

தினேஷின் ஒளிப்பதிவு பிரமாதம். சந்தோஷ் நாராயணன் இசையில் இரு பாடல்கள் கேட்கும்படி உள்ளன. காட்சிகளை உணர்ந்து பின்னணி இசை தந்திருக்கிறார். விஜய் சேதுபதிக்கான ஆக்ஷன் காட்சிகளில் சேதுபதி பட பாணியிலேயே பின்னணி பாடல் ஒலிப்பது தற்செயலா.. சென்டிமென்டா?

நடிப்பிலும், காட்சிப்படுத்துதலிலும் இருந்த தேர்ச்சியும் ஒழுங்கும் திரைக்கதையிலும் இருந்திருக்கலாம். ஆனால் முழுமைத்துவம் என்பது மனிதனுக்கே இல்லை.. அந்த மனிதனின் படைப்பில் சின்னச் சின்ன குறைகள் இருக்கத்தானே செய்யும். அப்படி எடுத்துக் கொண்டால் இந்தப் படத்தை நீங்கள் லயித்து ரசிக்க முடியும்!

விமர்சனம்: ஒண் இண்டியா

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

7 நாள்களுக்கும் மேலாக நகைக் கடைகள் ஸ்ட்ரைக்!!

No comments :
நகைக் கடைகள் 7 நாள்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருப்பதால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில்  நகை வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதாக ராமநாதபுரம் தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள் சங்க பொதுச் செயலர் பி.பார்த்தீபன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: மத்திய அரசு பட்ஜெட்டில் தங்க நகை உற்பத்தி மீது கலால் வரி ஒரு சதவிகிதம் விதித்ததை வாபஸ் பெற வலியுறுத்தி கடைகளை அடைத்து வேலை நிறுத்தத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம். இதனால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் வர்த்தகம் முடங்கியுள்ளது. திருமணம் மற்றும் கோயில் திருவிழா நேரமாக இருப்பதால் பொதுமக்கள் நகை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். நகைக்கடைகளை சார்ந்து வாழும் எண்ணற்ற தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.இதனை உணர்ந்து மத்திய அரசு நகை வியாபாரிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் என்று நம்புகிறோம். அரசுக்கும், வணிகர்களுக்கும் எந்த வித பயனும் இல்லாத தங்கக் கட்டுப்பாட்டு சட்டத்தை வி.பி.சிங் அரசு திரும்ப பெற்றுக் கொண்டது. அதற்குப் பின் நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியும் இதே திட்டத்தை அறிவித்து பின்னர் அதை திரும்ப பெற்றுக் கொண்டார். இதே போல தற்போதைய மத்திய அரசும் இதை திரும்பப் பெற்றுக் கொள்ளும் என்று நம்புகிறோம் என்றார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுர தீவிபத்தில் 2 வீடுகள் சேதம்!!

No comments :
ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த தீவிபத்தில் 2 வீடுகள் சேதமடைந்தன.

ராமநாதபுரம் ஓம்சக்திநகர் ஒத்தப்பனை காளியம்மன் கோயில் பகுதியில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியருக்கு சொந்தமான 2 வீடுகள் உள்ளன.இதில், சிக்கந்தர் பாத்திமா என்பவர் ஒரு வீட்டிலும், மற்றொரு வீட்டில் களஞ்சியம் என்பவரும் வாடகைக்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில் வியாழக்கிழமை இந்த வீடுகளில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் 2 வீடுகளிலும் இருந்த பொருள்கள்,முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன. இதுதொடர்பாக கேணிக்கரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

அறிவியல் கண்காட்சி ரயில் ராமேசுவரம் வருகை, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்!!

No comments :
அறிவியல் கண்காட்சி ரயில் வியாழக்கிழமை ராமேசுவரம் வந்து சேர்ந்ததையடுத்து, இதை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகமும், அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகமும் இணைந்து இயக்கி வரும் அறிவியல் கண்காட்சி ரயில் வேலூர், கும்பகோணம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு சென்று விட்டு ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்து சேர்ந்தது. இது சனிக்கிழமை (மார்ச் 12) வரை தொடர்ந்து 3 நாள்களுக்கு இங்கு நிறுத்தப்பட்டிருக்கும்.இதை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பார்வையிடலாம். வியாழக்கிழமை ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இக்கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர்.

விக்ரம் சாராபாய் அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகிகள், கண்காட்சி பார்வையாளர்களுக்கு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பருவ கால மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு பற்றிய தகவல்களை விளக்குகின்றனர்.

இதை, பள்ளி மாணவர்கள் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் திட்ட அலுவலர் முத்துக்குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.ஜெயக்கண்ணு, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் பெர்னாடிக்ட் (ராமநாதபுரம்), தீனதயாளன் (பரமக்குடி) ஆகியோர் செய்துள்ளனர். இந்த ரயில் 12 ஆம் தேதிக்குப் பின் திருநெல்வேலி செல்லும் என்றும், அங்கு 4 நாள்கள் நிறுத்தப்பட்டிருக்கும் எனவும் பசுமைப்படை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)