(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, January 22, 2017

ராமநாதபுர மாவட்டத்தில் தொடரும் ஜல்லிக்கட்டு போராட்டம்!!

No comments :
ராமநாதபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சனிக்கிழமை 4 ஆவது நாளாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் பட்டினம் காத்தான் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக ஏராளமான மாணவர்கள் இரவு, பகலாகத் தொடர்ந்து 3 நாள்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் சனிக்கிழமை 4 ஆவது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர்.

சனிக்கிழமை மாலை போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்ற செய்தி தெரியவந்தது. அப்போது அங்கிருந்த இளைஞர்கள் பலரும் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை இந்த இடத்தை விட்டு எழ மாட்டோம் என்று கூறி, நிரந்தரத் தீர்வு தேவை என்று கோஷம் எழுப்பினர்.

ராமநாதபுரம் எஸ்.பி. ந.மணிவண்ணன் நேரடி மேற்பார்வையில் ஏ.எஸ்.பி. செல்வராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றி அலுவலகம் முன்பாக பாரம்பரியம் மீட்புக் குழு என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அறவழி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். இப்போராட்டத்தில் ஆத்ம கார்த்திக், தினேஷ்பாபு, பி.ஆர்.என்.ராஜாராம் பாண்டியன், பிரவீன் ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இவர்கள் அனைவரும் வெளிநாட்டுக் குளிர் பானங்களை பாடையில் கட்டி இறுதிச்சடங்கு நடத்தினர். மேலும் வெளிநாட்டுக் குளிர்பானங்களை விற்கவோ அல்லது வாங்கவோ மாட்டோம் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உண்ணாவிரதக் கூட்ட அரங்கத்திற்கு முன்பாக சேவல் சண்டையும் நடத்தினர்.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத்தீர்வு கிடைக்கும் வரை இதே இடத்தில் இருநது அறவழி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கொட்டும் மழையில்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கமுதி, கடலாடி பகுதிகளில் மாணவர்களுடன் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கொட்டும் மழையில் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஏனாதி பூங்கதிர்வேல் தலைமை வகித்தார். வர்த்தக சங்க மாநில துணைத் தலைவர் வி,கருப்பசாமி மற்றும் தமுமுக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில் நுட்ப கல்லூரியின் மாணவ, மாணவிகள் பேரையூரில் இருந்து முதுகுளத்தூருக்கு பேரணியாக வந்து, காந்தி சிலையின் முன்பு போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்திற்கு கல்லூரியின் நிறுவனர் எம்.ஐ.அகமது யாசின் தலைமை வகித்தார். முதுகுளத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணபதி, காவல் ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், முத்துராஜ் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கமுதி பசும்பொன் தேவர் நினைவுக் கல்லூரி மாணவர்களுடன் பல்வேறு அமைப்புகளும், இளைஞர்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலாடியில் தேவர் உறவின்முறை சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்களும்,வியாபாரிகளும், இளைஞர்களும் பங்கேற்றனர்.

பள்ளி மாணவ, மாணவிகள்: திருவாடானை அருகே கீழக்கோட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாணவ,மாணவிகள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள், பீட்டாவிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment