முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, November 23, 2016

இதுவரை ரூ.6 லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் ஆகியுள்ளது!!

No comments :
அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசு அறிவிப்பிற்கு பின், இதுவரை ரூ.6 லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் ஆகியுள்ளதாகவும், மேலும் ரூ.15 லட்சம் கோடி டெபாசிட் ஆகும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8-ஆம் தேதி அதிக மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரமதர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்தின் பல நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இவை அனைத்தையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி, வழக்கு தொடர்ந்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.


மேலும், இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க விரும்பவில்லை. பல்வேறு பிரச்னைகள் உள்ளன. மக்கள் தங்களின் பிரச்சனைகளுக்கு சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றங்கள் மூலம் நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தது. தொடர்ந்து, ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசு எடுத்திருக்கும் உரிய நடவடிக்கை என்ன? தற்போது அதன் நிலைமை என்ன? இதுவரை எவ்வளவு பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றம் அட்டர்னி ஜெனரலிடம் கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்து பேசிய அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, வங்கிகளில் இதுவரை ரூ.6 லட்சம் கோடிக்கும் மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ரூ.15 லட்சம் கோடி வரை டெபாசிட் ஆகும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். ரூபாய் நோட்டு விவகாரத்திற்கு பிறகு ஆன்லைன் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளதாகவும், மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

கருப்பு பணம் மற்றும் போலி ரூபாய் நோட்டுக்களை ஒழிப்பதற்காகவே, அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், தற்போதைய நிலைமையை கண்காணிக்க தனி குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் முகுல் கூறினார்.

இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணையை டிசம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)