முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, August 30, 2016

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் துவங்க கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டமான "நீட்ஸ்'  திட்டத்தின் கீழ் ரூ. ஒரு கோடி வரை கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயமாக தொழில் செய்து தங்களது வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின்(நீட்ஸ்)கீழ் கடனுதவி பெற மாவட்டத் தொழில் மையத்தை அணுகலாம். பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழில்பயிற்சி படிப்பு மற்றும் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் தொழிற்கல்வி படித்த இளைஞர்கள் சுயமாக தொழில் துவங்க மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 21 முதல் 35, சிறப்புப் பிரிவினருக்கு 21 முதல் 45 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் துவங்குவதற்கு குறைந்த பட்சம் ரூ.5 லட்சம் முதல் அதிக பட்சம் ரூ.ஒரு கோடி வரை 25 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். முறையாக கடனை திருப்பிச் செலுத்துவோருக்கு 3 சதவிகித பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் இந்நிதியாண்டில் 9 இளைஞர்களுக்கு மொத்தம் ரூ.2.36 கோடி மதிப்பில் ரூ.51.01 லட்சம் மானியத்துடன் கடனுதவி பெற்று புதிதாக தொழில் துவங்கியுள்ளனர்.

நடப்பு நிதியாண்டில் 10 இளைஞர்களுக்கு ரூ.3.66 கோடி மதிப்பில் ரூ.80.79 லட்சம் கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள தகுதியான இளைஞர்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட தொழில மையத்தினை அணுகி பயன் பெறலாம் எனவும் ஆட்சியரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுளளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)