முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, December 7, 2016

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!!

No comments :
முதல்அமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள், அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மாவட்டம் முழுவதும் பஸ்கள் ஓடவில்லை. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த தகவல் அறிந்ததும் ஒட்டுமொத்த தமிழகமும் சோகத்தில் மூழ்கியது. குறிப்பாக நேற்று முன்தினம் மாலை முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவல் பரவியதும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உடனடியாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. சிறிய பெட்டிக்கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை அனைத்தும் உடனுக்குடன் மூடப்பட்டன.



பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தவர்கள் அவசர அவசரமாக தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். இதுதவிர, பல்வேறு வேலை நிமித்தமாக வெளியில் வந்தவர்களும் முதல்அமைச்சரின் உடல்நிலை குறித்த தகவல் அறிந்து வேலைகளை அப்படியே விட்டுவிட்டு பதறி அடித்தபடி வீடுகளை நோக்கி சென்றனர். இதன்காரணமாக நேற்று முன்தினம் மாலை ராமநாதபுரத்தில் எங்கு பார்த்தாலும் வாகனங்கள் சீறிப்பாய்ந்தபடி சென்றன.

திடீரென்று மாறிய சூழ்நிலை காரணமாக தங்களின் இருப்பிடங்களை நோக்கி மக்கள் செல்ல ஆரம்பித்ததால் சாலைகளில் வாகன நெருக்கடி அதிகமாக காணப்பட்டது. வெளியூர்களில் இருந்து ராமநாதபுரம் வந்திருந்தவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்வதற்காக பஸ் நிலையங்களை நோக்கி வர ஆரம்பித்தனர். அசாதாரண சூழ்நிலை காரணமாக பெரும்பாலான கிராமப்பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள் உடனடியாக நிறுத்தப்பட்டன. இதன்காரணமாக பஸ் நிலையத்திலும் ஏராளமான பயணிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர்.
பஸ்கள் எதுவும் பஸ்நிலையத்துக்கு வராததால் தங்கள் பகுதிக்கு செல்லமுடியாது என்று பொதுமக்கள் அஞ்சினர். இதனால் பஸ்நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக தேவையான பஸ்களை அனுப்பி வைத்தது. குறிப்பிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு சென்றனர்.

நேற்றுமுன்தினம் மாலையில் ராமநாதபுரம் நகர் முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி காட்சியளித்தது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடைவீதிகள் மற்றும் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆட்டோக்கள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் செல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அதிரடிப்படை வீரர்களுடன் நகர் முழுவதும் சுற்றி வந்து சூழ்நிலைக்கேற்றவாறு அந்தந்த பகுதிகளில் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி கண்காணித்தார்.

இந்தநிலையில் முதல்அமைச்சர் இறந்த தகவலை தொடர்ந்து நேற்று மாவட்டம் முழுவதும் டீக்கடைகள், பெட்டிக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும், ஓட்டல்களும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. பெட்ரோல் பங்குகள், திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை.

ராமநாதபுரம் நகரில் போக்குவரத்துக்கழக அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் செயலாளர் தமிழ்செல்வம் தலைமையிலும், கேணிக்கரை பகுதியில் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் வீரபாண்டி தலைமையிலும் அ.தி.மு.க.வினர் முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

ஏர்வாடியில் ஊராட்சி கழக செயலாளர் செய்யது அகமது தலைமையில் அக்கட்சியினர் ஏராளமானோர் ஏர்வாடியில் இருந்து தர்கா வரை ஊர்வலமாக சென்று பின்னர் முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.