(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, October 9, 2017

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக தொழில் துவங்க ஆர்வமுள்ளவர்களுக்கு வரும் 11ம் தேதி சிறப்பு ஆலோசனை முகாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக தொழில் துவங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு வரும் 11ம் தேதி மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனை முகாம், தகுதியான நபர்களுக்கு உடனடி நேர்காணலும் நடத்தப்பட உள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட தொழில் மையத்தில் இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர் சுயதொழில் துவங்குவதற்கு மானியத்துடன் கூடிய பல கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில், உற்பத்தி தொழில்களுக்கு 25 சதவீத மானியத்துடன் அதிகபட்ச முதலீடு ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாவட்டத்திற்கான வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட மானிய ஒதுக்கீடு ரூ.36.67 லட்சத்திலிருந்து ரூ.45 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இத்திட்டத்தின்படி 25 சதவீதம் அரசு மானியத்துடன் உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரையிலும், சேவை தொழில்களுக்கு ரூ.3 லட்சம் வரையிலும், வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.


குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 18 முதல் 35 வயதுவரை உள்ள பொதுப்பிரிவினர் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியுடைவராவர். சிறப்பு பிரிவினர் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் வியாபாரத்தொழில்களாக பலசரக்கு கடை, எலக்ட்ரிக்கல் கடை, மருந்துக்கடை போன்ற வியாபார நிறுவனங்கள் தொடங்கவும், ஜெராக்ஸ், இருசக்கர வாகனங்கள் பழுதுபார்த்தல், மின்சாதனங்கள் பழுதுபார்த்தல், வாகனங்கள் கழுவுதல், கணினி மையங்கள், தையல், அழகுநிலையம், சலூன் போன்ற சேவை தொழில்கள் தொடங்கவும் சிமென்ட் செங்கல், பேவர் பிளாக், இறால் ஊறுகாய், உணவுப்பொருட்கள் உற்பத்தி, மின்சாதன உதிரிப்பாகங்களை கொண்டு மின்விளக்குகள் தயார் செய்தல், நவதானிய மாவுப்பொருட்கள் தயார் செய்தல், எண்ணெய் உற்பத்தி, காகிதப்பைகள், சங்கு சிப்பிகளை கொண்டு கைவினைப்பொருட்கள் தயார் செய்தல் போன்ற உற்பத்தி தொழில்கள் தொடங்கிட அரிய வாய்ப்பு உள்ளது.

பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடன்பெற கல்வித்தகுதி தேவையில்லை, வயது வரம்பு ஏதும் இல்லை, வருமான உச்சவரம்பும் இல்லை. உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க 15 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை அரசு மானியத்துடன் இத்திட்டத்தில் வங்கிகளின் மூலம் கடன் வழங்கப்படுகிறது. உற்பத்தி தொழிலுக்கு அதிகபட்ச திட்ட தொகையாக ரூ.25 லட்சமும், சேவை தொழில்களுக்கு ரூ.10 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி தொடர்பான தொழில் திட்ட முதலீடு ரூ.10 லட்சத்துக்கு மேலும் சேவை தொழில் திட்ட முதலீடு ரூ.5 லட்சத்துக்கு மேலும் பெற விரும்புவோர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பொதுப்பிரிவினர் நகர்ப்புறத்தில் தொழில் தொடங்கினால் 15 சதவீதம் மானியமும் ஊரகப்பகுதியில் தொழில் தொடங்கினால் 25 சதவீதம் மானியமும் பெற இயலும்.

இத்திட்டத்தில் தென்னைநார் கயிறு மற்றும் கயிறு பொருட்கள், கயிறு துகள் கட்டிகள், முந்திரி பதப்படுத்துதல், சிறுதானிய உணவுப்பொருட்கள் உற்பத்தி, கேக் மற்றும் பிஸ்கட் தயாரிப்பு, அயோடின் உப்பு தயாரிப்பு, சிமென்ட் செங்கல், பேவர் பிளாக், பர்னிச்சர், மரக்கழிவு பொருட்களிலிருந்து எரிபொருள் கட்டிகள் பி.வி.சி. பைப், அட்டைபெட்டிகள், ஆயத்த ஆடைகள், பெட்பாட்டில்கள், டிஜிட்டல் பிரிண்டிங், பிளக்ஸ் பேனர், அழகு நிலையம், உலர் சலவையகம் போன்ற தொழில்கள் இத்திட்டத்தில் தொடங்க அதிக வாய்ப்புள்ளது.

இத்திட்டம் பற்றிய விளக்கங்கள் பெறவும் வாய்ப்புள்ள தொழில்களை தேர்ந்தெடுத்து தொழில் தொடங்கிடவும் தொழில் ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு வரும் 11ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனை முகாமும், தகுதியான நபர்களுக்கு உடனடி நேர்காணலும் நடத்தப்பட உள்ளது. தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர் தங்களுடைய புகைப்படம் (பாஸ்போர்ட் சைஸ் போட்டோ- 2) கல்வி சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, ஆகியவற்றின் இரு நகல்கள் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேரடியாக வருபவர்களுக்கு விண்ணப்பம் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து தருவதுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும் வாய்ப்பளிக்கப்படும் என மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment