(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, February 12, 2017

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,53,340 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் பாதிப்பு - கலெக்டர்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவு பருவமழை பெய்யாததால் 1,53,340 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் அருகே தொருவளூர் கிராமத்தில் பெரியகண்மாய் உள்புற நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளை சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் கூறியது:

இம்மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிர்பார்த்து 1,55,305 ஹெக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியம் மற்றும் இதர பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. ஆனால் பருவமழை பெய்யாததால் 1,53,340 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டன. பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் மொத்தம் 1,26,049 விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்துள்ளனர்.

வறட்சியினால் ஏற்பட்டுள்ள பயிர்ப் பாதிப்புகளை மத்தியக் குழு அலுவலர்கள் ஆய்வு செய்தனர். விவசாயிகளுக்கு உரிய பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்க ஏதுவாக மாவட்டத்தில் வருவாய் கிராமம் வாரியாக அடிப்படை மகசூல் அளவுக் கணக்கீடு செய்வதற்காக புள்ளியியல் துறையின் மூலம் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் தலா 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.


இவ்விடங்களில் பயிர் அறுவடை பரிசோதனைகள் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்டத்தில் நெல் மற்றும் பயிர் வகைகளில் மொத்தம் 1,796 எண்ணிக்கையிலான பயிர் அறுவடை பரிசோதனைகள் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அவற்றில் இதுவரை 1,736 பரிசோதனைகள் நடந்து முடிந்துள்ளன. இதன் முடிவுகள் மத்திய, மாநில அரசுகளுக்கு செல்லிடப்பேசி மற்றும் இணையதளம் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இலக்கு நிர்ணயிக்கப்பட்டபடி பயிர் அறுவடைப் பரிசோதனைகள் அனைத்தும் விரைந்து மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார்.

அப்போது, வேளாண்மை இணை இயக்குநர் அரிவாசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெள்ளைச்சாமி, வேளாண்மை அலுவலர் அம்பேத்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment