முகவை முரசு

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Thursday, January 5, 2017

மாவட்ட தொழில் மையம் சார்பில் 88 பயனாளிகளுக்கு ரூ.375.85 லட்சம் வங்கி கடனுதவி பெற பரிந்துரை!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் புதன்கிழமை மாவட்ட தொழில் மையம் சார்பில் நடைபெற்ற புதிதாக சுயதொழில் செய்வோருக்கான பயனாளிகளை தேர்வு செய்யும் நேர்காணலில் 88 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி, மாவட்டத் தொழில் மைய மேலாளர் ப.மாரியம்மாள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கே.எஸ்.சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 118 பேர் பங்கேற்ற இந்த நேர்முகத் தேர்வில் தொழில் முனைவோரின் கல்வித் தகுதி, தொழில்களின் சாத்தியக் கூறுகள், சந்தை வாய்ப்புகள் ஆகியவை பரிசீலிக்கப்பட்டன. புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் புதிதாக சுயதொழில் தொடங்க 88 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஹாலோ பிளாக் தயாரித்தல், ஆயத்த ஆடைகள் தயாரித்தல், உணவுப் பொருள் உற்பத்தி, பெயிண்ட் தயாரித்தல், கயிறு தயாரித்தல் உள்பட பல்வேறு தொழில்களை புதிதாக செய்ய பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 88 பயனாளிகளுக்கும் ரூ.97.51 லட்சம் மதிப்பிலான அரசு மானியத்துடன் ரூ.375.85 லட்சம் வங்கி கடனுதவி பெற பரிந்துரை செய்யப்பட்டது.

நேர்காணலின் போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் ஆர்.சியாமளாநாதன், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் உதவி இயக்குநர் பாரதி ஆகியோர் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

பள்ளி வளாகங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை உடனே அகற்ற வேண்டும்!!

No comments :
பள்ளி வளாகங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை உடனே அகற்ற வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.ஜெயக்கண்ணு தெரிவித்தார்.

பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது:

மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சீமைக் கருவேல மரங்களை உடனே அகற்ற வேண்டும். வரும் மார்ச் மாதத்தில் நடைபெறும் 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில் அனைத்து பள்ளி தேர்வர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும்.


பள்ளிகளில் குடியரசு தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும். ஜனவரி 25 ஆம் தேதி நடைபெற உள்ள தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தினத்தையொட்டி மாணவர்களிடையே போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும். மேலும் என்.எஸ்.எஸ். மற்றும் என்.சி.சி. மாணவர்களை வைத்து முக்கிய வீதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை நடத்த வேண்டும்  என்றார். 

கூட்டத்துக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் ராமர், தெ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் மாவட்ட சாரண- சாரணிய இயக்க செயலர் சிவா வரவேற்றார். இதனைத் தொடர்ந்து சாரணர் பயிற்சியில் கலந்து கொண்ட 140 சாரண- சாரணியர் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளி துணை ஆய்வாளர்கள் லோகமுருகன், ஆனந்த், பள்ளி தலைமையாசிரியர் எம்.ஜஸ்டின்ஞானசேகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட சாரணர் இயக்கச் செயலர் க.கணபதி நன்றி கூறினார்.


 இக்கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)