Wednesday, May 25, 2016
மருத்துவ படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்படும், ஜூன் 20ம் தேதி முதல் கலந்தாய்வு!!
மருத்துவ படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்படும் என்றும், முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 20ம் தேதி தொடங்கும் என்று மருத்துவ கல்வி இயக்குநர் விமலா தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்து, இந்தாண்டு மட்டும் மாநில கல்வி வாரியத்தின் கீழ் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, மாநில அரசு நடத்தி வரும் மருத்துவ கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரிகளில் பொது நுழைவுத்தேர்வு இன்றி மாணவர் சேர்க்கையை நடத்த முடிவு செய்தது. இந்த அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அந்த அவசர சட்டம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதையடுத்து குடியரசுத் தலைவர் பிரணாப்பை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா சந்தித்து விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து, அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் ஒப்புதல் வழங்கினார். இதனால், தமிழகத்தில் இந்தாண்டு மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படாமல் மதிப் பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இந்த நிலையில், மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பம் நாளை முதல் ஜூன் 6ம் தேதி வரை வழங்கப்படும் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 7ம் தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம் என்றும், ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் விமலா தெரிவித்தார்.
ஜூன் 17ம் தேதி மருத்துவப் படிப்புக்கான தர வரிசை பட்டியல் வெளியிடப்படும் என்றும், முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 20ம் தேதியும், 2ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 18ம் தேதியும் தொடங்கும் என்றும் கூறினார்.
மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அடிப்படையில் நடைபெறும் என்றும், நுழைவுத் தேர்வு தொடர்பாக மாணவர்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் விமலா கேட்டுக் கொண்டார்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)