முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, January 8, 2017

விவசாயிகளுக்கு விரைந்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர்

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைந்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன் தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில் உள்ள சாம்பக்குளம், அரியக்குடி, சத்திரக்குடி, நல்லாங்குடி உள்பட பல்வேறு கிராமங்களில் வயல்களை சனிக்கிழமை அமைச்சர் எம்.மணிகண்டன் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

இந்த குழுவில் இடம் பெற்றுள்ள அரசு முதன்மைச் செயலரும், மாவட்ட கணிப்பாய்வு அதிகாரியுமான சந்திரகாந்த்.பி.காம்ப்ளே, கருணாஸ் எம்.எல்.ஏ., மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன், வேளாண்மை இணை இயக்குநர் அரிவாசகன் ஆகியோரும் வறட்சியை பார்வையிட்டனர்.

அப்போது அக்குழுவினரிடம் விவசாயிகள் முறையிட்டனர். இதற்கு முன் இதுபோன்ற வறட்சி ஏற்பட்டதில்லை. வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. மிளகாய் பயிர் சாகுபடி செய்திருந்த விவசாயி ஒவ்வொருவருக்கும் ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரையும், நெற்பயிராக இருந்தால் ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரையும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே அரசு நிவாரணம் வழங்கினால் மட்டுமே நாங்கள் வறுமையிலிருந்து மீள முடியும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, அமைச்சர் எம்.மணிகண்டன், விவசாயிகளிடம் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் முற்றிலுமாகவே விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 93 சதவிகித பாதிப்பு இருக்கிறது. பயிர்க் காப்பீடு செய்துள்ளவர்களுக்குரிய நிவாரணமும், வறட்சி நிவாரணமும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அதே போல் காப்பீடு செய்யாதவர்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வறட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் ஜனவரி 9 ஆம் தேதிக்குள் கிராம நிர்வாக அலுவலர்களை சந்தித்து வறட்சி விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து மிக விரைவில் வறட்சி நிவாரணம் பெற்றுக் கொடுக்கப்படும். மத்திய அரசுக்கும் அறிக்கை சமர்ப்பித்து அவர்கள் வழங்கும் நிவாரணத் தொகையும் வழங்கப்படும்.

100 நாள்கள் வேலைத் திட்டத்தினை 150 நாள்களாக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அமைச்சருடன் முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், அதிமுக மாவட்டச் செயலர் எம்.ஏ.முனியசாமி, ராமநாதபுரம் தொகுதி சட்டப் பேரவை இணைச் செயலர் தஞ்சி.சுரேஷ், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவர் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)