முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, May 14, 2016

பென்சில் - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
ஊருக்குள்ளேயே மிகப்பிரபலமான தனியார் பள்ளி ஒன்றில் ப்ளஸ் டு படிக்கிற குட்பாய்ஜி.வி.பிரகாஷுக்கும், ‘சூப்பர் ஸ்டார்விஜித்காந்த் மகன் ஷாரிக் ஹாசனுக்கும் ஆரம்பத்திலிருந்தே கா’. நம்பர் ஒன் ஸ்டூடண்டான ஜி.வி. பிரகாஷை, ஆரம்பத்தில் ஒதுக்கி, பின்னர் ஓரப்பார்வை பார்க்கிறார் அதே க்ளாஸில் படிக்கும் கமிஷனர் மகள் ஸ்ரீதிவ்யா. இடைவேளை ப்ளாக்கில் நடக்கும் ஒரு அசம்பாவிதத்தில், ஜி.வி.பிரகாஷ் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, அவருடன் சேர்ந்து ஸ்ரீதிவ்யாவும் அந்த அசம்பாவிதத்தின் முடிச்சை அவிழ்ப்பதை இடைவேளைக்குப் பின் த்ரில்லராகக் கொடுத்திருக்கிற படம் பென்சில்’.
தாமதமாக வெளிவந்தாலும், ஜி.வி.பிரகாஷுக்கு இதுதான் நடிகராக முதல் படம். இசையமைப்பாளராக பெயர் வாங்கிய பின், அதுவும் திருமணமான ஒருவர், முதல் படத்திலேயே ஸ்கூல் பையன்  என்பதெல்லாம் ஃபேஸ்புக்கில் ஃபேக் ஐடி வைத்திருப்பதை விடவும் பெரிய ரிஸ்க். ஆனால் அது தெரியாதவண்ணம்,   நன்றாகவே நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் ஸ்ரீதிவ்யா உடனான ஒருதலைக் காதலாகட்டும், ஷாரிக் ஹாசனோடு முறைக்கும் மொமண்டுகளாகட்டும் வேறுபாடு காண்பித்திருப்பது சிறப்பு. 

முதல் படம் என்பதால், தி.இ.ந- மாதிரி கிளுகிளு ஏரியாவிற்கே போகவில்லை ஸ்ரீதிவ்யாவுக்கு, ‘நாலு சீன் ஒரு பாட்டுஎன்றில்லாமல் நாயகனுக்கு இணையான - கொஞ்சம் அதற்கு மேலானதான - கதாபாத்திரம். படம் கொஞ்சம் டல்லடிக்கும்போதெல்லாம், திரையில் இவர் வருவது இனிக்கிறது. ஆனா அது என்ன பாஸ்.. கமிஷனர் பொண்ணு, க்ரைம் கதைகள் படித்தாலே இத்தனை ஷார்ப்பாக இருக்க முடியுமா! ஹலோ ஐ.பி.எஸ். செலக்‌ஷன் கமிட்டிஸ்.. கொஞ்சம் இத என்னான்னு பாருங்க!

ஜி.வி.பிரகாஷுக்கு நண்பனாக வரும் மிர்ச்சிஷா வரும் காட்சிகள் சீனிவெடி. காம்பஸ்ல வட்டம்தாண்டா போடுவாங்க.. இவ ஏதோ திட்டம் போடறாஎன்று வசனங்களுக்கும் அவருக்கு ஒத்துழைக்கிறது.  அவருடைய உடல்மொழியும் அதற்கேற்றாற்போல், வளைந்து கொடுக்கிறது. அத்தனை சீரியஸாக ஒரு காட்சியில் பேசாம பாத்ரூமே போயிருக்கலாமோஎன்று அவர் சொல்வதற்கு, தியேட்டர் முழுக்கச் சிரிப்பு. அவருக்கு இன்னும் வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.


அந்த பணக்காரப் பையன் கதாபாத்திரத்துக்கு, ஷாரிக் ஹாசன் சரியான தேர்வு. திமிரான பார்வையும், தெனாவட்டுமான நடையும் என்று கடமையும் இல்ல.. கவலையும் இல்லகதாபாத்திரத்துக்கு நச் பொருத்தம். கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டிருக்கிற, இவரது கதாபாத்திரத்தை இன்னும் மெனக்கெட்டு ஸ்கெட்ச் போட்டிருக்கலாம்.

இசையும் ஜி.வி.பிரகாஷ்தான். பாடல்கள் வெளியாகி வருடம் கடந்துவிட்டதால் எதுவுமே நினைவில் நிற்கவில்லை. படத்திலும் ஒட்டவில்லை. அத்தனை பெரிய ஸ்கூலை ஏரியல் வ்யூவில் காண்பிப்பதிலும், காரிடார் காரிடாராக ஓடுவதிலும் கோபி அமர்நாத்தின் கேமரா எக்ஸ்ட்ரா ட்யூட்டி பார்த்திருக்கிறது. எதிர்பாராம நடந்தாதாண்டா ஆக்சிடெண்ட். ஃபிக்ஸ் பண்ணினா அது 20-20 போன்ற ஒன்றிரண்டு ஒன் -லைனர்கள் இருந்தாலும், படத்தில் நகைச்சுவைக்கும் அத்தனை முக்கியத்துவம் இல்லை. 

ஆனால், கடைசி ஓவரில் ஏகப்பட்ட நோபால் போட்டு, ஜெயிக்கவேண்டிய மேட்சைத் தோற்கவைத்தது போல பல குறைகள் படத்தில்!

கதைக்களம் தனியார் பள்ளி. கதாபாத்திரங்கள் ப்ளஸ் டூ மாணவர்கள் என்பதை மட்டும் வைத்துக் கொண்டு அதற்குப் பிறகு கதை பின்னியது தெளிவாகத் தெரிவது போல.. ஒட்டவே ஒட்டாத திரைக்கதை. திடீர் திடீரென்று யார் யாரோ எங்கெங்கிருந்தோ வருகிறார்கள். வேறொரு தனியார் பள்ளி நடத்துபவர் நானே களத்துல எறங்கறேன்என்று வசனம் மட்டும் சொல்லிவிடுவதன் மூலமே, அவரே போட்டியாளரின் பள்ளிக்குள் புகுவதை எல்லாம் நம்பமுடியவில்லை சாரே.
ஆசிரியர்களுக்குள் லவ், பள்ளிகளுக்கிடையேயான பிஸினஸ் போட்டி என்று ஒரு தனியார் பள்ளிக்குள் இப்போதெல்லாம் சாதாரணமாகிவிட்ட விஷயங்களை படத்தில் சேர்த்திருப்பது மட்டும் ஸ்பெஷல். ஆனால் அதிலும் நுனிப்புல்தான்.

படத்தில் பள்ளியின் தாளாளர் அடிக்கடி, ‘I.S.O. சான்றிதழ் மட்டும் வரட்டும்என்கிறார். அதற்கான ஆய்விற்காக ஊர்வசி வருகிறார். அந்தச் சமயத்தில் ஓர் அசம்பாவிதத்தை நிகழ்த்தவேண்டும் என்று போட்டி பள்ளித் தாளாளர் நினைக்கிறார், இன்னொரு கதாபாத்திரமும் ஓர் அசம்பாவிதத்தை அன்றைக்கே செய்ய நினைக்கிறது என்றெல்லாம் கதை பின்னப்பட்டிருக்கிறது. அப்படி இருக்க, அந்தத் தரச்சான்றிதழ் பெறும் முறைகளைக் குறித்து ஆராய்ந்திருக்க வேண்டாமா இயக்குநரே! ஒரே ஒரு ஆள்தானா வருவார்? அவரும் நடக்கிறார்.. நடக்கிறார்.. நடந்துகொண்டே இருக்கிறார்! ஆனால் அதையும் தாண்டி, ஊர்வசி, டி.பி.கஜேந்திரன், வி.டி.வி. கணேஷ் என்ற சீனியர் நடிகர்களைக் கொண்டு கொஞ்சம் காமெடிக்கு முயற்சி செய்திருக்கிறார்கள்.

‘3500 மாணவர்கள், 500 ஊழியர்கள்என்கிறது ஒரு வசனம். ஒரு காட்சியிலும் அப்படி ஒரு கூட்டத்தைப் படத்தில் காட்டியிருக்கலாம். அதிகபட்சம் கேமராவில் மொத்தமாக நூறு பேர்கூட இருக்கமாட்டார்கள். ஒரு ஆராய்ச்சிக்கூடமே தீப்பற்றி எரிகிறது, இத்தனை பேரில் ஒருவரும் அங்கே போகவில்லை. நாயகன், நாயகியின் குடும்பம் பற்றிய டீடெய்லிங் இல்லை.
ஜி.வி.பிரகாஷின் நண்பன் ஓடிவந்து என்னவோ சொல்ல, கோபமாக வெகுண்டெழுந்து அந்த வகுப்புக்குள் போகிறார். அப்படி என்ன சொன்னானென்று தெரியவில்லை. ஸ்ரீதிவ்யாவிடம் இனிமே நாம சண்டை போடவேண்டாம்னு சொல்லதான் ஓடிவந்தேன்என்கிறார். அதுக்கெதுக்குய்யா யூ டர்ன் போட்டு.. டேபிளெல்லாம் ஒடைச்சுமொமண்ட்!

என்ன வேணா செய்யலாம், கடைசியில் மூச்சிறைக்க நிருபர்கள் முன் நீட்டி முழக்கி மெசேஜ் சொன்னால் போதும் என்று டைரக்டர் நினைத்துவிட்டது அப்பட்டமாகத் தெரிகிறது. ஆனால் ஏற்கமுடியவில்லை.

நல்ல கதைகளம். அதற்கேற்ற நடிகர்கள். இன்னும் நன்றாகவே செதுக்கியிருக்கலாம்.. இந்தப் பென்சிலை! 

-விகடன் விமர்சனம்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)