Wednesday, March 1, 2017
ராமநாதபுரம் மாவட்டத்தில் இயற்கை எரிவாயு எடுக்க ஆய்வு பணிகள் தீவிரம், போராட்டத்தில் இறங்க தயாராகும் மக்கள்!!
நாடு
முழுவதும் பல்வேறு இடங்களில் ஹைட்ரோகார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்க
மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
புதுக்கோட்டை
மாவட்டம் நெடுவாசல் பகுதியில் இந்த திட்டத்தின் கீழ் இயற்கை எரிவாயு எடுக்க அனுமதி
அளிக்கப்பட்டு ஆய்வு பணிகள் முடிவடைந்துள்ளதால் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டு
போராட்ட களமாக மாறி உள்ளது. இந்த போராட்டம் அந்த பகுதி மக்களின் போராட்டமாக
மட்டுமல்லாது ஒட்டு மொத்த தமிழக நலன் சார்ந்த போராட்டமாக உருவெடுத்துள்ளது.
புதுக்கோட்டை
மாவட்டம் நெடுவாசல் பகுதியில் தொடர் போராட்டங்களை அறிவித்து கோரிக்கைகளுக்காக
அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக இணைந்து போராடி வரும் நிலையில் வறண்ட மாவட்டமான
ராமநாதபுரம் மாவட்டத்திலும் 22 இடங்களில் இயற்கை எரிவாயு
எடுப்பதற்கான ஆய்வு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவது தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் முதற்கட்ட ஆய்வில் ஹைட்ரோகார்பன் இருக்கும் இடங்களாக கண்டறியப்பட்டு
முழுமையான ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ள 22 இடங்களின்
சர்வே எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரகசியமாக இந்த
ஆய்வு பணிகள் இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் திருப்புல்லாணி, பெரியபட்டிணம், ரெகுநாதபுரம், உத்தரகோசமங்கை
அருகே உள்ள பனைக்குளம், களரி, புல்லந்தை, புத்தேந்தல், உத்தரகோசமங்கை, அச்சடிபிரம்பு, பட்டணம்காத்தான், பழங்குளம், சித்தார்கோட்டை, தேவிபட்டிணம், பெருவயல், அத்தியூத்து, ஆற்றாங்கரை, கீழநாகாச்சி, பிரப்பன்வலசை, சாத்தக்கோன்வலசை
உள்பட 22 இடங்களில் இயற்கை எரிவாயு
ஆய்வு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த
பகுதிகளில் ஒரு சில இடங்களில் ஆய்வு பணிகள் தொடங்கி ஏறத்தாழ முடிவடையும் தருவாயில்
உள்ளன. ஆய்வு பணியின் போது போதிய விழிப்புணர்வு இல்லாததால் பொதுமக்களிடையே எந்த
எதிர்ப்பும் ஏற்படவில்லை. நெடுவாசல் போராட்டத்தினை தொடர்ந்து ராமநாதபுரம்
மாவட்டத்தில் இயற்கை எரிவாயு எடுப்பதற்காக ஆய்வு நடந்து வரும் இடங்களுக்கு
பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே
நிலத்தடி நீரின்றி வறண்டு போய் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி இருக்கும் இந்த
மாவட்டத்தில் இயற்கை எரிவாயு ஆய்வு திட்டத்தினால் பூமிக்கடியில் இருக்கும்
நிலத்தடி நீரை முழுமையாக அகற்றி விடுவதோடு, நீரடுக்கு
சுழற்சி ஓட்டங்களை சிதறடித்து தண்ணீரே இல்லாத பகுதியாக மாற்றிவிடும் முயற்சியில்
மத்திய அரசு இறங்கி உள்ளதாக பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இயற்கை
எரிவாயு திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, ராமநாதபுரம்
மாவட்டத்தில் இயற்கை எரிவாயு திட்டத்துக்காக ஆய்வு நடைபெற்று வரும் பகுதிக்கு
அருகே உள்ள கிராமங்களுக்கு நாம் தமிழர் கட்சியினர் நேரில் சென்று மக்களை சந்தித்து
விளக்கி கூறி வருகின்றனர். இதன்காரணமாக மக்களிடம் எழுச்சி ஏற்பட்டு இயற்கை எரிவாயு
திட்டத்திற்கு எதிராக ராமநாதபுரம் மாவட்ட மக்களும் போராட தயாராகி வருகின்றனர்.
இதுதொடர்பாக
ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர்
தமீம்ராசா கூறியதாவது:–
ராமநாதபுரம்
மாவட்டத்தில் இயற்கை எரிவாயு திட்டத்துக்காக ஆய்வு நடத்த தகுதியான இடங்களின்
பட்டியல் சம்பந்தப்பட்ட ஆய்வு பணியை மேற்கொண்டு வரும் நிறுவனத்தின் இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.
இந்த
பகுதிகளில் ஆய்வு செய்யும் முன்பு, நிலத்தடி
நீருக்கும், விவசாயத்திற்கும் பாதிப்பு
ஏற்படாது என்பதை மத்திய அரசு வல்லுனர் குழு அமைத்து ஆய்வு செய்து அந்த அறிக்கையை
வெளிப்படையாக வெளியிடுவதோடு, மக்களின் கருத்துகளை
கேட்டறிந்து அதற்கு மதிப்பளித்து இந்த ஆய்வு பணிகளை தொடங்க வேண்டும்.
இவ்வாறு
அவர் கூறினார்.
செய்தி: தினத்தந்தி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment