முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, April 24, 2017

நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் ராமநாதபுர மாவட்டம்!!

No comments :
தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் அனைத்து பகுதிகளிலும் கடும் வறட்சி நிலவி வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை தண்ணீரும், பருவமழையும் இல்லாமல் போனதால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. இதன்காரணமாக மக்கள் குடிநீருக்காகவும், அத்தியாவசிய தேவைகளுக்கும் தண்ணீரை தேடி அலையாய் அலைந்து கொண்டிருக்கின்றனர்.

இதனால் மாவட்ட மக்களின் தண்ணீருக்கான தேவையை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கும் வேளையில், தண்ணீர் தேவைக்கான கோரிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது. தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளதால் இருக்கின்ற நீர்ஆதாரத்தினை தற்காத்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

எதிர்கால தேவைக்காக மட்டுமல்லாமல் தற்போதைய தேவைக்கும் தண்ணீரை பாதுகாக்க வேண்டிய எண்ணம் மக்களிடம் மேலோங்க வேண்டும். இதன்காரணமாக தற்போது கைகொடுத்து கொண்டிருக்கும் நீர்ஆதாரங்களை காப்பாற்ற மக்கள் குரல் கொடுக்க வேண்டும். நிலத்தடி நீர், நல்ல தண்ணீராக உள்ள பகுதி மக்கள் தங்களின் குடிநீர் தேவையை, நிலத்தடி நீரின் மூலம் நிறைவேற்றி கொள்கின்றனர்.

இந்தநிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சில தனியார் நிறுவனத்தினர், தங்களது நிலத்தில் உள்ள குடிநீரை மோட்டார் மூலம் எடுத்து விலைக்கு விற்பனை செய்து வருகின்றன. நாள் தோறும் விடிய விடிய 100–க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் தண்ணீர் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்தந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதோடு, தண்ணீரின் சுவையும் உப்புத் தன்மையாக மாறி வருகிறது.

எனவே தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்தி, நிலத்தடிநீர் ஆதாரத்தினை காக்க வேண்டும். 

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு!!

No comments :
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் குப்பைகள் நிறைந்து கிடப்பதாகவும், கழிப்பறை சுகாதாரமின்றி நோய்களை பரப்பி வருவதாகவும், பஸ் நிலைய பகுதி முழுவதும் ஆக்கிரமிப்புகள் நிறைந்து பயணிகள் நிற்க முடியாத அளவிற்கு நெருக்கடியாக உள்ளதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன.

அதைத்தொடர்ந்து அமைச்சர் டாக்டர் மணிகண்டன் புதிய பஸ் நிலையத்திற்கு திடீரென சென்று பார்வையிட்டு அதிரடி சோதனை நடத்தினார்.

அப்போது பஸ் நிலைய பகுதிகளில் உள்ள கழிப்பறைகளை சுத்தமாகவும், சுகதாரமானதாகவும் பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பஸ் நிலைய வளாக பகுதிகளில் ஆங்காங்கே நிறைந்து காணப்பட்ட குப்பைகளை உடனுக்குடன் காலைமாலை என இருவேளைகளிலும் அகற்ற உத்தரவிட்டார். பஸ் நிலைய பகுதிகளில் உள்ள நடைபாதையை கடை உரிமையாளர்கள் ஆக்கிரமித்து பார்த்து, அவர்களிடம் பயணிகளுக்கு இடையூறு இல்லாதவாறு உடனே அகற்ற கேட்டுக்கொண்டார்.


பின்னர் பஸ் நிலையத்தின் பின்பகுதி முழுவதும் குப்பைகள் நிறைந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அதனை உடனடியாக அகற்றி சுத்தமாக பராமரிக்க உத்தரவிட்டார். மேலும், பஸ் நிலைய வாகன நிறுத்துமிடம் முறையான பராமரிப்பின்றி இருப்பதை கண்ட அமைச்சர் அதை சீரமைக்க திட்டம் தயாரித்து அனுப்புமாறும், தேவையான நிதி பெற்று பஸ் நிலைய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உதவி செய்வதாக தெரிவித்தார்.


வெயில் நேரம் என்பதால் பயணிகளின் தண்ணீர் தேவையை நிறைவேற்றும் வகையில் கூடுதல் இடங்களில் தண்ணீர் வசதி ஏற்பாடு செய்யவும், தமிழக அரசின் சிறப்பு திட்டமாக அம்மா குடிநீர், பஸ் நிலைய பகுதியில் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது நகரசபை ஆணையாளர் அப்துல்ரசீத் மற்றும் நகரசபை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)