முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, May 4, 2016

இராமேஸ்வர கோவிலின் சன்னதி தெரு, ரத வீதி நடை பாதைகளில் மேற்கூரை அமைக்க கோரிக்கை!!

No comments :
கடும் வெயிலின் தாக்கத்தால் நடந்து செல்ல முடியாமல் தவிக்கும் ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோவிலின் சன்னதி தெரு, ரத வீதி நடை பாதைகளில் மேற்கூரை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. ஆனால் கடந்த 1 மாதத்திற்கு முன்னதாகவே தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்திலும் ராமேசுவரம் பகுதியிலும் கடந்த 1 மாதத்திற்கு மேலாகவே வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகின்றது.
அது போல கடும் வெயிலின் தாக்கத்தால் ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பெண், வயதான பக்தர்கள், குழந்தைகளுடன் ரத வீதிகளில் நடந்து செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். தற்சமயம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ரத வீதிகளில் கடந்த சில வாரங்களாக தினமும் பகல் 12 மணிக்கு லாரி மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.


இதனால் கடும் வெப்பத்தால் நடந்து செல்ல முடியாமல் தவித்து வந்த பக்தர்கள் ரத வீதிகளில் லாரி மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்ட பின்பு மிகுந்த மகிழ்ச்சியுடன் நடந்து சென்றனர். இருப்பினும் லாரி மூலம் தெளிக்கப்படும் தண்ணீர் சில மணி நேரத்திலேயே முழுமையாக காயந்து விடுவதுடன், மீண்டும் வழக்கமான வெயிலின் தாக்கத்தால் ரத வீதிகளின் சாலைகள்அனலாக இருந்து வருகிறது.


எனவே அக்னி நட்சத்திரம் மற்றும் கோடை வெயில் முடிவடையும் வரையிலாவது கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அக்னி தீர்த்த கடலில் நீராடி, கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராட வரும் பக்தர்கள் சன்னதி தெரு, மற்றும் 4 ரத வீதிகளின் நடை பாதையிலும் முழுமையான மேற்கூரைகள் அமைப்பதற்கும், குடி தண்ணீர் வசதிகள் செய்ய திருக்கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரை அருகே இறந்து கரை ஒதுங்கிய குட்டி திமிங்கலம்!!

No comments :
கீழக்கரை அருகே கடற்கரை பகுதியில் இறந்து அழுகிய நிலையில் ஒரு குட்டி திமிங்கலம் கரை ஒதுங்கியது.

கீழக்கரை அருகே உள்ள மாயாகுளம் ஊராட்சிக்குட்பட்ட பாரதிநகர் கடற்கரை பகுதியில் நேற்று அதிகாலை இறந்து அழுகிய நிலையில் ஒரு குட்டி திமிங்கலம் கரை ஒதுங்கியது. உடல் முழுவதும் அழுகி சிதைந்து கிடந்ததால் அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியது. தகவல் அறிந்த வனச்சரகர் கணேசலிங்கம் தலைமையில் வனக்காப்பாளர்கள் சடையாண்டி, காதர் மஸ்தான், கருப்பணன் மற்றும் வேட்டைதடுப்பு காவலர்கள் அங்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆழ்கடலில் வசிக்க கூடிய அபூர்வ வகையான பலீன் என்ற இனத்தை சேர்ந்த திமிங்கலம் என்பது தெரியவந்தது. சுமார் 2 வயதுள்ள இந்த திமிங்கலம் 10 மீட்டர் நீளமுடையது. குட்டி திமிங்கலத்தின் பெரும்பாலான உடல்பகுதி அழுகி சிதைந்து விட்டது. மீதம் உள்ள உடல்பகுதி மட்டுமே கரை ஒதுங்கியுள்ளது. ஆழ்கடல் பகுதியில் பாறைகளிலோ, படகுகளிலோ மோதி காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், பெரிய ராட்சத மீன்கள் கடித்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.திமிங்கலம் இறந்து கடல் தண்ணீருக்குள் மூழ்கி சில நாட்கள் கழித்து உடல் அழுகி, பெரிதாகி கடலின் மேற்பரப்பிற்கு வந்து காற்றின்வேகத்தில் கரைப்பகுதிக்கு அடித்து கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. அப்பா தீவுக்கும் வாளிமுனை தீவிற்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த திமிங்கலம் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.


உடற்கூறு பரிசோதனை செய்ய முடியாததால் மத்திய கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி நிலைய டாக்டர் சக்திவேல் தலைமையிலான குழுவினர் கடற்கரைக்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும் இறந்த குட்டிதிமிங்கலத்தின் உடல்பகுதியை ஆய்விற்காக மாதிரியை எடுத்து சென்றனர். பின்னர் கடற்கரையிலேயே இறந்த திமிங்கலத்தை புதைத்தனர். கடந்த மாதம் இதே போன்று ஒரு திமிங்கலம் இறந்து உடல் அழுகி கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொகுதிவாரியாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1,307 வாக்கு சாவடி மையங்களுக்கும், தொகுதிவாரியாக வாக்குப் பதிவு இயந்திரங்களை கணினி மூலம் குலுக்கல் முறையில் அனுப்பும் முறையை, ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான எஸ். நடராஜன் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், ஆட்சியர் எஸ். நடராஜன் தலைமையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தொகுதிவாரியாக பிரித்து அனுப்புவதற்கு, கணினி மூலம் குலுக்கல் நடைபெற்றது. இந்த குலுக்கல் முறையை ஆட்சியர் தொடக்கி வைத்தார். தேர்தல் பார்வையாளர்கள் விக்டர். மெக்வான், ரமேஷ்வர்மா, மாவட்ட வருவாய் அலுவலர் மு. அலிஅக்பர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேட்புமனு தாக்கல் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. மே 2 ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.   ராமநாதபுரம் மாவட்டத்தில் 

பரமக்குடியில் (15),
திருவாடானையில் (21),
ராமநாதபுரம் (17),
முதுகுளத்தூர் (15)

என மொத்தம் மாவட்ட அளவில் 68 பேர் போட்டியிடுகின்றனர்.   

இத்தொகுதிகளில் பரமக்குடியில் (301), திருவாடானை (321), முதுகுளத்தூர் (364), ராமநாதபுரம் (321) என மொத்தம் 1,307 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.  இந்த வாக்கு சாவடி மையங்களில், போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிட்டு, பாதுகாப்பான முறையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.பரமக்குடி தொகுதிக்கு வாக்கு செலுத்தும் இயந்திரங்களும், கணக்கீட்டுக் கருவிகளும் தலா 346, முதுகுளத்தூரில் இரு கருவிகளும் தலா 418, திருவாடானையிலும், ராமநாதபுரத்திலும் வாக்குச் செலுத்தும் இயந்திரங்கள் தலா 738, கணக்கீட்டுக் கருவிகள் தலா 369 பயன்படுத்தப்பட உள்ளன.

 குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் வரிசை எண் கொண்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு முழுபாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.


இக்கூட்டத்தில் தொகுதிகளுக்கான தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ந. தர்மர் மற்றும் அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)