(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, September 4, 2017

அழிந்து வரும் தென்னை விவசாயம்!!!

No comments :
கீழக்கரை, ஏர்வாடி, காஞ்சிரங்குடி, மாயாகுளம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன. நூற்றுக்கணக்கானோர் இப்பகுதியில் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான தேங்காய்கள் இப்பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் தொடர்ந்து ஏற்படும் பல்வேறு சிரமங்களால் பெரும்பாலானோர் தென்னை விவசாயத்தை விட்டு விட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆனால் தற்போது தென்னையை வளர்த்தாலும் கண்ணீர்தான் என்கிறார்கள் இப்பகுதி தென்னை விவசாயிகள். 

காஞ்சிரங்குடியில் தனியார் சார்பில் கயிறு திரிக்கும் தொழிற்சாலை, தேங்காய் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்தது. காலபோக்கில் அதுவும் மூடப்பட்டது. ஆனால் மிகப்பெரிய அளவில் தென்னை மரங்களை உடைய இப்பகுதியில் இன்று வரை அரசு சார்பில் தென்னை சம்பந்தப்பட்ட தொழிற்சாலை இல்லை என்பது ஆச்சரியமே.

தேங்காய் பவுடர், தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அதேபோல் தென்னை நாறுகளை கயிறுகளாக திரித்தும், அழகிய வீட்டு உபயோக விரிப்புகளாகவும், உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போன்றவற்றை இப்பகுதியில் அமைப்பதற்கு அரசு முன்வர வேண்டும். 

இதன் மூலம் இப்பகுதியில் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும் தென்னை மரங்களை அழித்து தென்னந்தோப்புகளை வீட்டு மனைகளாக விற்கும் அவல நிலையும் குறையும். தென்னை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கேரளாவில் பல்வேறு வசதிகளை அரசு ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அரசு அவர்களுக்கு அனைத்துவிதமான சலுகைகளையும் வழங்கி வருகிறது. ஏற்றுமதிக்கான சந்தைகளை உருவாக்கிக் கொடுத்துள்ளது.

மேலும் தென்னைக் கழிவுகளில், பல வகையான பொருட்களை உற்பத்தி செய்து உலக சந்தைக்கு எடுத்து செல்கிறது. இதனால் அங்கு தென்னை விவசாயம் பெருகுகிறது. 

இப்பகுதியில் உள்ள விவசாயத்துறை அதிகாரிகள் இவ்விசயத்தில் கவனம் செலுத்தி தென்னை விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும். தொடர்ந்து நஷ்டத்தை விவசாயிகள் சந்திப்பார்களேயானால் அவர்கள் அத்தொழிலில் இருந்து விலகி தற்போது மிஞ்சியிருக்கும் தென்னந்தோப்புகளும் அழிந்து போகும் சூழ்நிலை ஏற்படும்.

இப்பகுதி விவசாயத்துறை விழித்து கொள்ள வேண்டும்.
இதற்காக மக்கள் பிரதிநிதிகள் அரசை வலியுறுத்த வேண்டும்.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment