Saturday, October 29, 2016
காஷ்மோரா - தமிழ் திரை விமர்சனம்!!
பேய், பில்லிசூனியம் போன்றவற்றை
நம்புகிறவர்களை ஏமாற்றிப் பிழைக் கிறார் காஷ்மோரா (கார்த்தி). அவரது ஏமாற்று
வேலைகளுக்குக் குடும் பமும் கைகொடுக்கிறது.
காவல்துறை ஆணையர் முதல், அரசியல் பெரும்புள்ளி வரை காஷ்மோராவை நம்பும் நேரத்தில், அவரும் அவரது குடும்பமும் ஏழு நூற்றாண்டுகள் பழமையான ஒரு பேயிடம்
சிக்கிக்கொள்கிறார்கள். அந்தப் பேய் யார்? அதன் நோக்கம் என்ன? அதனிடமிருந்து அவர்களால் தப்பிக்க முடிந்ததா என்பதுதான் காஷ்மோரா.
நிகழ்காலம், கடந்த காலம் இரண்டையும்
இணைத்துக் குழப்பம் இல்லாத திரைக் கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் கோகுல்.
முதல் பாதித் திரைக்கதையில் கூறியது கூறல் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது.
கார்த்தி ஒரு ஏமாற்றுக்காரர் என்பது இரண்டாவது காட்சியிலேயே தெரிந்துவிடுகிறது.
அதன் பிறகும் கார்த்தி யின் மோசடி ஜாலங்களை விரிவுபடுத்திக் கொண்டே போவது
தேவையற்றது.
இருப்பினும் அரசியல்வாதி தனக் கோடி (சரத் லோகிதாஸ்வா), அவர் கண்மூடித் தனமாக நம்பும் சீனியர் போலிச் சாமியார் திருக்கோடி (மதுசூதனன்), அவரது கைத்தடிகள் ஆகியோர் காஷ்மோரா ஆடும் ஆட்டத்தில் கடப்பாரையை
விழுங்கிவிட்டு சுக்குக் கஷாயம் குடித் ததுபோல் அல்லாடும் காட்சிகள் சிரிப்புக்கு
உத்தரவாதம்.
நகைச்சுவையைக் கதையோட்டத்தில் இயல்பாகக் கையாண்டிருக்கிறார்
இயக்குநர். காட்சிகள்,
கதாபாத்திரங்களை வடி வமைத்த விதமும் பாராட்டத்தக்கவை.
நயன்தாராவின் பாத்திரமும் 700
ஆண்டு களுக்கு முந்தைய காட்சிகளும் பேய் வீட் டில்
மாட்டிக்கொண்டு கார்த்தி குடும்பம் படும் அவஸ்தையும் நன்றாக உள்ளன.
பேய் வீட்டுக்குள் கார்த்தி மாட்டிக்கொள்ளும் காட்சியில்
காட்சியமைப்பும் கார்த்தி யின் நடிப்பும் அருமை. அதே வீட்டில் ஏற்கனெவே
மாட்டிக்கொண்டிருந்த முரு கானந்தமும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
ஆவி,
பேய் ஓட்டுவதாகச் சொல்லும் ஆசாமிகள் அதை எப்படி வணிகமாக
மாற்றியிருக்கிறார்கள் என்பதை முதல் பாதியில் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்
இயக்குநர். ஆனால் இரண்டாம் பாதி முழுக்க முழுக்கப் பேய்களின் ஆதிக்கமாக
இருக்கிறது. பேய்கள் இருப்பது நிஜம் என்று (மூட நம்பிக்கையை) வலியுறுத்தி னால், பேய் ஓட்டும் (மோசடி) ஆசாமி களும் இருக்கத்தானே செய்வார்கள்?
போர்க்களக் காட்சிகளில் காட்சி யமைப்பு கவரும் அளவுக்குச்
சண்டை அமைக்கப்பட்ட விதம் கவரவில்லை. தளபதி கார்த்தி போடும் சண்டைகள் மாயா
ஜாலம்போல உள்ளன. நயன்தாராவின் நடனக் காட்சி சிறப்பாக உள்ளது.
கார்த்திக்கு இரண்டு வேடங்கள். மூன்று பரிமாணங்கள். கிரந்த
தேசத்தின் தளபதி ராஜ்நாயக்,
அவனது ஆவி, பேயோட்டி காஷ்மோரா ஆகிய
மூன்று தோற்றங்களும் நன்றாகவே பொருந்தி யிருக்கின்றன. மொட்டைத் தலையில் வல்லூறு
உருவத்தைப் பச்சை குத்திக் கொண்டு வரும் தோற்றத்திலேயே அசத்து கிறார். கருந்தாடியை
கர்வமாகத் தடவிக் கொண்டு,
வீரத்தையும் பெண்ணாசையை யும் வெளிப்படுத்தும் நடிப்பில்
ஈர்க்கிறார். காஷ்மோரா பாத்திரத்தில் வழக்கமான ‘கலகல’
கார்த்தியாகக் கவர்கிறார்.
நயன்தாராவுக்குத் தரப்பட்டிருக்கும் இடம் குறைவு. ஆனால்
அவர் வரும் எல்லாக் காட்சிகளும் கம்பீரம் கலந்த வசீகரம். நெடுநாட்களுக்குப்
பிறகு விவேக் காமெடியில் முத்திரை பதிக்கிறார்.
ஆங்கோர்வாட் கோவிலும், கிரந்த தேச அரண்மனை
செட்டும்,
ரத்னமாலாவின் அந்தப்புர அரண்மனை செட்டும், கிராஃபிக் ஸில் உருவாக்கப்பட்டுள்ள செட்களும் காட்சிகளின் பிரம்மாண்டத்துக்கு
உதவி யிருக்கின்றன. பல காட்சிகளில் சிறப்பாக இருக்கும் கிராஃபிக்ஸ் காட்சிகள், பேய் மரம் நடந்துவருவது போன்ற சில இடங்களில் பலவீனமாக இருக்கிறது.
கடந்த காலக் கதாபாத்திரங்கள் மீது நம்பகத் தன்மையை
உருவாக்குவதில் கலை இயக்கம் (ராஜீவன்), ஆடைகள் வடிவமைப்பு
(நிஹார் தவான்,
அனுவர்த் தன், பெருமாள் செல்வம்)
ஆகியவற்றுக்கு எந்த அளவு பங்கிருக்கிறதோ, அதே அளவுக்கு வசனங்களுக்கும்
(கோகுல்,
ஜான் மகேந்திரன், ஆர்.முருகேசன்)
பங்கிருக்கிறது. “ராஜ் நாயக் இருக்கும் இடத்தில் வாளையும் வார்த்தைகளையும் பார்த்து வீச
வேண்டும்”,
‘பிணமேடையின் மீது மணமேடை அமைத்த மயக்கத்தில் இருந்தவனே..’ போன்ற வசனங்கள் காட்சிக்கு வலிமை சேர்த்து மனதில் தங்கிவிடுகின்றன.
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் உள்ளரங் கக் காட்சிகளை
எடுத்துக்காட்டிய விதத்தில், ஒளியமைப்பு, கேமரா நகர்வுகள் ஆகியவற்றில் பிரம்மாண்டத்தை நிலைநிறுத்தியிருக்கிறார்.
சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை படத்தோடு ஒன்றவைக்கிறது. கல்பனா ரவீந்தரின் குரலில்
ஒலிக்கும் ‘ஓயா ஓயா’
பாடல் ரத்னமாலா கதாபாத்திரத்தின் வலியையும் சதியையும்
நமக்குக் கடத்திவிடுகிறது. போர்க்களப் பாடல் கம்பீரமாக ஒலிக்கிறது.
முன்பாதியின் வேகத்துக்கு முழுசாக ஈடுகொடுக்க முடியவில்லை
என்றாலும்... நகைச்சுவை,
பிரம்மாண்டம், முன்னணி நட்சத்திரங்கள்
ஆகிய அம்சங்களோடு,
கொஞ்சம் சமூக அக்கறையும் கலந்து தருவதில் சொல்லத்தக்க அளவு
வெற்றி பெற்றிருக்கிறது காஷ்மோரா படக் குழு.
-ஹிந்து
விமர்சனம்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
அரசு மருத்துவமனைகளில் பணி நேரத்தில் இல்லாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - கலெக்டர்!!
ராமநாதபுரத்தில் அரசு மருத்துவமனைகளில் பணி நேரத்தில்
இல்லாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட
ஆட்சியர் எஸ். நடராஜன் வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளார்.
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியாக
தரம் உயர்த்தப்படும் வகையில், நவீன வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.
இம்மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் பலரும் பணி நேரத்தின்போது, பணியில் இல்லாமல் இருப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு ஏராளமான புகார்கள்
அனுப்பப்பட்டுள்ளன. அதன்பேரில், ஆட்சியர் எஸ். நடராஜன்
வெள்ளிக்கிழமை திடீரென அங்கு சென்று ஆய்வு செய்தார்.
அதன்பின்னர், அவர் செய்தியாளர்களிடம்
கூறியதாவது:
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சில மருத்துவர்கள் மட்டும் உரிய தகவலின்றி பணியில் இல்லாமலும், பணி நேரத்தில் பணியாற்றாமலும் இருந்து வருவதாகப் புகார்கள் வந்துள்ளன. இதனால், திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது, மருத்துவர்களின் வருகைப் பதிவுக்கான பயோ-மெட்ரிக் கருவி பழுதாகி இருந்ததும் தெரியவந்தது. உடனடியாக, அதை பழுதுநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து பயோ-மெட்ரிக் வருகைப் பதிவை கண்காணிக்கவும், மருத்துவத் துறை இணை இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தின் முக்கிய இடங்களில் ரகசிய கேமராக்கள் பொருத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு சாராத 5 கண் மருத்துவமனைகள் மூலம்
கண் சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டன. கடந்த 2015 ஜனவரி
முதல் ஜூன் வரை 526 பேருக்கு கண் அறுவைச் சிகிச்சை செய்து
கண்ணொளி பெற்றுள்ளனர்.
185
பேருக்கு அரசு மானியத் தொகையாக தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1.85 லட்சத்துக்கான
காசோலைகளும் வழங்கப்பட்டதாகவும், ஆட்சியர் தெரிவித்தார். இந்த
ஆய்வின்போது, மருத்துவத் துறை இணை இயக்குநர் டாக்டர்
சகாயஸ்டீபன்ராஜ், சுகாதாரப் பணிகள் துறையின் துணை
இயக்குநர் டாக்டர் மீனாட்சி, அரசு தலைமை மருத்துவமனைக்
கண்காணிப்பாளர் (பொறுப்பு) சாதிக்அலி ஆகியோரும் உடனிருந்தனர்.
செய்தி:
தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)