முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, October 8, 2016

300 ஆண்டுகளுக்குப் பின்னர் தூர்வாரப்படுகிறது முகவை ஊருணி!!

No comments :
ராமநாதபுரம் மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதியால் உருவாக்கப்பட்டு, நகர் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கிய முகவை ஊருணி, 300 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது தூர்வாரப்படுவது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ராமநாதபுரம் அரண்மனையின் மேற்குப் பகுதியில் 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது முகவை ஊருணி. ராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதியால் உருவாக்கப்பட்ட இந்த ஊருணியில், பொதுமக்கள் குடங்கள் மூலமாகவும், மாட்டு வண்டிகள் மூலமாகவும் குடிநீரை எடுத்துச் செல்வது வழக்கமாகவும் இருந்துள்ளது.

வற்றாத ஊருணியான இது, நகர் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கியது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தண்ணீரின்றி வற்றிப்போனது. மேலும், ஆகாயத் தாமரைச் செடிகள் அடர்ந்து வளர்ந்து ஊருணியை மூடியிருந்தன.

தற்போது, இந்த ஊருணி சுமார் 12 அடி ஆழத்துக்கு தூர்வாரப்பட்டு வருகிறது. இதில், 5-க்கும் மேற்பட்ட ஜே.சி.பி. இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தூர்வாரி அள்ளும் மணலால் கரைகளும் பலப்படுத்தப்படுகின்றன. சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஊருணி தூர்வாரப்படுவதால், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீர் பெருகியிருப்பதாக, பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அப்பகுதியில் வசிப்பவரும், வரலாற்று ஆய்வாளருமான வைகிங் எம்.எஸ். கருணாநிதி கூறியது:

ராமநாதபுரத்தை மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதி 1678 முதல் 1710 வரை ஆண்ட காலத்தில் இந்த ஊருணி உருவாக்கப்பட்டது. 1970 வரை ஊர் மக்களே குடங்களைக் கொண்டுவந்து தண்ணீரை எடுத்துச் சென்றனர். ஊருணிக்குள் யாரும் இறங்கக் கூடாது என்றும், அதற்காக இரு காவலர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்த ஊருணிக்குள் மன்னரும், ராணியும் குளித்து மகிழ்வதற்காக மாம்பழ வடிவில் மாம்பலக் கேணி மற்றும் வட்டக் கேணி, சதுரக் கேணி, நெய்க்கிணறுக் கேணி என 4 வகையான நீரூற்றுக் கிணறுகளும் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும், மன்னர் தான் இறந்த பிறகு மாம்பழக் கேணிக்கு நேர்கோட்டில் எதிர்ப்புறத்தில் தனது சமாதியை அமைக்கும்படியும் கூறியிருந்தார். அதன்படியே அவரது சமாதியை, மருமகனான விஜயரகுநாத சேதுபதி அமைத்துள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஊருணி சுமார் 325 ஆண்டுகளாக தூர்வாரப்படாமலேயே இருநதது. ஆகாயத் தாமரைச் செடிகள் மண்டிக் கிடந்தன. தற்போது, இந்தக் கண்மாய் தூர்வாரப்படுவதால், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர்வளம் பெருகியிருக்கிறது. குளிர்ந்த காற்றும் வீசுகிறது என்றார்.

இது குறித்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் கூறியது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 33 கண்மாய்கள் ரூ. 26 கோடி மதிப்பில் தூர்வாரப்பட்டு வருகிறது. ரூ. 3 கோடி மதிப்பில் வரத்துக் கால்வாய்களின் மேம்பாட்டுப் பணிகளும் நடந்து வருகின்றன. மழைக் காலத்தில் நீரை சேமித்து விவசாயப் பணிகளுக்கு ஏதுவாக இருக்கும் வகையில் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் இலவச ”மொபைல் செர்வீஸ்” பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரத்தில் வங்கிக்கிளை சார்பில் இம்மாதம் 13 ஆம் தேதி முதல் இலவச செல்லிடப்பேசி பழுதுநீக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் இப்பயிற்சியை அளிக்கிறது. இதுகுறித்து பயிற்சி மையத்தின் இயக்குநர் ஆர்.சியாமளாகுமார்  புதன்கிழமை கூறியது:

இப்பயிற்சி வகுப்பில் அனைத்து ஆண்டிராய்டு செல்லிடப்பேசிகளையும் பழுது நீக்குவது குறித்து கற்றுத்தரப்படும்.
பயிற்சி வகுப்பு தினசரி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தொடர்ந்து 21 நாள்கள் நடத்தப்படும்.


பயிற்சியின் போது தேநீர், மதிய உணவு, பயிற்சிக்கான கையேடுகள், பழுதுநீக்கும் மென்பொருள் குறுந்தகடுகள் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியில் சேர 10 ஆம் வகுப்பு வரை படித்திருந்தாலே போதுமானது. ஆண்,பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். முதலில் வரும் 30 நபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டு பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

நவம்பர் முதல் தேதியிலிருந்து இன்வெர்ட்டர், யூ.பி.எஸ். தயாரிப்பது, பழுது நீக்கும் பயிற்சி தொடங்கும். இப்பயிற்சிக்கு 8 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். இந்த பயிற்சியும் இலவசமாக 21 நாட்கள் கற்றுத்தரப்படும்.


மேலும் விபரங்களுக்கு 9443896577  அல்லது 04567 221612 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)