முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, June 23, 2016

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11.50 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு - கலைக்டர்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 இடங்களில் உள்ள மரக்கன்றுப் பண்ணைகளில் மொத்தம் 11.50 லட்சம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, அதை மாவட்டம் முழுவதும் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக, ஆட்சியர் எஸ். நடராஜன் புதன்கிழமை தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் ஊரக வளர்ச்சித் துறையின் வளர்ச்சித் திட்டப் பணிகளை செய்தியாளர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்,

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது:

பொதுவாகவே ராமநாதபுரம் மாவட்டத்தில் மரங்களும், மலைப் பகுதிகளும் குறைவாக இருப்பதால், மழையின் அளவும் குறைவாகவே உள்ளது. இதற்கு மாற்றாக,   மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தீவிர மரம் நடுதல் திட்டத்தை செயல்படுத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, வனத்துறை மூலமாக ஊரக வளர்ச்சித் துறையின் நிதியுதவியுடன் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

கமுதக்குடியில் 78,640, மாரியூரில் 50,600, தங்கச்சிமடத்தில் 55,000, ஆற்றங்கரை கிராமத்தில் 70,810 என மொத்தம் 2,54,420 மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.


இவை தவிர, ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தோட்டக்கலைப் பண்ணைகளில் சுந்தரமுடையான் பண்ணையில் 2 லட்சமும்,கீழநாகாச்சி அரசு தோட்டக்கலைப் பண்ணையில் 7 லட்சம் மரக்கன்றுகளும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

மொத்தம் 6 இடங்களில் உற்பத்தி செய்யப்படும் இந்த மரக்கன்றுகளை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களைக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சாலையோரங்கள், அரசு அலுவலக வளாகங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், அரசு புறம்போக்கு இடங்கள் மற்றும் கண்மாய்க் கரைகளில் நடப்பட உள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தினை பசுமை பரப்புமிக்க பகுதியாக மாற்றிட, மாவட்ட நிர்வாகம் எடுக்கும் முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றும் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பாம்பன் ஊராட்சியை சேர்ந்த குந்துகால் கிராமத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மணிமண்டபம் அருகே 420 மீட்டர் நீளமுள்ள கற்சாலை அமைக்கப்பட்டு வருவதையும் ஆட்சியர்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆட்சியருடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பழனி சென்றிருந்தார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுர அரசு பள்ளி சாதனை, இது வரை 5 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்துள்ளன!!

No comments :
ஒரே அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த 5 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்துள்ளன. அவர்களில் 2 பேர் சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு சென்னையில் கடந்த 20-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், கலந்து கொள்ள 25,379 பேருக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. 3-ஆவது நாளான புதன்கிழமை, ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 5 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இந்த மாணவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மருத்துவக் கல்லூரியில்: ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மனோஜ் குமார், பிளஸ் 2 தேர்வில் 1,175 மதிப்பெண் பெற்று, எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 199.75 கட்-ஆஃப் பெற்றுள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவருக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இவரின் தந்தை ரங்கசாமி ஹோட்டலில் பணியாளராக உள்ளார். தாய் அமராவதி 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் கூலி வேலைக்குச் செல்கிறார்.



அதே பள்ளியைச் சேர்ந்த ஆர்.செல்வபாண்டி பிளஸ் 2 தேர்வில் 1,157 மதிப்பெண் பெற்று, 197.50 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளார். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த இவரும் சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்தார். இவரது தந்தை எஸ்.ரமேஷ் கூலிக்கு ஆடு மேய்ப்பதாகவும், தாயார் பாண்டியம்மாள் 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலி வேலைக்குச் செல்வதாகவும் தெரிவித்தார்.

தமிழ் வழியில் பயின்றவர்கள்: இதுதவிர, அதே பள்ளியைச் சேர்ந்த எஸ்.ஜெ.சூரியபிரகாஷ், டி.இலக்கிய எழிலரசி ஆகியோருக்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. நஸ்ரின் என்ற மாணவிக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இவர்கள் அனைவரும் தமிழ் வழியில் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக பள்ளியின், பிளஸ் 2 உயிரியல் ஆசிரியர் சி. ஆறுமுகம் கூறியது:  தமிழக அரசின் எலைட் வகுப்புகள் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது. அதன் காரணமாக கடந்த ஆண்டும் இரு மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. மருத்துவம், பொறியியல் படிப்பதற்காக மனதளவிலும் மாணவர்களை பயிற்றுவிக்கிறோம். தமிழில் படித்த எங்கள் பள்ளி மாணவர்கள் பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்வியிலும் சிறந்த மதிப்பெண் பெறுகின்றனர் என்றார் அவர்.

மேலும் இதே பள்ளியில் படித்த கார்த்திக், கட்-ஆஃப் - 196.70 (மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு), எம். சுஜித், கட்-ஆஃப் - 195.50 (தாழ்த்தப்பட்ட பிரிவு), பி.கோகிலா, கட்-ஆஃப்  195.75 (தாழ்த்தப்பட்ட பிரிவு) எம். மகேஷ்குமார், கட்-ஆஃப் - 195 (தாழ்த்தப்பட்ட பிரிவு) ஆகியோருக்கும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)