முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, October 26, 2016

தேவர் ஜயந்தி விழாவை முன்னிட்டு வாகனங்களுக்கான வழித்தடங்கள் அறிவிப்பு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அக். 30ஆம் தேதி நடைபெறவுள்ள தேவர் ஜயந்தி விழாவுக்கு வெளிமாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கான வழித்தடங்களை மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியில் திரும்பிச் செல்ல வேண்டும்.  சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் திருச்சி, மதுரைமானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பிச் செல்ல வேண்டும்.
 


கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் திண்டுக்கல், மதுரை, மானாமதுரை வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பிச் செல்ல வேண்டும்.  மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, செல்ல வேண்டும்.  தூத்துக்குடி, திருநெல்வேலி,கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி, மண்டபசாலை, க.விலக்கு, கண்ணார்பட்டி, கமுதி வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பிச் செல்ல வேண்டும். அல்லது தூத்துக்குடி, சூரங்குடி,சாயல்குடி, கோவிலாங்குளம், கமுதி வழியாக பசும்பொன் வந்து அதே வழியாகவும் திரும்பிச் செல்லலாம்.

விருதுநகர் மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை,எம்.ரெட்டியபட்டி,க.விலக்கு, கண்ணார்பட்டி, கமுதி வழியாக பசும்பொன் வந்து அதே வழியாகவே திரும்பச் செல்ல வேண்டும்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டதாக ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்பகுதி உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் அக். 24ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்களை நியமித்து அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் செவ்வாய்க்கிழமை காலை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

மாவட்ட ஊராட்சியின் தனி அலுவலராக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி பொறுப்பேற்றுக் கொண்டார். ஊராட்சி ஒன்றியங்களை பொறுத்த மட்டில் ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, போகலூர், நயினார்கோயில் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களின் தனி அலுவலராக உதவி இயக்குநராக(ஊராட்சிகள்) பணிபுரிந்து வரும் ஆ.செல்லத்துரையும், மண்டபம்,திருப்புல்லாணி,பரமக்குடி, கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களின் தனி அலுவலராக உதவி இயக்குநராக (தணிக்கை) பணிபுரிந்து வரும் அ.பொ.பரமசிவமும் பொறுப்பேற்றுக் கொண்டனர். கிராம ஊராட்சிகளின் தனி அலுவலராக அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதே போன்று பேரூராட்சி நிர்வாகத்தை பொறுத்தமட்டில் கமுதி பேரூராட்சியின் தனி அலுவலராக சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் பி.பாலமுருகனும்

சாயல்குடி,அபிராமம்,மண்டபம்,ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை,தொண்டி ஆகிய பேரூராட்சிகளின் தனி அலுவலராக கமுதி பேரூராட்சியின் செயல் அலுவலரான ச.குமரேசனும் பொறுப்பேற்றுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளிலும் அந்தந்த நகராட்சிகளின் ஆணையாளர்கள் அதன் தனி அலுவலர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.நியமனம் செய்யப்பட்டுள்ள தனி அலுவலர்கள் அனைவரும் அவர்களது பதவிக்கான பணிகளை செய்து வருவதுடன் தனி அலுவலருக்கான பணிகளையும் கூடுதலாக பார்த்து வர வேண்டும் எனவும் அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)